Sunday, May 27, 2007

குடாநாட்டில் திறக்கப்பட்ட புதிய களமுனை

சிறிலங்காவில் நடைபெற்று வரும் போரில் தற்போது ராடார்களின் சொற்பிரயோகங்களும் அதன் பாவனையும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இதற்கான காரணியாக அமைந்தவர்கள் வான்புலிகளே.

அதாவது விடுதலைப் புலிகளின் வான், கடல் நடமாட்டங்களை அதிக செயற்திறனுடன் அவதானிப்பதற்காக சிறிலங்கா படையினர் தமது ராடார்களின் வலிமையை அதிகரிக்கும் அதே சமயம் அவற்றை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் நிறுவி வருகின்றனர்.

இந்த அவதானிப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நெடுந்தீவும் ஒன்று. இது வடபகுதியில் யாழ். குடாநாட்டிற்கு தென்மேற்காக அமைந்துள்ள 7 தீவுகளில் உள்ள பெரிய தீவாகும். நெடுந்தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து அதிக தொலைவில் அமைந்துள்ளதுடன் 70 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் உடையது. இந்த தீவு யாழ்ப்பாணத்தில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளபோதும் இந்தியாவின் தமிழ்நாட்டின் தெற்கு கரையான இராமேஸ்வரத்தில் இருந்து 38 கி.மீ தூரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தரைத்தொடர்புகள் அற்ற நெடுந்தீவை புங்குடுதீவில் உள்ள குறிகட்டுவான் படகுத்துறையில் இருந்து படகுகள் மூலமே அடைய முடியும். எனினும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான பூநகரி மன்னார் பகுதிகளுக்கு அண்மையாக இருப்பதனாலும். இந்தியாவின் தமிழ் நாட்டின் தெற்கு கரைக்கு அண்மையில் இருப்பதனாலும், (அதாவது இராமேஸ்வரத்திற்கும் மன்னாருக்கும் இடையில் உள்ளதனால்) பூகோள ரீதியாக இது படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்தது.

அதாவது கண்காணிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சிறிலங்காவின் பெருமளவான படைபலம் குவிந்துள்ள யாழ். குடாநாட்டுக்கான மேற்குப்புற நுழைவாயிலின் எல்லையில் இது அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு வியூகங்களுக்காக தீவகப்பகுதிகள் பலப்படுத்தப்பட்ட போது நெடுந்தீவும் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் அதன் வடமுனையில் கடற்படைத்தளம் அமைக்கப்பட்டது.

எனினும்; உக்கிரமடைந்த மோதல்களை தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கான விநியோகங்களை தடுக்கவும், போரினால் இடம்பெயர்ந்த மக்கள் மன்னார் ஊடாக இந்தியா செல்வதை தடுக்கும் நோக்குடனும் இந்த தீவின் தென்முனையில் கடற்படைத் தளமும் கண்காணிப்பு நிலையும் கடந்த வருடம் அமைக்கப்பட்டது.

இந்த தளத்தில் யாழ். குடாநாட்டில் படையினர் வசம் உள்ள ராடார்களில் மிக நவீனமான ராடார்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில் உள்ள அதிக தூரவீச்சுக்கொண்ட ரடார்களின (Long-range Battlefield Suveillance Radars) உதவியுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான பூநகரி தொடக்கம் விடத்தல்தீவு வரையான பகுதிகளும் மன்னாரின் மேற்குப்புற கடற்பகுதிகளும் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வந்தது.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள் ஆரம்பமாகிய பின்னர் இந்த ராடார் நிலையத்தின் தேவை மேலும் அதிகரித்திருந்ததுடன், இலகுவாக நகர்த்தப்படும் வான்பாதுகாப்பு ராடார்களும (Mobile Air-Defence Radars) அங்கு நிறுவப்பட்டன. மன்னார் வான்பரப்பில் பறக்கும் விடுதலைப் புலிகளின் விமானங்களை அவதானிப்பதுடன், விடுதலைப் புலிகளின் விமானங்கள் மேற்கு வாசலின் ஊடாக குடாநாட்டுக்குள் ஊடுருவுவதை கண்காணிக்கும் பணியையும் அது மேற்கொண்டு வந்தது.

ஆனால் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடற்படை கண்காணிப்பு நிலையம் விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணியினரின் (Marines) தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதுடன், கண்காணிப்பு ராடார் நிலையமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஓரங்கமாக நாலாவது ஈழப்போரில் உருவாகிய ஈரூடகப் படையணி ஒரு மைல்கல் ஆகும். ஏனெனில் அதிகளவு கடற்பரப்பை கொண்ட சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு போர் முனைகளுக்கு இந்த படையணியின் தேவை அவசியமானது.

