Sunday, June 25, 2006

கெப்பிற்றிக்கொல்லாவவில் நடந்தது என்ன?

கெப்பிற்றிக்கொல்லாவவில் நடந்தது என்ன?
அம்பலமாகி வரும் கொடூர சதிச்செயல்கள்...

-தாயகத்திலிருந்து பூபாளன்-

அவசர அவசரமாக மிகப் பெரும் கொடூர சதிச்செயல் ஒன்று கடந்த 15.06.06 அன்று விடிகாலைப்பொழுதில் அரங்கேற்றப்பட்டுள்ளது. அன்று காலை 7.50 மணியளவில் அனுராதபுரம் மாவட்டம் கெப்பிற்றிக்கொல்லாவ பிரதேசத்தில் வைத்து பயணிகள் பேரூந்தொன்று கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.

வவுனியாவுக்கு தென்கிழக்கே 23 ஆம் தொலைவில் இடம்பெற்ற இந்த கொடூர சதிச்செயலில் பதினைந்து பச்சிளம் பாலகர் உட்பட 65 அப்பாவிச்சிங்கள மக்கள் உடல் சிதறிப் பலியாகியதுடன் 80-க்கு மேற்பட்டோர் கடும் காயங்களுக்கும் உள்ளாகினர்.

மிகத் துல்லியமான முறையில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட கோழைத்தனமான இச்செயலின் சூத்திரதாரிகள் யார்? இவர்களின் நோக்கம் என்ன? இதை இவ்வளவு அவசரப்பட்டு அரங்கேற்றியதற்கான காரணம் என்ன? என்பவை பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கை இனப்பிரச்சனையானது இன்று சர்வதேசமயப்பட்டு ஒரு உச்சநிலையை அடைந்துள்ளது. இந்த இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் முயற்சி முதலில் உள்நாட்டளவிலேயே மேற்கொள்ளப்பட்டது. அம்முயற்சிகள் தோல்வியடையவே அது ஆசியப் பிராந்திய அளவில் விரிவாக்கம் பெற்றது. அம்முயற்சியும் பயனளிக்காத நிலையில் அது சர்வதேச மட்டத்திற்கு வியாபித்து தற்போது அங்கும்; கூட தோல்வியடைந்த நிலையிலேயே உள்ளது.

இந்த தீர்வு முயற்சிகளின் தோல்விகள் வெளிப்படையான பார்வைக்கு தமிழர் தரப்புக்கு பாதகமாக இருப்பது போல் தோன்றினாலும், சற்று ஆழ்ந்து நோக்கின், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் நியாயப்பாட்டை சர்வதேசம் புரிந்து கொண்டுள்ளது என்பதும், அதனால்; சிறிலங்கா அரசதரப்பும் படைத்தரப்பும் பீதியடைந்துள்ளது என்பதுமே நிதர்சனம் என்பது புரியும்.

'ஒரு அடையாளத்தை இல்லாமல் செய்ய அல்லது சிறுமைப்படுத்த அந்த அடையாளத்தை விட பன்மடங்கு பொ¢தான அடையாளத்தை இட்டால் முன்னர் இட்ட அடையாளம் சிறிதாகி அல்லது இல்லாமல் போய்விடும்" என்றதொரு கோட்பாடு உண்டு.

கால் நூற்றாண்டைத் தாண்டிய தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை இராணுவ, அரசியல், இராஜதந்திர ரீதியாக சிறிலங்கா அரசால் வெற்றிகொள்ள முடியவில்லை.

அரசியல் இராணுவ ரீதியாக ஏற்கனவே வெற்றிபெற்றுவிட்ட தமிழர்தரப்பு 5 வருடங்களை தொட்டு நிற்கும் பொறுமை காப்பு நிலைப்பாட்டால் சர்வதேச ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் அரசுக்கு பெரும் தலைவலியை எற்படுத்தி வருகின்றது.

தமிழர் தரப்பை சீற்றமடைய செய்து போருக்குள் இழுத்துவர சிறிலங்கா அரசு எடுத்த பல்வேறு தந்திரங்களையும் தமிழர் தரப்பினர் சாதூ¢யமான முறையில் முறியடித்தும் விட்டனர்.

