Monday, October 23, 2006

சிங்கள அரசின் இராணுவத்தோல்விகளுக்கு காரணம் என்ன?

இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க புலிகள் பேச்சுக்கு சம்மதித்த அதே சமயம், போர்முனைப்பு கொண்டு அலையும் சிங்கள அரசையும் நிபந்தனையற்ற பேச்சுக்கு அழைத்துவரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் தவறாகாது. இதைத்தான் ஒக்ரோபர் 11 ஆம் நாளுக்குப் பின்னர் நிகழும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

சேர்பிய அரசை பொஸ்னியாவுடன் பேசவைத்து அவர்களுக்குரிய உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காக நேட்டோப் படைகள் எவ்வாறு தங்கள் படை நடவடிக்கைகளை தொடர்ந்தார்களோ, அதே போன்றதொரு நிலையில் தான் புலிகள் உள்ளார்கள்.

அதாவது அரசை பேச்சு மேசைக்கு கொண்டுவர மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம், ஆனால் அங்கு மேற்குலகம் பொஸ்னியர்களுக்கு பக்கபலமாக நின்றது. புலிகளைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் தான் அவர்களுக்குப் பலம்.

சிங்கள அரசின் படைபலத்தின் முற்றான வீழ்ச்சி தான் நிரந்தர சமாதானத்தை கொண்டுவரும். இது கடந்த 58 வருட காலத்தில் தமிழ் மக்கள் கண்ட உண்மை.

படை பலத்தின் வீழ்ச்சிக்கு கடற்படையின் முடக்கம் அவசியம். இன்று யாழ். குடாவை இராணுவம் தக்க வைப்பதும் சிங்கள கடற்படையின் இயங்குதன்மையால் தான். ஆனால் சிங்கள கடற்படை இந்த வருடத்தில் சந்தித்த இழப்புக்கள் கணிசமானவை. இந்த வருடத்தில் 04 டோராக்களை (ஆயுதங்கள், ரடார்களுடன் ஓரு படகின் பெறுமதி 500 மில்லியன் ரூபாய்க்கள்) இழந்ததுடன் பெருமளவிலான பயிற்றப்பட்ட மாலுமிகளையும் இழந்திருந்தது.

எனினும் கடற்படையின் முக்கியத்துவத்தையும், திருமலைத் துறைமுகத்தின் அவசியத்தையும் உணர்ந்த சிங்கள அரசு படை நடவடிக்கை மூலம் சம்பூரை கைப்பற்றியது. இது தான் புலிகளின் பலத்தை சிங்களப்படை உரசிப்பார்த்த முக்கிய நிகழ்வு. எந்த கடற்படையை பாதுகாக்க சம்பூரை கைப்பற்றினார்களோ அதே கடற்படையின் பேரழிவு ஆரம்பமாகியது.

16.10.06 அன்று ஹபரணையில் சிங்கள கடற்படையின் தொடரணி ஓய்வெடுக்கும் மையம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் சொற்ப நேரத்தில் சிங்கள கடற்படை சந்தித்த பேரழிவாக வரலாற்றில் பதிவாகிவிட்டது. இங்கு ஆச்சா¢யமான விடயம் என்வெனில், பாதுகாப்புக் காரணங்களுக்காக ஓய்வெடுக்கும் பகுதிகள் அடிக்கடி மாற்றப்படுவதுண்டு. எது ஓய்வு எடுக்கும் பகுதியென பயணமாவதற்கு முதல்நாள் தான் திருமலை கடற்படைத்தள கடற்படைத்தளபதி (கிழக்கு கட்டளைப்பீடம்) முடிவெடுப்பார். ஆனால் இந்த தகவல் தாக்குதலாளிகளுக்கு எப்படிததெரியும் என்பது தான் சிங்கள அரசுக்கு புரியாத புதிராக உள்ளது.

தமது தொலைதொடர்பு உரையாடல்கள் மிக நவீன உபகரணங்கள் மூலம் ஓட்டுகேட்கப்பட்டதா?

கருணா கும்பலின் மூலம் தகவல் அறியப்பட்டதா?

உள்வீட்டு வேலையா? என்பது தான் சிங்களப்படைகளை பீதியில் ஆழ்த்தும் கேள்விகள்.
இந்த தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து கடற்படை மீளமுன்னர் சிங்கள கடற்படையின் தென்பகுதி கட்டளைபீடம் மீது அதிரடித்தாக்குதல் இடியாக வீழ்ந்துள்ளது.

சிங்கள கடற்படையானது இலங்கைத்தீவின் 21,700 கி.மீ நீளமான கடற்கரை பிரதேசத்தையும் நடைபெறும் போரில் அதன் முக்கியத்துவத்தையும் கருதி இலங்கையை சூழ 05 கட்டளைபீடங்களை அமைத்துள்ளது.

கிழக்கு கட்டளைப்பீடம்: இது திருமலை, நிலாவெளி, திரியாய் தளங்களை உள்ளடக்கியது.

வடமத்திய கட்டளைப்பீடம்: இது மன்னார், தலைமன்னார், புனேவா தளங்களை உள்ளடக்கியது.

