Sunday, August 27, 2006

திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு

தீவிரமடையும் படுகொலைகள்
- திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு -
(தாயகன்)

படுகொலைக்களமாக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் இராணுவ புலனாய்வுப் பிரிவினராலும் அவர்களோடு இணைந்த துணை இராணுவ குழுக்களினாலும் பல அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சு, ஆட்லறி, மல்ரிபரல் தாக்குதல்களில் 200 இக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் திட்டமிட்ட படுகொலைகள் உச்ச நிலையை அடைந்துள்ளன.

கடந்த இருவாரங்களில் மட்டும் யாழ். குடாநாட்டில் 20 இற்கும் மேற்பட்டவர்களும் கிழக்கில் 30 இற்கும் மேற்பட்டவர்களும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் இலக்கு வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கிழக்கில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையே ஏற்பட்ட மாவிலாறு சமருக்கு பின்னரும் வடக்கில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையே ஏற்பட்ட முகமாலை சமருக்கும் பின்னரே இளைஞர், யுவதிகள், தமிழ் ஆர்வலர்கள், வர்த்தகர்களென பலர் அதி உச்சவேகத்தில் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்தப் படுகொலைகளின் பின்னே இனசுத்திகரிப்பும் மிகப் பெரியதொரு இராணுவ நலனும் தொக்கி நிற்கின்றது.

முகமாலையில் போர்க்களத்தை திறந்த இலங்கை அரச படைகள் விடுதலைப் புலிகளின் உக்கிர பதிலடியால் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகள் சிலவற்றை இழந்ததுடன் உயிர், உடைமை பேரழிவுகளையும் சந்திக்க வேண்டியேற்பட்ட அதேவேளை, குடாநாட்டைப் பறிகொடுக்க வேண்டியேற்படுமோ என்ற அச்சநிலையையும் ஏற்படுத்தியது.

இதனால், தமது படைகளையும் குடாநாட்டையும் பாதுகாத்துக்கொள்ள மக்களை கேடயமாக்கிய படைகள் இன்று வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் ஸ்தம்பிக்கச் செய்து பெரும் யுத்த பீதியொன்றுக்குள் அவர்களை வைத்துள்ளது. இதனொரு கட்டமாக உளவியல் போர் ஒன்றை குடாநாட்டில் ஆரம்பித்துள்ள அரச படைகளின் புலனாய்வுக் குழுக்கள், படுகொலைகளையும் ஆட்கடத்தல்களையும், தினசரி அரங்கேற்றிக் கொண்டிருக்க, சுற்றி வளைப்புகள், தேடுதல்கள், போராட்ட நினைவுச் சின்னங்களை அழித்தல், கொள்ளையிடல் என பொதுமக்களை பீதியில் உறைய வைக்கும் முயற்சியில் இராணுவமும் ஈடுபட்டுள்ளது. குடாநாட்டில் மட்டும் 120 இற்கு மேற்பட்ட பிரமுகர்கள், புத்திஜீவிகள், தமிழ் ஆர்வலர்கள், விடுதலையுணர்வுடையவர்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் கொலைப் பட்டியலில் உள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கும் அதேவேளை, அதனை மெய்ப்பிக்கும் வகையில், பலர் கொல்லப்பட்டுமுள்ளனர்.