தமிழர் தரப்பின் இந்த முறியடிப்புச் செயற்பாட்டால் கதிகலங்கிப்போன, கடும் போக்குவாத சிங்கள பெளத்த சிறிலங்கா அரசு, சதிநாசகார செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. அவர்களின் அண்மைக்கால கொலைவெறிச் செயல்கள் இதனையே எடுத்துக் காட்டின.

இந்த வகையில், துரதிர்ஸ்டவசமாக நிகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிறிலங்கா அடக்குமுறையாளர்கள் இந்த சதிநாச நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வந்தனர்.

இந்தச் செயற்பாட்டின் தொடர் நடவடிக்கையாகவே அண்மைக்காலமாக இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் தமிழர் தரப்பினர் மீது மிகப்பெரும் படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அல்லைப்பிட்டியில் இரண்டு பச்சிளம் பாலகர்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரின் படுகொலை, வங்காலையில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வா¢ன் படுகொலை உள்ளிட்ட, வடக்கு - கிழக்கில் தினம், தினம் இடம்பெறும் நூற்றுக்கணக்கான அப்பாவித்தமிழ் மக்களின் படுகொலைகள், கோப்பாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழிகள், வீதிகள், வீடுகள் பொது இடங்கள் தோறும் இடம்பெறும் கைதுகள், காணாமல் போதல்கள் என்பன இதில் அடங்குகின்றன.

இது ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் ஆழ ஊடுருவும் படையினராலும், இராணுவ ஒட்டுக்குழுக்களாலும் நடத்தப்படும் கொலை வெறித் தாக்குதல்களும் அதில் ஒரு அம்சமாகவே மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறாக சிறிலங்கா அரசாலும் படைத்தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட கொலை வெறிச்சதி நடவடிக்கைகள் சர்வதேச சமாதான முயற்சிகளில் மேலும் சிக்கல்களை உருவாக்கின.

இந்த நிலையிலேயே போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நோர்வேத் தரப்பால் ஒஸ்லோவில் ஒழுங்கு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு அரச மற்றும் புலிகள் தரப்பிற்கு நோர்வே அழைப்பும் விடுத்திருந்தது.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட தமிழர் தரப்பு அக்கலந்துரையாடலில் சிறிலங்கா அரசின் இந்த சதிச் செயல்களை அம்பலமாக்கியது.

இந்த நிலையில் உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் சிறிலங்கா அரசின் இந்த கொலை வெறிச் செயல்களை, கவன ஈர்ப்பு மற்றும் எழுச்சிப் போராட்டங்கள் மூலம் அம்பலப்படுத்தினர். இதனால் சர்வதேச சமூகம் ஓரளவு விழிப்புப்பெற்றது. இதனால் சிறிலங்கா தரப்பின் முகத்திரை படிப்படியாக கிழிபடும் நிலைதோன்றியது.

அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கெதிராக சிறிலங்கா அரசு மீதும், படைத்தரப்பு மீதும், துணை ஆயுதக்குழுக்களாகச் செயற்படும் ஒட்டுக்குழுக்கள் மீதும் சர்வதேச சமூகமும், மனித உரிமை அமைப்புக்களும், போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவும் மற்றும் பல நிறுவனங்களும் கண்டனக் கணைகளை வீசத் தொடங்கின. அத்துடன் அரசுமீது சில அழுத்தங்களையும் பிரயோகிக்கலாயினர்.

இந்த இடத்தில் மகிந்த ராஜபக்ச அரசு சந்தித்துள்ள இறுக்க நிலை பற்றியும் இதற்கான காரணங்கள் பற்றியும் அண்மையில் ஆங்கில வார இதழ் ஒன்றில் ஓர் சிங்கள ஊடகவியலாளர் ஆதங்கப்பட்டு எழுதியிருப்பதை குறிப்பிடுதல் பொருத்தமாயிருக்கும். அதில் அவர் மகிந்த அரசின் அண்மைக்கால செயற்பாடுகள், அபிவிருத்திக்கான சர்வதேச சமூகத்தின் நிதியுதவி கூட நிறுத்தப்படுமளவிற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி அவ்வாறானதொரு நெருக்கடி நிலைக்கு கடந்த காலங்களில் சிறிலங்காவை ஆட்சி செய்த எந்த ஒரு அரசும் முகங்கொடுக்கவில்லை என்றும் அச்சுறுத்தியுள்ளார். இதற்கான காரணங்களை அவர் விளக்குகையில் மேலோட்டமான பார்வைக்கு மகிந்தரின் JVP, JHU ஆகிய கடும் போக்குவாதிகளுடனான கூட்டுத் தென்பட்டாலும் அதை விட முக்கியமாக அரச தரப்பினரின் தமிழர் மீதான பழிவாங்கும் தாக்குதலை குறிப்பிடுகின்றார்.