வடக்கு கட்டளைப்பீடம்: இது காரைநகர், காங்கேசன்துறை, மாதகல், ஊர்காவற்துறை, மண்டைதீவு, புங்குடுதீவு தளங்களை உள்ளடக்கியது.

தெற்கு கட்டளைப்பீடம்: இது காலி, தங்காலை, பூசா தளங்களை உள்ளடக்கியது.

மேற்கு கட்டளைப்பீடம்: இது கொழும்பு, வெலிசறை, கற்பிட்டி தளங்களை உள்ளடக்கியது.
தென்பகுதி கட்டளைப்பீடத்தை பொறுத்தவரை கடற்படையின் துறைமுகமும் பாரிய தளமும் உள்ள பகுதி காலியாகும்.

இந்த துறைமுகத்தை 'தக்சினா" துறைமுகம் என அழைப்பதுண்டு. இரண்டாவது ஈழப்போரில் கடற்படை அழிவுகளை சந்திக்க ஆரம்பித்த போது சிங்கள தேசத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்குடன் காலித்துறைமுகம் பாரிய கடற்படை தளமாக்கப்பட்டது. 1996 இல் புலிகளால் கொழும்பு துறைமுகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட விசேட படை நடவடிக்கையை தொடர்ந்து காலி துறைமுகத்தின் பயன்பாடு மேலும் அதிகரித்தது.

கடற்படையின் பாரிய கப்பல்கள் இங்கு நகர்த்தப்பட்டன. கடற்படைக்குரிய ஆயுத தளபாடங்கள், ஏனைய பொருட்கள் என்பன இங்கு சேமிக்கப்படுவதுடன் இங்கு இருந்தே மற்றைய தளங்களுக்கு விநியோகமும் செய்யப்படுகின்றன. சில சர்வதேச கப்பல்கள் கூட பாதுகாப்புக்கருதி இங்கு நிறுத்தி வைக்கப்பட்டே பின்னர் கொழும்புத்துறைமுகத்திற்கு அனுப்பப்படுவதுண்டு.

திருமலை, மன்னார், கொழும்பு, காங்கேசன்துறை என நான்கு கட்டளைப்பீடங்களும் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய போது காலித்துறைமுகத்தின் அவசியம் அதிகரித்தது. எனவே தான் ஆழிப்பேரலையின் போது இத்துறைமுகம் பாரிய அழிவைச்சந்தித்த சமயம் இந்தியாவின் உதவியுடன் அவசர அவசரமாக சிங்கள அரசு அதை புனரமைத்தது. அப்போது அங்கு தரித்து நின்ற 'பராக்கிரமபாகு" கப்பல் மூழ்கிப்போனதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

காலித்துறைமுகத்தின் பாதுகாப்பின் அனுகூலமாக அதைச் சுற்றியுள்ள இனவெறி கொண்ட சிங்கள மக்கள், ஆழமான இந்து சமுத்திரம், கடற்புலிகளின் கற்பிட்டி, முல்லைத்தீவு தளங்களின் தூரம் போன்றவற்றை சிங்களப்படை கருதியது. ஆனால் காற்றுப்புக முடியாத முடியாத இடங்களுக்கெல்லாம் புலி நுழைவது தானே வழமை. 18.10 2006 காலை காலித்துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளானது. பாரிய வெடியோசைகளும், துப்பாக்கிச் சத்தங்களும் இரண்டரை மணிநேரம் தொடர்ந்ததுடன். புகை மண்டலமும் விண்ணை முட்டியது.

ஆரம்பகட்டத் தகவல்களின் படி ஒரு சரக்கு கப்பலும், டோரா ஒன்றும், இரண்டு நீரூந்து விசைப்படகுகளும் அழிந்து போனதுடன் தளத்திற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

சிங்கள அரசு தகவல்களை மூடிமறைத்தாலும் தளத்தில் இருந்து எழுந்த புகைமண்டலத்தை மறைக்க முடியவில்லை. உடுத்த உடைகளுடன் ஓடிய கடற்படை சிப்பாய்களை கண்ணுற்ற மக்கள் பீதியடைந்து வீடுகளுக்குள் முடங்கியதும், இரண்டு மணிநேரம் காலி நகரை அதிரவைத்த வெடியோசைகளும் தாக்குதலின் உக்கிரத்தை சொல்லியுள்ளது.

அதாவது சிங்கள தேசத்தின் அனைத்துப் பகுதிகளும் தாக்குதல் எல்லைக்குள் வீழ்ந்துள்ளதாகவே கொள்ளமுடியும். 'எங்களுக்கு அவலத்தை தந்துவிட்டு எந்த ஒரு மூலையிலும் நீ நிம்மதியாக இருக்கமுடியாது" என்பது தான் இந்த தாக்குதல் எதிரிக்கு உணர்த்தும் ஒரு வாரச்செய்தி. அதாவது சிங்கள அரசின் கடற்படையின் ஐந்து கட்டளைப்பீடங்களும் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின்றன என்பதும் இங்கு முக்கியமானது.