காங்கேசன்துறை மக்கள் வங்கிக் கிளை முகாமையாளர் பொன். கணேசமூர்த்தி, நமது ஈழநாடு பத்திரிகை நிறுவன நிர்வாக முகாமையாளரும், தெல்லிப்பழை ப.நோ.கூட்டுறவு சங்கத் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான `மாமனிதர்' சிவமகாராசா உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள அதேவேளை, இராணுவத்தின் படுகொலைகளை அம்பலப்படுத்திய அல்லைப்பிட்டி பங்குத் தந்தை நிஹால் ஜிம்பிறவுன் உட்பட பலர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளமையைக் குறிப்பிடலாம்.
அத்துடன், பல காலமாக குறிவைத்திருந்த யாழ். பல்கலைக்கழகத்தினுள் தற்போதைய யுத்தநிலையைப் பயன்படுத்தி உள்நுழைந்த இராணுவ படைகள் அங்கு பாரிய சுற்றி வளைப்பை நடத்தியதுடன் மாணவர் ஒன்றியத் தலைவராக தெரிவாகவிருந்த பகீரதன் என்ற மாணவனைக் கைது செய்து காங்கேசன்துறை தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர். இச்சுற்றி வளைப்பின்போது, பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் போரில் உயிர் நீத்த மாவீரரின் நினைவுச் சின்னத்தையும் சிதைத்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட செய்தியை பெரும் பரப்புரையாக மாற்றிய தென்னிலங்கை அரச ஊது குழல்கள் புலிகளின் கோட்டையாகவும் இரகசியமறை விடமாகவும் திகழ்ந்த யாழ். பல்கலைக்கழகத்தை சுற்றி வளைத்த இராணுவத்தினர் அங்கிருந்து கண்ணிவெடிகள் மற்றும் பல வெடி பொருட்களையும் விடுதலைப் புலிகளின் உபகரணங்கள் பலவற்றையும் கைப்பற்றியதாக வாய்க்கு வந்தபடி கூறினர்.

இதேபோன்றே முகமாலையில், புலிகளிடம் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்குமுகமாக முல்லைத்தீவில் வல்லிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது கொடூர வான் தாக்குதலை நடத்தி அங்கு முதலுதவி பயிற்சி பெற வந்திருந்த 61 பாடசாலை மாணவிகளை படுகொலை செய்து 150 இற்கும் மேற்பட்ட மாணவிகளை படுகாயப்படுத்திய அரசு கொல்லப்பட்ட அனைவரும் புலிகளென பிரசாரப்படுத்த முயன்று தற்போது மூக்குடைப்பட்ட நிலையிலுள்ளது.

1995 ஆம் ஆண்டு குடாநாட்டைக் கைப்பற்றிய போது தமிழ் மக்கள் தமது உயிரிலும் மேலாக போற்றி வணங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள், மாவீரர்களின் சிலைகள், நினைவுச் சின்னங்களை அழித்து இராணுவ நெறிமுறைக்கே அவமானத்தை ஏற்படுத்திய இலங்கை இராணுவத்தினர் தற்போது மீண்டும் அவ்வாறான போர் விதிமுறைகளுக்கு மாறான இழிவான வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுச் சின்னத்தை சிதைத்த இராணுவத்தினர், விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலியான கப்டன் மில்லருக்கு நெல்லியடிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தையும் இடித்தழித்துள்ளனர். இனி அடுத்ததாக அவர்கள் மாவீரர் துயிலுமில்லங்களை இலக்கு வைப்பார்களென்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லை.

இவ்வாறான செயல்கள் மூலம் மக்களிடையே பாரியதொரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி தமது சில நோக்கங்களை நிறைவேற்றவே இராணுவம் முயற்சிக்கின்றது. குடாநாட்டுப் போர் ஒரு முடிவுக்கு வரும் வரை இந்த படுகொலைகள், காணாமல் போதல்கள் தொடரவே செய்யும். யார் யாரெல்லாம் தமக்கு எதிராக செயற்படுகிறார்களென இராணுவ புலனாய்வுப் பிரிவு தீர்மானிக்கின்றதோ அவர்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக்கப்படும். குடாநாட்டை பாதுகாக்க வேண்டுமானால் பொதுமக்களை நசுக்க வேண்டுமென்பதை தற்போதைய இராணுவ தந்திரமாக அரசு கடைப்பிடிக்கின்றது. இதனால் இன்னும் பலரின் உயிர்களுக்கு உலை வைக்கப்படும் செயல்கள் தொடரவே போகின்றன.