புலிகள் ஒரு தாக்குதலை நடாத்தினால், அந்த வன்முறைக்கு பாதிப்பிற்குள்ளான தரப்பாக எம்மைக்காட்டி சர்வதேச அனுதாபத்தை பெறல்வேண்டும். ஆனால் அரசோ உடனடியாக பழிவாங்கும் தாக்குதல்களை மேற்கொண்டு பொதுமக்களை கொலை செய்து சர்வதேச ஆதரவை இழந்துள்ளதாகவும் சொல்கிறார்.

இந்நிலையில் தவறாக வழி காட்டப்பட்ட அரச ஊடக மூலோபாயமும் அந்த சர்வதேச சமூகத்தால் கவனத்தில் எடுக்கப்படவில்லை. குறிப்பாக புலிகளின் அணியினர் என்று சந்தேகிக்கப்பட்டவர்களால் கொல்லப்பட்ட சிங்களவர்களின் கோரக்காட்சிகளை விரைந்து வெளியிடும் ஊடகங்கள் அதே மாதிரி கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களின் படங்களை முழுமையாக இருட்டடிப்புச் செய்தன.

விமானப்படையினர், காயமடைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருப்பவர்களை வைத்தியசாலைக்கு ஏற்றுவதை விட ஊடகவியலாளர்களின் பயணங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தனர்.

உதாரணத்திற்கு வெலிக்கந்தை மற்றும் கெப்பிட்டிக்கொல்லாவவில் சிங்களவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின், உள்ளுர் மற்றும் வெளிநாட்டு செய்தி ஊடக ஆளணியினரை உலங்கு வானூர்திகள் மூலம் அவ்விடங்களுக்கு விரைந்து அனுப்பிய அரசு, அல்லைப்பிட்டி, வங்காலை மற்றும் திருமலை ஆகிய இடங்களில் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட படங்களை முழுமையாக இருட்டடிப்புச் செய்தது.

இந்த அசட்டை தமிழ் பொதுமக்களின் கொலைகள், அரசின் ஆதரவு மற்றும் அங்கீகாரத்துடன் செய்யப்படாவிட்டாலும் குறைந்தது அந்த நிகழ்வு நடைபெற்ற பின்பாவது அரசின் மறைமுக அங்கீகாரமாவது அதற்கு இருந்தது என்றும், துணை இராணுவக் குழுக்களுடன் அரச படைகளுக்கு பங்காளித்துவம் இருக்கிறது என்ற அந்த SLMM அறிக்கைகள், அரசின் நடத்தையை கணக்கில் எடுக்கையில் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க தன்மையை மேலும் பெற்றன என்ற எண்ணத்தை அந்தப் புத்திக்கூர்மையுள்ள சர்வதேச சமூகம் மத்தியில் ஏற்படுத்தியது.

வன்செயல்கள் புரிந்தவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்த தவறியமை, கருணா குழு மற்றும் EPDP யின் நடவடிக்கைகளை ஒப்புக்கொள்ள மறுத்தமை ஆகியன பாதகமான ஒரு நிலைமையை மேலும் மோசமாக்கியது.

மேலும் கிளைமோர்த் தாக்குதல்களைத் தொடர்ந்து சம்பூர் மற்றும் ஏனைய பகுதிகள் மீது வான் தாக்குதல்களை நடத்தியமை அரசின் வாதத்துக்கு உதவியாக இருக்கவில்லை. ஏனென்றால் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்ட போது அவ்வாறான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமையாலாகும்.