உலகின் வல்லமை மிக்க நாடான அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட எல்லா சமர்களிலும் அதன் ஈரூடகப்படையினரின் பங்களிப்புக்கள் முக்கியமானவை. உலகிலேயே அதிகளவான ஈரூடகப்படையினரை கொண்ட நாடாக விளங்குவதும் அமெரிக்கா தான். ஏறத்தாள 175,000 செயற்திறன் மிக்க ஈரூடக படையினருடன், 40,000 பின்னிருக்கை படையினரையும் அது கொண்டுள்ளது.

இந்த படையணியில் புலனாய்வுப் பிரிவு, ஆழ ஊடுருவும் பிரிவு, இலக்கை தேடி கண்டறியும் பிரிவு, தேடி அழிக்கும் பிரிவு, வான் எதிர்ப்பு துப்பாக்கி பிரிவு, நீரடிநீச்சல் பிரிவு என்பன உண்டு. நீரிலும் நிலத்திலும் சமர் புரியும் ஈரூடக படையணியானது கடற்படை மற்றும் தரைப்படையின் நகர்வுகள், நகர்வுகளுக்கான தடை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரை 1995 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு முகாம் தகர்ப்பு, 1993 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பூநகரி தவளை நடவடிக்கை, 2000 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடாரப்பு தரையிறக்கம் போன்றவற்றில் கடல் மற்றும் தரை சார் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்திருந்த போதும் அது ஈருடகப்படையணியின் நடவடிக்கை கொள்ளப்படவில்லை.

எனினும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் நாள் அதிகாலை மண்டைதீவு, அல்லைப்பிட்டி படைத்தளங்களையும், ஆட்டிலறிதளத்தையும் அழித்த நடவடிக்கையே ஈரூடகப்படையணி என்னும் சிறப்பு பயிற்சி பெற்ற படையணியின் முதலாவது நடவடிக்கையாக தெரிவிக்கப்பட்டிருந்தது. விரிவடையும் களங்களுக்கு ஏற்ப புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள இந்தப் படையணி குடாநாட்டின் சமர்களங்களுக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் பூகோள ரீதியாக யாழ். குடாவானது அதிக கரையோரங்கள், தீவுகள், களப்புக்கள், குடாக்கள் கொண்ட பகுதி என்பதுடன் படையினரின் பெருமளவான படை நிலைகள் கரையோரங்களை அண்டியே அமைந்துள்ளன.

கடந்த வியாழக்கிழமை (24.05.2007) நடைபெற்ற தாக்குதலின் போது மன்னாரின் வடமுனையான விடத்தல்தீவு மற்றும் பூநகரி பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளின் தளங்களில் இருந்து கடற்புலிகளின் துணையுடன் புறப்பட்ட ஈரூடகப் படையணியினர் கடற்படையினரின் தலைமன்னார் நெடுந்தீவு கண்காணிப்பு நிலைகளின் பார்வையில் இருந்து சாதுரியமாக நகர்ந்து அதிகாலை 12.45 மணியளவில் நெடுந்தீவின் தென்முனையில் தரையிறங்கியதுடன் 20 நிமிட அதிரடித் தாக்குதலில் தளத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.

இந்த மோதல்களின் போது காரைநகர் கடற்படைத்தளத்தில் இருந்து உதவிக்கு விரைந்து சென்ற டோரா பீரங்கிப்படகுகளும், தலைமன்னார் கடற்படைத்தளத்தில் இருந்து சென்ற நீரூந்து விசைப்படகுகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இதில் ஒரு டோரா செயலிழந்ததுடன், மேலும் இரு படகுகள் சேதமடைந்துள்ளதாகவும், 35 படையினர் வரையில் பலியானதாகவும் விடுதலைப் புலிகளின் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் அரசு தமது தரப்பில் 04 பேர் கொல்லப்பட்டதாகவும் 04 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ மூன்று மணிநேரம் முகாமை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப் புலிகளின் ஈரூடகப்படையினர் படையினரின் நவீன ராடார் சாதனங்களையும், 0.50 கலிபர் கனரக துப்பாக்கிகள் - 03 உட்பட பெருமளவான ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு தளம் திரும்பிவிட்டனர். இந்த நடவடிக்கையில் ராடார் நிலையத்தை கைப்பற்றுவதே விடுதலைப் புலிகளின் பிரதான தாக்குதல் இலக்காக இருந்துள்ளது.