இதேபோன்ற படுகொலைகளே கிழக்கிலும் இடம்பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் பல இளைஞர்கள் வீதிகளிலும் வீடுகளிலும் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். திருகோணமலையில் வர்த்தகர்களே இலக்கு வைத்துப் படுகொலை செய்யப்படுகின்றனர். கடந்த வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு பாலமீன் மடுப் பகுதியில் வைத்து 5 இளைஞர்கள் ஒரேயடியாக விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இராணுவ துணைக்குழுவினரால் கடத்தப்பட்ட இளைஞரொருவரை பவள் கவச வாகனத்தில் ஏற்றி வந்த இராணுவத்தினர் வலையிறவு பாலத்தடியில் இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளொன்றை கொடுத்து புலிகளின் பகுதிக்கருகே சென்று என்ன நடக்கிறதென பார்த்து வருமாறு மிரட்டியுள்ளனர். உயிருக்கு அஞ்சிய அந்த இளைஞர் இராணுவம் கொடுத்த மோட்டார் சைக்கிளில் புலிகளின் பகுதிக்கு அருகே சென்ற போது, அவ்விளைஞனுக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிளில் பொருத்தியிருந்த குண்டை இராணுவத்தினர் வெடிக்க வைத்துள்ளனர். இதில் அவ்விளைஞன் உடல் சிதறிப் பலியானார். இதனை தென்னிலங்கை ஊடகங்கள் புலிகள் மீது கருணா குழுவின் கரும்புலித் தாக்குதலென பெரும் பிரசாரத்தை முன்னெடுத்தன.

இதேபோன்றே முன்னொரு தடவையும் ஆட்டோவொன்றில் குண்டைப் பொருத்திவிட்டு இரு இளைஞர்களை அதில் அனுப்பி இராணுவம் படுகொலை செய்தபோதும் அதனை இந்த பேரினவாத ஊடகங்கள் கருணா குழுவின் கரும்புலித் தாக்குதலென பிரசாரப் படுத்தியபோது கருணா குழுவின் ஊடக பேச்சாளரான தூயவன் இதனை முற்றாக மறுத்திருந்தார். தாம் இவ்வாறான தாக்குதல்களை ஒருபோதும் நடத்துவதில்லையென அவர் கூறியதன் மூலம் இதன் பின்னணியில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகள் உள்ளமை தெளிவாகின்றது. கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் மற்றும் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுகளிலேயே அதிகளவு படுகொலைகள் இடம்பெறுகின்றன. அண்மையில் வாழைச்சேனை கறுவாக் கேணிப் பகுதியில் ஒன்றரை வயது குழந்தையொன்று கூட சுட்டுக்கொல்லப்பட்டது. பல வீடுகள் எரியூட்டப்பட்டன.

பலர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். பலருக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கான போக்குவரத்துககள், மின்சாரம், உணவுப் பொருட்கள், சுகாதார உதவிகள், மட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, அப்பகுதிகளை நோக்கி ஆட்லறித் தாக்குதல்களும் விமானக் குண்டு வீச்சுகளும் நடத்தப்படுகின்றன. இதனால், பல பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்த பலர் மட்டக்களப்புக்கு வந்து சிகிச்சை பெற முடியாத நிலையிலுள்ளனர்.

இதேவேளை, அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களில் பணிபுரிவோரும் அண்மைக் காலமாக இலக்கு வைத்து சுட்டுக் கொல்லப்படுகின்றனர். மூதூரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்றின் 17 பணியாளர்கள் இராணுவத்தினரால் நிலத்தில் படுக்க வைத்து கைகளை தலைக்கு மேலே வைக்குமாறு கூறி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று வவுனியாவில் ஐ.சி.ஆர்.சி.யில் பணிபுரியும் யுவதியொருவரும் மட்டக்களப்பு திருக்கோவில் பகுதியில் ஐ.நா. அலுவலக ஊழியரொருவரும் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகளுக்கு சார்பாக செயல்படுவதாக அரசு குற்றம் சாட்டி வரும் நிலையிலேயே தற்போது அதில் பணிபுரியும் தமிழ் ஊழியர்கள் படுகொலை செய்யும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொது மக்களை நெருக்கடிக்குள் தள்ளி பலிக்கடாக்களாக்குவதன் மூலம் புலிகளின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த இராணுவ தரப்பினர் முயற்சிக்கின்றனர். ஆனால், இவ்வாறான அணுகு முறைகளே மக்களை விடுதலைப் புலிகள் பக்கம் நகர்த்தி பெரும் வளர்ச்சியடைய வைத்ததென்பதை எந்தவொரு சிங்கள ஆட்சியாளரும் இன்று வரை புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

நன்றி: தினக்குரல் (27 ஆகஸ்ட் 2006)

Sunday, August 20, 2006

பாக்.தூதுவர் தாக்குதல் பின்னணியில் றோ'

பாக்.தூதுவரைக் குறிவைத்த தாக்குதல் பின்னணியில் றோ'