அவ்வாறான ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறை மூலம் தன்னறிவின்றி அரசு புலிகளுக்கு அனுகூலமாகவே செயற்படவுள்ளது. சிங்களவர்கள் கொல்லப்பட்ட போது மட்டுமே ராஜபக்ச நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது என்று அது வெளிக்காட்டியதுடன், அரசைப் பொறுத்த வரையில் குறிப்பாக புலிகளை மட்டுமல்லாது பொதுவாகத் தமிழர்களும் எதிரி என்ற உணர்வை அது உருவாக்கியது என அதில் அவர் மகிந்த நிர்வாகத்தை குறை கூறி சிங்களத் தரப்பு சார்பாக தனது ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார்.

சம்பவத்தை பார்வையிட்ட ஜனாதிபதி நாட்டு மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்து விட்டு, தான் மட்டும் அமைதியை காக்க முடியாதவரானார். உடனடியாகவே இவர் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் விமானத் தாக்குதல்களை நடாத்துமாறு விமானப் படையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

மேற்படி ஊடகவியலாளர் சொன்னது போன்ற சிறிலங்கா அரசின் செயற்பாட்டால் நிலைமை அரசிற்கு பாதகமாகவே இருந்தன. இதனால் முதலில் மேற்படி கொலைகளுக்கு தாம் பொறுப்பல்ல என சாதித்து வந்த அரசால் தொடர்ந்தும் அதை தக்கவைக்க முடியவில்லை. சிறிலங்கா நீதியாளர்களிடமே பெரும்பாலான கொலைகளுக்கான தடயங்களும் சாட்சியங்களும் சிக்கின. அதன் மூலம் அரசுப்படைகளும் ஒட்டுக் குழுக்களும் இணைந்தே பெரும்பாலான கொலைகளையும் மனித உ¡¢மை மீறல்களையும் மேற்கொண்டமை நிரூபணமாகத் தொடங்கின.

இதனால் சிறிலங்கா அரசும் படைத்தரப்பும் மேலும் குழப்பமடைந்தன. தமது சதிச் செயல்கள் அம்பலமாவதை சகித்து கொள்ள முடியாத நிலையில் அவர்கள் புதிதாக மிகப்பெரும் கொடூர சதித்திட்டத்தை வகுத்தனர்.
'ஒரு அடையாளத்தை இல்லாமல் செய்ய அல்லது சிறுமைப்படுத்த அந்த அடையாளத்தை விட பன்மடங்கு பெரிதான அடையாளத்தை இட்டால் முன்னர் இட்ட அடையாளம் சிறிதாகி அல்லது இல்லாமல் போய்விடும்" என்றதொரு கோட்பாடு உண்டு.
இந்த கோட்பாட்டை கையில் எடுத்த அரசும் படைத்தரப்பும் அதனை கெப்பிற்றிக்கொல்லாவவில் வைத்து, ஒரே கல்லில் இரு மாங்காய் வீழ்த்தும் நோக்குடன் இந்த சதித் திட்டத்தை நிறைவேற்றியுள்ளன.

சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டாலேயே சர்வதேசத்தின் கவனத்தை உடனடியாக திசைதிருப்ப முடியும் என கருதிய சிங்கள அரசு அதற்காக தன் இனத்தையே பலிக்கடாவாக்க துணிந்தது. அதேநேரம் சிங்கள மக்கள் கொல்லப்பட்டாலேயே அதற்கான முழுப்பழியையும் விடுதலைப் புலிகள் மீது சுமத்தி தமிழர் தரப்பிற்கு சர்வதேச அளவில் அபகீர்த்தியை ஏற்படுத்தலாம் என நினைத்தனர்.

நினைத்ததை செயலாக்கும் பணியை மிக இரகசியமான முறையில் இராணுவப் புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தது. இராணுவப் புலனாய்வுத்துறையும், வழமைபோல் துணை ஆயுத ஒட்டுக் குழுக்களுடன் இணைந்து இந்த கொடூரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி விட்டு அதற்கான முழுப்பழியையும் விடுதலைப் புலிகள் மீது சுமத்தியுமுள்ளனர்.

இங்கே ஒரு சிலர் சிங்கள இராணுவம் தம் இனத்தையே கொன்றது என்பதை ஏற்க முடியாது என கூறுகிறார்கள். இவர்கள் ஒன்றை நன்கு பூ¢ந்து கொள்ளவேண்டும். இதே சிங்கள இராணுவம் தான் JVP கிளர்ச்சியின் போது அறுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி சிங்கள இளைஞர் யுவதிகளை கொன்று புதைகுழியில் இட்டது.