இங்கு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் நீண்ட தூர கனரக துப்பாக்கிகள் கணிசமானவை. அதாவது ராடாரின் பாதுகாப்புக்கும், வான் எதிர்ப்புத் தாக்குதலுக்கும் என்றே அவை அங்கு குவிக்கப்பட்டிருந்தன. இந்த தளத்தின் நோக்கமும் அதுவே மேலும் ராடார் நிலையத்தின் பாதுகாப்பே அங்கு முதன்மைப்படுத்தப்பட்டும் இருந்தது. இந்த ராடார் நிலையத்தின் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பும் படையினரிடம் மேலோங்கி இருந்தது.

விடுதலைப் புலிகளின் இந்த தாக்குதலை தொடர்ந்து வடபோர்முனையின் தென்மராட்சிப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த இராணுவத்தினரில் ஏறத்தாழ 300-400 வீரர்கள் தீவுப் பகுதியை நோக்கி அவசரமாக நகர்த்தப்பட்டுள்ளதுடன் படையினரின் கவனமுமம் தீவுப் பகுதிகளை நோக்கி பரவலடைந்துள்ளது.

பல மைல் தூரம் கடலைக் கடந்து சென்று கடற்படைத் தளத்தை தாக்கிவிட்டு ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு விடுதலைப் புலிகள் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளனர். விடுதலைப் புலிகளின் ஈரூடகப்படையினரின் தீவுப்பகுதி மீதான இந்த இரண்டாவது நடவடிக்கை படையினரின் பாதுகாப்பு ஒழுங்கமைப்பில் பெரும் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.

அதாவது எதிர்காலத்தில் தீவகத்தில் உள்ள படையினரின் தளங்கள் மற்றும் அந்த தளங்களை பாதுகாக்கும் பாதுகாப்பு நிலைகள் போன்றவற்றிற்கு தேவைப்படும் படையினரின் எண்ணிக்கை மிக அதிகமாக போகின்றது. தீவகத்தில் ஏற்படும் பாதுகாப்பு அச்சறுத்தல் மன்னார் மற்றும் காரைநகர் தளங்களுக்கான நேரடியான அச்சுறுத்தல் என்பதுடன், அவற்றிற்கு இடையிலான தொடர்புகளும் துண்டிக்கப்படலாம்.

இது வடக்கிற்கான விநியோகத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடியது. நெடுந்தீவு தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியும், இராணுவப் பேச்சாளருமாகிய மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க தெரிவித்ததாவது: 'நெடுந்தீவுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கான அவர்களின் திட்டத்திற்கான ஒரு படிக்கல். விடுதலைப் புலிகள் நெடுந்தீவை தக்கவைத்திருந்தால் அது குடாநாட்டின் வடபகுதிக்கான விநியோகங்களை பெருமளவில் பாதிக்கும்" என தெரிவித்திருந்தார்.

கிளாலி, முகமாலை, நாகர்கோவில் என யாழ். குடாநாட்டின் தென்கிழக்கில் இறுகிப்போயுள்ள களமுனைகளில் படையினரின் கவனம் செறிவாகியபோது புதிதாக தென்மேற்கு திசையில் ஒரு களமுனை திறக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு களமுனை நாளை பல களமுனைகள் ஆகலாம். ஆனால் அவற்றை பாதுகாக்கும் படைபலமும் விநியோக மார்க்கங்களும் படையினருக்கு உண்டா என்பது தான் இன்று எழுந்துள்ள முக்கிய கேள்வி.

அதாவது கிளாலி, முகமாலை, நாகர்கோவில் அச்சுக்கு இணையாக இந்த முனைகளை பலப்படுத்த வேண்டிய தேவை படையினருக்கு ஏற்பட்டால் அது படையினருக்கு மிகுந்த நெருக்கடிகளை கொடுப்பதுடன் படையினரின் எல்லா முனைகளையும் பலவீனப்படுத்தி விடும்.

விடுதலைப் புலிகளின் படைப்பலத்தின் கவனத்தை திரும்பும் நோக்குடன் படையினர் புதிதாக அமைக்கப்பட்ட தமது 57 ஆவது வலிந்த தாக்குதல் படையணியினரை கொண்டு வவுனியா மன்னார் எல்லையில் புதிய களமுனை ஒன்றை திறக்க முயற்சித்து வரும் வேளையில் விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டின் தென்மேற்குப்புற வாசலில் புதிய களமுனை ஒன்றை திறந்துள்ளனர். இந்த களமுனை குடாநாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தல் என்று தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரங்களில் மூத்த படையதிகாரி கூறியது அதன் முக்கியத்துவத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

-அருஸ் (வேல்ஸ்)-

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்