தினக்குரல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பசீர் வலி முகமட்டின் வாகனத் தொடரணி மீது கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குதலின் பின்னணியில் இந்திய புலனாய்வுத் துறையினர் (றோ) உள்ளதாக பாகிஸ்தானின் `த நியூஸ்' செய்தித்தாள் குற்றஞ்சாட்டியுள்ளது.
பசீர் வலி முகமட் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என பாகிஸ்தான் அரச அதிகாரிகளை மேற்கோள் காட்டி `த நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், அந்த அதிகாரிகளின் பெயர், விபரங்களை வெளியிடாத அந்த செய்தித்தாள் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ பொருளாதார உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதற்காகவே ஆகஸ்ட் 14 ஆம் திகதி கொழும்பில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் உளவுப் பிரிவான `றோ' வே உயர்ஸ்தானிகரின் மெய்ப்பாதுகாவலர் நால்வரைக் கொன்ற அந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் `த நியூஸ்' தெரிவித்துள்ளது.

கொழும்பில் பசீர் வலி முகமட் தொடர்ந்தும் பணியாற்றுவதை புதுடில்லி விரும்பவில்லை. மேலும், இலங்கையில் பாகிஸ்தானின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து அது சீற்றமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாசியாவில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்துள்ள நாடுகள், இலங்கையும் பாகிஸ்தானும் எனவும் இந்தத் தாக்குதல் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்த `றோ' விரும்பியது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் பலப்படுவதில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முக்கிய பங்காற்றினார் என பாகிஸ்தான் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் தலைவரும் இராணுவ அதிகாரியுமான முகமட் வலி இலங்கைக்கான தனது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு திங்கட்கிழமை பாகிஸ்தான் திரும்பவுள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து இரண்டு கப்பல்களில் ஆயுதங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு வந்து சேர்ந்த வேளையே உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியா இந்தத் தாக்குதலை கண்டித்திருந்தது.

இதேநேரம், இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக இலங்கை அரசு குற்றஞ்சாட்டி வந்தநிலையில், விடுதலைப் புலிகள் இதனை நிராகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினக்குரல்

Thursday, August 17, 2006

வடக்கில் கடும் மோதல்

சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலுக்கு எதிராக இராணுவ முன்னரண் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் செறிவான தாக்குதலை நடத்தி படைத்தரப்புக்கு இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.

கிளாலி முதல் முகமாலை வரையான முன்னரண் பகுதிகளில் இந்த தாக்குதல் நேற்று பிற்பகல் 3 மணிமுதல் இன்று அதிகாலை 1.30 மணிவரை நீடித்தது.

இராணுவத்தினருக்கு எதிராக செறிவான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். இதில் இராணுவத் தரப்பில் 70-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 120-க்கும் அதிகமான இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

மேலும் யாழ். பலாலி படைத்தளம் மீது தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை நடத்தி வருவதாக தெரிகிறது.

பலாலி விமானத் தளத்தில் நேற்று புதன்கிழமை இரவு பாரிய குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்களுக்குப் பின்னர் புதன்கிழமை இரவு பலாலி தளம் நோக்கி விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

பலாலி படைத்தளத்துக்கு மேலாக நேற்று இரவு வானில் தீப்பிழம்புகள் கொழுந்துவிட்டெரிந்துள்ளன.

பலாலி படைத்தளத்துக்குள் நேற்று இரவு 6.45 மணி முதல் 2 மணி நேரத்துக்கும் மேலாக குண்டுவெடிப்புக்களும் ரொக்கெட் வீச்சுகளும் நீடித்துள்ளன. முன்னதாக பலாலி படைத்தளத்துக்குள் சிறிலங்கா விமானப் படை விமானம் தரையிறங்க முயற்சித்து அதன் பின்னர் திரும்பிச் சென்றது.