இந்த நிலையில் இத்தாக்குதலை அரசும் இராணுவ புலனாய்வுத்துறையும் ஒட்டுக்குழுவினருமே இணைந்து செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் பல தற்போது கசியத் தொடங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதைவிட சம்பவ இடம் மற்றும் சம்பவத்தின் முன்பின்னான நிகழ்வுகள் என்பவற்றை நுணுகி ஆராய்வதனூடாகவும் சிலவற்றை உறுதிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த வகையில் சம்பவம் இடம்பெற்ற இடம் முற்றுமுழுதாக சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக உள்ளதுடன் முற்று முழுதாக சிங்கள மக்கள் வாழும் பகுதியாகவும் உள்ளது. இங்கே இராணுவத்தினர், பொலிஸார் மட்டுமன்றி சிங்கள மக்களை முற்றுமுழுதாக உள்ளடக்கிய ஊர்காவல்படையினரும் காவல் கடமையிலிருப்பர். இங்கே தமிழர்களின் நடமாட்டம் என்பது சிங்களவருக்கோ படைத்தரப்பிற்கோ தெரியாமல் இருப்பது மிகக் கடினம்.

அதுமட்டுமன்றி சம்பவம் இடம்பெறுவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்னர் தான் அப்பகுதியில் வீதிச்சோதனை முடிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக அப்பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

எனவே அவ்வாறானதொரு இடத்தில் இவ்வளவு பாரிய கிளைமோர்த் தாக்குதலை தடயங்கள் எதுவுமின்றி வெளியார் நடாத்துவது இலகுவானதொரு காரியமல்ல. இவை மட்டுமன்றி சம்பவம் இடம்பெற்ற பின்னரான சில சூழ்நிலைகளை வைத்துப்பார்க்கும் போது இதில் அரச இராணுவ கூட்டுச்சதி இருப்பதை இலகுவாக அவதானிக்கலாம்.

உதாரணமாக கொழும்பு உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட பகுதிகள் உள்ளிட்ட பாதுகாப்பான பிரதேசங்களுள்ளேயே நடமாடுவதை அண்மைக்காலமாக ஜனாதிபதி தவிர்த்து வருகின்றார். தான் பங்கு கொண்டு உரையாற்ற வேண்டிய முக்கிய இடங்களிலெல்லாம் செய்மதி தொலைபேசியூடாக அலா¢மாளிகையில் இருந்து கொண்டே உரையாற்றுகின்றார். அண்மையில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுக்குகூட பாதுகாப்பு கருதி அவர் செல்லவில்லை.

இந்நிலையில் கெப்பிற்றிப்கொல்லாவ சம்பவ இடத்துக்கு அவர் சம்பவம் இடம்பெற்ற குறுகிய நேரத்திலேயே வந்தமையும் அவருக்கான பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்த விதமும் அவர் ஏற்கனவே அங்கு வருவதற்கு முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்ததை போலவே தோற்றமளித்தது.

அதைவிட, அதிக பணி நெருக்கடிகளுக்கு மத்தியில் விமானப்படை, மிக நோ;த்தியான முறையில்; தனது உலங்குவானு}ர்திச் சேவையை வழங்கி, ஏற்கனவே திட்டமிட்டது போன்று ஒழுங்கு முறையில் தென்னிலங்கை ஊடகவியலாளர்களை சம்பவ இடத்திற்கு விரைந்து ஏற்றி இறக்கியதையும் அவதானிக்க முடிந்தது.

அதிலும் குறிப்பாக அவர்கள், காயமடைந்து உயிருக்காக போராடிக் கொண்டிருப்பவர்களை வைத்தியசாலைக்கு ஏற்றுவதை விட ஊடகவியலாளர்களின் பயணங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தனர். இனவாத ஆங்கில சிங்கள ஊடகங்களும் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப பொய்களை மறுபடியும் மறுபடியும் திம்பத்திரும்ப கூறி புலிகள் மேல் பழிசுமத்தும் தமது வழமையான ஒப்பாரியை உரத்த குரலில் எழுப்பினர்.