அரசைப் பொறுத்த வரையில் அண்மைய தாக்குதல்கள் பா¡¢ய பொருளதார உயிர் அழிவுகளை கொடுத்ததுடன், படையினரினதும், சிங்கள மக்களினதும் மனவுறுதியையும் சிதைத்துள்ளது. உடைந்து போகும் படையினரது மனவுறுதி, சர்வதேசத்தில் ஏற்படும் அவமானம், சிங்கள மக்களிடம் போர் தொடர்பாக மாற்றமடையப்போகும் கருத்துக்கள் என்பவற்றை எண்ணியே சிங்கள அரசு தற்போதைய தாக்குதல் செய்திகளை இருட்டடிப்புச் செய்ய முனைகின்றது.

கடந்த இரண்டு வாரங்களில் சிங்கள அரசின் முப்படைகளும் சந்தித்த பொருளாதார இழப்புக்கள் மிகப் பாரியவை. ஏறத்தாழ 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஆயுதங்களை முகமாலையில் இராணுவம் இழந்த பின்னர், 220 மில்லியன் ரூபாய் பெறுமதியான கிபீர் விமானத்தை விமானப்படை நீர்கொழும்பில் இழந்தது. தற்போது கடற்படையின் இழப்பும் பல நூறு மில்லியன் ரூபாய்க்களை தாண்டிவிடும் என்பதுடன் உல்லாசப்பயணத்துறை அன்னிய முதலீடு என்பவற்றிலும் காலித்துறைமுக தாக்குதல் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆள், ஆயுத, பொருளாதர இழப்புக்களுக்கு அப்பால் மகிந்தவின் அரசியல் காய் நகர்த்தல்களும், மகிந்த சிந்தனையும் தென்னிலங்கையில் கேலிப் பொருளாகப்போகின்றன. தமிழ் மக்களின் மீதான இன அழிப்பு எனும் ஆயுதத்தை தனது அரசியல் அபிலாசைகளுக்காக கையில் எடுத்த மகிந்த தற்போது அதனால் தாக்குண்டு செயலிழந்து நிற்கிறார். இது ஒன்றும் புதியன அல்ல. சந்தி¡¢க்கா 1999 இல் அரசியல் அரங்கில் வெறுங்கையுடன் நின்றதும் அதனால் தான். ஆனால் அந்த வரலாற்றை எல்லாம் மகிந்த மறந்துவிட்டார் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

2001 இல் அந்தரத்தில் தொங்கிய இராணுவச் சமவலு தற்போது புலிகளின் பக்கம் சரிந்துவிட்டதாகவே தோன்றுகின்றது. இதற்கு ஆதாரமாக பின்வரும் சில கருத்துக்களை முன்வைக்கலாம்.

2001 இல் 72 மணிநேர தீச்சுவாலை நடவடிக்கையில் சந்தித்த இழப்பின் அரைப்பங்கு படையினரை இரண்டரை மணிச்சமரில் முகமாலையில் இழந்ததுடன், தீச்சுவாலையில் இழந்ததை விட அதிகளவு கவச வாகனங்களையும்; சிங்களப்படை இழந்துள்ளது.

அண்மைய தாக்குதல்கள் தொடர்பான அரசின் புலனாய்வுப் பிரிவு சந்தித்த தோல்விகள் (புலனாய்வுப்பிரிவின் முடக்கம்).

புலிகளின் பின்னால் அணிதிரண்ட மக்கள் படையும், போர் எழுச்சி பெற்ற தேசமும்.

படிப்படியாக செயலிழந்து போகும் கடற்படையும் அதன் இயங்கு தன்மையும்.

இலங்கைத்தீவு முழுவதும் விரிந்து போயுள்ள போர் அபாயம்.

மிகவும் வலுவான புலிகளின் விசேட படையணிகளும், வலுக்குன்றிப்போன அரசின் 53 ஆவது படையணியும்.
சிங்கள அரசின் தொடர்ச்சியான இராணுவத் தோல்விகளுக்கும் புலிகளின் இராணுவ வல்லமைக்கும் காரணம் என்ன? ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன போரியல் மேதையான சன் சூ (Sun Tzu) கூறிய கருத்து தான் இக்கோள்விக்குரிய பதிலாக அமையும்.

அதாவது,

'உன்னையும் எதிரியையும் நீ அறிந்திருந்தால் நூறு சமர்களிலும்; நீ பயமின்றி வெற்றியீட்டலாம்"

'உன்னை மட்டுமே நீ அறிந்திருந்தால்; ஒவ்வொரு வெற்றிக்கும் நீ அதிகம் இழந்திருப்பாய்"

'உன்னையும் எதிரியையும் நீ அறியாவிட்டால் ஒவ்வொரு சமரையும் நீ இழந்து விடுவாய்"

இந்த அடிப்படை போரியல் தத்துவத்தை உணராத சிங்கள தேசத்திற்கு மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கத்தான் போகின்றன.
-அருஸ் (வேல்ஸ்)-

நன்றி: தமிழ்நாதம்

1 பின்னூட்டங்கள்:

said...

நல்லதொரு கட்டுரை, இணைத்தமைக்கு நன்றிகள்.