நேற்று புதன்கிழமை நள்ளிரவில் பாரிய குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் பலாலி விமானத்தளத்திலிருந்து உலங்குவானூர்திகள் புறப்பட்டுச் செல்லும் சத்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக் குண்டுவெடிப்புச் சத்தங்களையடுத்து பலாலி தளத்திலிருந்து நடத்தப்பட்டு வந்த எறிகணை மற்றும் பல்குழல் உந்துகணைத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பலாலியை அண்மித்த கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும் பலாலி படைத்தளத்தை நோக்கிய விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல் இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு மீண்டும் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

நன்றி: புதினம்
மேலும் தகவல்கள்: TamilNet

Tuesday, August 15, 2006

பாகிஸ்தான் தூதுவருக்கு எதிரான தாக்குதல்: பின்னணி என்ன..?

பாகிஸ்தான் தூதுவருக்கு எதிரான தாக்குதல்: பின்னணி என்ன.....?
-ப.வித்யபாலன்-
தமிழ்நாதம்.கொம்

பாகிஸ்தான் தேசிய தினமான ஓகஸ்ட் - 14 ஆம் திகதி சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் சென்ற வாகனத்தொடரணி கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் வைத்து தாக்குதலுக்குள்ளாகியுள்ள சம்பவம் பாதுகாப்பு வட்டாரங்களை உசுப்பி விட்டிருக்கிறது. மேலும் சொல்லப்போனால் தலைநகரின் பாதுகாப்புக்கு என்னதான் செய்தாலும் நடப்பது நடந்தே தீரும் என்ற விதியை எழுதிச்சென்றுள்ளது.

வழமை போலவே இந்த சம்பவத்துக்கும் எடுத்த எடுப்பில் விடுதலைப் புலிகளை நோக்கி விரல் நீட்டி குற்றஞ்சாட்டுபவர்களின் பட்டியல் நீண்டுகொண்டேபோகின்றது. அதற்கான ஏது நிலைக்கு அன்றைய தினம் முல்லைத்தீவில் இடம்பெற்ற விமானப்படை குண்டுத்தாக்குதல் சம்பவத்தை வலுவான ஒரு ஆதாரமாக பலரும் தமது செய்திகளில் இட்டுக்கட்டியுள்ளனர்.

அதேபோன்று பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இராணுவ நெருக்கம் சிறிலங்காவில் யுத்தம் ஆரம்பிக்கும்போது மேலும் வலுவாகலாம் என்பதால் பாகிஸ்தானின் இந்த உத்தேச கூட்டுறவுக்கு மிரட்டும் தொனியில், அந்நாட்டு தூதுவரிற்கு இலக்குவைப்பதன் மூலம் விடுதலைப் புலிகள் ஒரு மறைமுக செய்தியை விடுத்திருக்கலாம்.
கிழக்கில் ஜிகாத் என்ற அமைப்பு இயங்குவதாகவும் அது சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து தமிழ்மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கும் ஜிகாத்துக்கும் தொடர்புகள் உள்ளன என்றும் அண்மையில் விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.

கடந்த வாரம் மூதூரை முற்றாக கைப்பற்றிவிட்டு தமது மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையை நிறைவு செய்துகொண்டு திரும்புகையில் மூதூரில் வைத்து இந்த ஜிகாத் அமைப்பைச் சேர்ந்த சுமார் 40 பேர் வரையிலானோரை விடுதலைப் புலிகள் கைது செய்து சென்றுள்ளனர் என்ற செய்தி வெளியாகியிருந்தது.

சிறிலங்கா - பாகிஸ்தான் இராணுவ கூட்டுறவுக்கு அப்பால் மேற்குறிப்பிட்ட இந்த ஒரு காரணமும் விடுதலைப் புலிகளை பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு வழி சமைத்திருந்தது.

இவற்றை வைத்து பார்க்கும்போது பாகிஸ்தான் தூதுவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்தத்தாக்குதலை விடுதலைப்புலிகளே மேற்கொண்டிருப்பர் என்ற ஒரு வெளிப்படைத்தன்மை தோன்றாமல் இல்லை.

ஆனால் மறுபுறத்தில் பாகிஸ்தான் என்ற முழுமையான பகையை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் குண்டுத்தாக்குதலில் தப்பிய பாகிஸ்தான் தூதுவர் பஷீர் வலி முகமட்டுக்கு எதிராகவும் ஒரு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை கொண்டுள்ள ஒரு பிரதான எதிரி உண்டென்றால். அது வேறெதுவுமல்ல. இந்தியாவே தான்.