இவை ஒருபுறம் இடம்பெற்றுக்கொண்டிருக்க, சிறிலங்கா விமானப்படை ஏற்கனவே திட்டமிட்டு செயற்படுபவர்கள் போல், எங்கெங்கு குண்டுவீச வேண்டுமோ அங்கங்கு தாக்குதலை மேற்கொள்ள இனங்காணப்பட்ட இலக்குகள் அடங்கிய வரைபடங்களுடன் காத்திருந்து, முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை அடங்கிய தமிழர் வாழும் பிரதேங்களில் தொடர்ச்சியாக 03 நாட்கள் குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளது.

இங்கு, முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், சம்பவத்தை பார்வையிட்ட ஜனாதிபதி நாட்டு மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துவிட்டு, தான் மட்டும் அமைதியை காக்க முடியாதவரானார். உண்மையில் இவ்வாறான சம்பவங்கள் எங்கேனும் இடம்பெற்றால் அந்த நாட்டுத்தலைவர்கள் முதலில் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கே உத்தரவிடுவர். ஆனால் சிறிலங்கா ஜனாதிபதியோ, அவ்வாறு செய்யாது தமிழ்ப் பகுதிகளில் உடனடியாகவே விமானத் தாக்குதல்களை நடாத்துமாறு விமானப்படையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் இன்னுமொரு முக்கிய விடயத்தையும் இங்கே குறிப்பிடல் வேண்டும். அதாவது சம்பவம் இடம்பெற்ற இடத்திலுள்ள மக்களில் பலருக்கு சம்பவத்திற்கு முன்னரான, படையினரின் இப்பகுதி நடமாட்டங்கள், செயற்பாடுகள் பற்றி சந்தேகம் நிலவியிருந்தது. இதனால் தான் இவர்களில் சிலர் அரசாங்கத்தில் அதிருப்தி கொண்டு ஜனாதிபதியின் வரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயர்களை எரித்து ஆர்ப்பாட்டம் நடாத்தியதுடன், அவருக்கெதிரான கோசங்களையும் எழுப்பியுள்ளதாக தொ¢கிறது. சம்பவ இடத்தில் இடம்பெற்ற இந்தக் காட்சியை அயல்நாட்டு ஒளிபரப்பு நிறுவனம் ஒன்று ஒளிபரப்பிய போதும், இச்செய்தி சிறிலங்கா ஊடகங்களில் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்தது.

இவை ஒருபுறமிருக்க, தாக்குதலுக்கு தொ¢வுசெய்யப்பட்ட திகதியும் இங்கே கவனிக்கப்பட வேண்டியதொன்றாக உள்ளது. அதாவது தாக்குதலுக்கான திகதியாக 15.06.06 தொ¢வு செய்யப்பட்டு அவசர அவசரமாக தாக்குதல் நிறைவேற்றப்படுவதற்கு காரணம் இத்தினத்திற்கு முதல் நாள்தான், ஒஸ்லோ சென்று இங்கு இடம்பெறும் கொலைகளை அம்பலப்படுத்திய தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையிலான குழு நாடு திரும்பியிருந்தது. அது மட்டுமன்றி புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் ஊடுருவி அப்பாவி தமிழ் மக்களை கொன்ற ராஜபக்ச என்ற ஆழ ஊடுருவும் படையணியைச் சேர்ந்த இராணுவத்தினரின் சடலம் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் முன்னிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினாரிடம் ஒப்படைக்கவிருந்ததுமாகும்.

எனவே இக்காலப்பகுதியில் உடனடியாக தாக்குதல் நடாத்தினால் தான் தமது பொய்முகம் முழுமையாக அம்பலமாவதை தடுப்பதுடன் புலிகள் மீது அபகீர்த்தியையும் ஏற்படுத்தலாம் என அரசுதரப்பு கருதியது. அத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவசர அவசரமாக, சம்பவத்திற்கு முதல் நாளேயே நோர்வே வினவிய 05 கேள்விகளுக்கும் பதில் அனுப்பியது.

இவை எல்லாவற்றையும் மிக துல்லியமாக ஆராய்ந்தால், சம்பவம் யாரால்? எப்படி? என்ன நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டதென்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்

Sunday, June 11, 2006

மன்னாரில் நடந்த அராஜகம்!

மன்னாருக்கு தென்கிழக்கே சுமார் 15 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வங்காலை பத்தாம் வட்டாரம் தோமஸ்புரி கிராமத்தில் ஒரு இளம் குடும்பத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் அவர்களது இரு பச்சிளம் குழந்தைகளும் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்தோ அல்லது நீதித்துறையிடமிருந்தோ ஒரு போதும் `உண்மையான நீதியை' எதிர்பார்க்க முடியாது.

ஆனால், தொடரும் இவ்வாறான மிக மோசமான நாகரிகமற்ற மிகக் கொடூரமான அப்பாவி தமிழ் மக்கள் மீதான படுகொலைச் சம்பவங்கள் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பாக இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அதிக ஈடுபாட்டைக் கொண்டுள்ள அயல் நாடான இந்தியா மற்றும் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் மௌனம் சாதித்தால் இரக்கமற்ற மனிதர்கள் வாழும் உலகமொன்றிலேயே உள்ளோம் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படுவார்கள்.

போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை என்பன கைச்சாத்திடப்பட்டதற்கு பின்னரான சுமார் மூன்று வருடகாலம் மன்னார் மாவட்டத்திலேயே மிகக் குறைந்தளவிலான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன.
மாவட்டமாக மன்னார் மாவட்டம் உள்ளதென்று போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் கடந்த ஒரு வருடகாலத்தில் மன்னார் மாவட்டம் மிக மோசமான மனித அவலங்களை அரச படையினரின் எதிர்த்தாக்குதல் சம்பவங்களால் எதிர்கொண்டு வருகின்றது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் உச்சநிலையை அடைந்திருந்த யுத்த காலங்களில் மன்னார் மாவட்டத்திலிருந்து தமிழகத்திற்கு உயிர் அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்து அங்குள்ள அகதி முகாம்களில் மிக மோசமான, துன்பகரமான, அவல வாழ்க்கையை எதிர்கொண்டிருந்த மன்னார் மாவட்ட மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு சமாதான காலத்தில் திரும்பி வந்து இயல்பு வாழ்க்கையை எதிர்கொண்டிருந்த வேளையில் தற்போது தொடரும் மனித அவலங்கள் அச்சத்தையும் பயப்பீதியையும் தோற்றுவித்துள்ளன.

அதுமட்டுமன்றி அயல்நாடான இந்தியாவுக்கு மீண்டும் பாதுகாப்பு தேடி நகரப்போகும் அகதிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கலாமென்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஒரு மாதகாலப்பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதல் மற்றும் நேரடி மோதல் சம்பவம் என்பவற்றுக்கு பின்னர் அடிக்கடி அப்பகுதிகளிலுள்ள கிராமங்களை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தும் படையினர் பல இளைஞர்களை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதுடன் ஒரு குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாகவும் மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்புக்குழு, மாவட்ட பிரஜைகள் குழு என்பவற்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனைவிட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் படையினர் பொது மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொள்வதுடன் பெண்கள் மீதான பாலியல் ரீதியான இம்சைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், நள்ளிரவு வேளைகளில் இப்பகுதிகளுக்குள் ஊடுருவும் ஆயுதம் தாங்கிய நபர்களின் அச்சுறுத்தல் காரணமாகவும் வங்காலைப் பங்குத்தந்தையிடம் முறையிட்ட பின்னர் இரவு வேளைகளில் அங்குள்ள தேவாலயங்களில் தஞ்சமடைந்து காலை வேளையிலேயே தமது வீடுகளுக்கு திரும்பினர்.

இவ்வாறானதோர் படையினரின் அச்சமூட்டு நிலைமைகளுக்கு மத்தியில் தான் கடந்த வியாழக்கிழமை இரவு பாதுகாப்புத்தேடி வங்காலை புனித தேவாலயத்திற்கு செல்லாமல் தமது வீட்டில் தங்கியிருந்த இளம் குடும்பத்தினர் கோரத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தச்சுத்தொழிலாளியான மூர்த்தி மார்ட்டின் (வயது 38) அவரது மனைவியான மேரி மெட்டலின் சித்திரா (வயது 27) இவர்களது குழந்தைகளான ஆன் லக்ஷிகா (வயது 9), ஆன் டிலக்ஷன் (வயது 7) ஆகியோர் மிருகத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கணவனும் இரு குழந்தைகளும் உடலின் பல பாகங்களிலும் கூரிய ஆயுதங்களால் குத்திக்கிழிக்கப்பட்ட நிலையில் வீட்டிலுள்ள அறையொன்றில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தனர்.

மனைவி மிகக் குரூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் உடலின் பல பாகங்களிலும் கூரிய ஆயுதத்தால் குத்திக் கிழிக்கப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.

வங்காலை தேவாலயத்தில் தங்கியிருந்து விட்டு மறுநாள் காலை தமது வீட்டுக்கு வந்த கொல்லப்பட்ட பெண்ணின் சகோதரி குறிப்பிட்ட வீட்டுக்கு சென்று கதவைத் திறந்து பார்த்தபோது அங்கு கண்ட காட்சிகள் ஊர் மக்கள் அனைவரையும் திரண்டெழச் செய்யுமளவிற்கு கதறியழ வைத்துள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவத்தை கேள்வியுற்ற அப்பகுதி பொது மக்கள் திரண்டு வந்து அங்கு வந்த கண்காணிப்புக்குழு பிரதிநிதிகள், மாவட்ட நீதிபதி உட்பட முக்கிய பிரமுகர்களிடம் இந்தக் கொலைக்கு படையினரே காரணமென்று தெரிவித்துள்ளனர்.
இதனைவிட சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் படையினருக்கு எதிராகவும் கோஷமெழுப்பினர்.

தமது தங்கையின் குடும்பத்தினர் மீதான படுகொலைச் சம்பவத்திற்கு படையினரே காரணமென்று அவரது சகோதரியும் அயலவர்களும் முறையிட்டுள்ளனர்.
இதனைவிட, பாலியல் வக்கிரத்தனமான நோக்குடன் சென்ற படையினராலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் சர்வதேச சமூகம் தான் இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முன்வர வேண்டுமென்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வருட முற்பகுதியில் பேசாலை நூறு வீட்டுத் திட்டம் பகுதியில் கடற்படையினர் மீதான கிளேமோர் தாக்குதல் சம்பவத்தையடுத்து அப்பகுதியிலுள்ள பொது மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவங்களில் பத்துக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததுடன் 20 இற்கு மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
கடற்படையினரால் இவ்வாறு எரிக்கப்பட்ட வீடொன்றிலிருந்து ஒரு குழந்தை இளம் தாய் உட்பட பலரது எரியுண்ட அங்கங்களின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டபோதும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த மூன்று மாதகாலப் பகுதியில் மன்னாரின் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பலர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போன ஒரு குடும்பஸ்தரின் சடலம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மன்னார் உப்புக்குளம் கடற்கரையில் இரு உரப் பைகளுக்குள் முட்கம்பிகளால் சுற்றப்பட்ட நிலையில், கரையொதுங்கியதும் கவனிக்கத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்திலிருந்து அரச படையினரதும் சிங்கள பெரும்பான்மையினக் காடையர்களினதும் அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் மன்னாருக்கு வந்து அங்கிருந்து தமிழகத்திற்கு படகுகள் மூலம் அகதிகளாக தப்பியோடுபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ள நிலையில் நொந்து போன மக்களை மேலும் பீதியூட்டுவதாகவே இந்தப் படுகொலைச் சம்பவம் அமைந்துள்ளது.

அல்லைப்பிட்டியிலும் இவ்வாறே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கணவன் மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் பூர்த்தியாகும் நிலையில் மீண்டுமொரு துயரம் வங்காலையில் இடம்பெற்றுள்ளது.
விசாரணைகள் நடைபெறும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று ஒவ்வொரு சம்பவங்களின் பின்னரும் அரசாங்கம் அறிக்கைவிடுவதைத் தவிர இதுவரை நீதியாக என்ன நடவடிக்கையெடுத்துள்ளது?

உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இலங்கையின் உள் விவகாரங்களில் அக்கறை செலுத்தும் சர்வதேச சமூகம் அரச பயங்கரவாதத்தின் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டுவர என்ன செய்யப்போகிறது?

நன்றி: தினக்குரல்