இந்தியாவுக்கு எதிராக கொழும்பை பாகிஸ்தானின் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., நேரடியாக பயன்படுத்துவதாக அண்மையில் இந்தியாவின் 'அவுட்லுக்" சஞ்சிகையில் இராமன் என்ற பத்தி எழுத்தாளர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அவரது கட்டுரையில் -
'சிறிலங்காவின் கிழக்கில் உள்ள முஸ்லிம்களை ஜிகாத் குழுவில் சேர்ப்பது தொடர்பாக லஸ்கர், தொய்பா என்ற பாகிஸ்தானை தளமாகக கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்பு ஆர்வம் காட்டுகிறது. இந்த அமைப்பால் கிழக்கு மாகாண தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே தீவிரவாத உணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது. 2002 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் நடந்த இன வன்முறைகளுக்கு மத்தியில் ஒசாமா படையணி" என்பது தீவிரமாகச் செயற்பட்டது.

'பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. யுடன் லஸ்கர், தொய்பா நெருங்கிய தொடர்பு கொண்டது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் இராணுவ புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இராஜதந்திர நிலையில் தனது இரு அதிகாரிகளை நியமனம் செய்திருந்தது. இது போன்ற செயற்பாடுகள் மூலம் கொழும்பை தளமாக பயன்படுத்த பாகிஸ்தான் இராணுவப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டமிடுவதாக தெரிகிறது.

'ஏனெனில் இந்தியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் செயற்பாடுகள் பல தென்னிந்தியாவை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. இவை தொடர்பிலான தரவுகளைச் சேகரிக்க கிழக்கில் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ. பயன்படுத்தலாம்.

'பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் பாகிஸ்தானிக் இந்திய உளவாளிகள் இரகசியமாக கராச்சி செல்வதற்காக கொழும்பு வழியை பயன்படுத்துகின்றனர். கொழும்பில் அத்தகைய நபர்களது கடவுச்சீட்டுகளில் சிறிலங்காவில் நுழைந்தமைக்கான பதிவுகளை சிறிலங்கா செய்வதில்லை." - என்று அந்த பத்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் கொழும்பில் பாகிஸ்தான் தூதுரக பிரசன்னத்தையோ அதில் பணிபுரியும் தூதுரக அதிகாரிகளையோ கண்கொத்தி பாம்பாக அவதானித்து வருகிறது. பாகிஸ்தானும் சிறிலங்காவும் சேர்ந்து தமக்கு எதிராக இரகசிய நாடகங்களை அந்தக்காலத்தில் ஜே.ஆர் பாணியில் அரங்கேற்றுகிறார்களா என்று இந்தியாவும் அதன் உளவு அமைப்புக்களும் கொழும்பையும் அதன் இராஜதந்திர மையங்களையும் வட்டமிட்டுத் திரிகின்றன.

இந்த வகையில் தற்போது நடைபெற்றுள்ள இந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு எதிரான தாக்குதல் தருணமும் பார்த்து விடுதலைப் புலிகளின் தலையில் பழிபோடும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒன்றா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஏனெனில் நடைபெற்று முடிந்துள்ள முல்லைத்தீவு செஞ்சோலை படுகொலைக்கு சிறிலங்காவுக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் கண்டனத்தால் அரசு அழுத்தத்துக்கு உள்ளாகப்போவது உறுதி. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அருகிலுள்ள இந்தியாவின் நிலைமை இக்கட்டானதாகும். இவ்வளவு நடக்க அருகிலுள்ள இந்தியா என்ன பார்த்துக்கொண்டிருக்கிறதா என்ற ஒரு பன்னாட்டு குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்கு, வெளிநாட்டு தூதுவர் ஒருவரின் படுகொலையை விடுதலைப் புலிகளின் தலையில் போட்டுவிட்டால் அது தற்போதுள்ள செஞ்சோலை படுகொலையை அப்படியே மூடிமுறைத்து விடும் என்ற திட்டத்துடன் இந்தத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
வங்காலை மற்றும் அல்லைப்பிட்டி படுகொலைகளை மறைப்பதற்கு கெப்பிட்டிக்கொலாவ படுகொலை மேற்கொள்ளப்பட்டமை இவ்வாறான ஒரு பாணியிலேயே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி: தமிழ்நாதம்.கொம்

Monday, August 14, 2006

கொழும்பில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பாகிஸ்தான் இராஜதந்திரிகள் சென்ற வாகனத்தொடரணியின் வாகனம் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது. இதில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி லிபேட்டி வட்டத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.50 மணிக்கு இக் குண்டுத்தாக்குதல் நடந்துள்ளது.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை பாகிஸ்தான் இராசதந்திரிகள் 4பேர் சந்தித்துவிட்டு திரும்பிய போது அவர்களின் வாகனத் தொடரணியின் பாதுகாப்புப் பிரிவினர் மீது இக் குண்டுத் தாக்குதல் நடந்துள்ளது.

இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 3 பேரும் இராணுவத் தொலைத் தொடர்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று கொழும்புச்செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி: புதினம்

Saturday, August 12, 2006

பலாலி படைத்தளம் மீது புலிகள் விமானத் தாக்குதல்

யாழ். பலாலி சிறிலங்கா படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பலாலி படைத்தளம் மீது இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் விடுதலைப் புலிகள் தங்களது விமானம் மூலம் ரொக்கெட்டுக்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் ஒரு விமானம் ஈடுபடுத்தப்பட்டதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விமானத் தாக்குதலைத் தொடர்ந்து பலாலி படைத்தளத்திலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தி வந்த எறிகணைத் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.

"எமது தாயகத்தையும் மக்களையும் பாதுகாக்க எமது முப்படையினரையும் நாம் பயன்படுத்துவோம்" என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் அறிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னரங்க நிலைகளையொட்டிய இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் உள்ள பொதுமக்கள் இடம்பெயர்ந்து செல்லுமாறு விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரல் வேண்டுகோள் விடுத்து வருகிறது.

எழுதுமட்டுவாள், புலோப்பளை, கிளாலி, கொடிகாமம், கச்சாய், வரணி ஆகிய இடங்களில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் 1 கிலோ மீற்றர் தூரம் இடம்பெயர்ந்து செல்லுமாறு வேண்டுகோள் புலிகளின் குரல் வானொலியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஏ-9 வீதியை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவம் தொடர்ச்சியான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனிடையே யாழில் இரவு 7 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யாழ். சிறிலங்கா காவல்துறை அதிகாரி எரிக் பெரேரா அறிவித்துள்ளார்.

பலாலி சிறிலங்கா படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் சிறிலங்கா விமானப்படை உலங்குவார்திகள் இரண்டு சேதம் அடைந்துள்ளதாக சிறிலங்கா விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படையின் எம் - 24 ரக பீரங்கி உலங்குவானூர்தி, பெல் - 2 1 2 ரக துருப்புக்காவி உலங்குவானூர்தி ஆகியன சேதமடைந்துள்ளதாக சிறிலங்கா விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.

நன்றி: புதினம்

Thursday, August 10, 2006

மாவிலாறில் கடும் சண்டை-பொது மக்கள் பலர் பலி

திருகோணமலை மாவிலாறை நோக்கி சிறிலங்காப் படையினர் இன்று ஆரம்பித்துள்ள பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையின் போது விமானப் படையினர் நடத்திய கண்மூடித்தனமான குண்டுவீச்சுத் தாக்குதலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

திருகோணமலை கல்லாறு இராணுவ முகாமிலிருந்து மாவிலாறை நோக்கி பல்லாயிரக்கணக்காக சிறிலங்கா இராணுவ காலாற்படையினர் இன்று பிற்பகல் பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது ஈச்சிலம்பற்று மற்றும் கதிரவெளி பகுதிகளை நோக்கி கண்மூடித்தனமான ஆட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இராணுவத்துடன் இணைந்து விமானப் படையினரும் தாக்குதல்களை நடத்தினர்.

முன்னேறி வரும் படையினரை வழிமறித்து விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை நடத்துகின்றனர்.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் சண்டை மூண்டுள்ளதாகவும் பல மணி நேரமாக சண்டை நடைபெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏறிகணை மற்றும் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களில் உயிரிழந்த சுமார் 50 பொதுமக்களின் சடலங்கள் ஈச்சிலம்பற்றுப் பகுதியில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இன்றைய மோதலில் படுகாயமடைந்த சுமார் 23 படையினர் கந்தளாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் ஒன்பது படையினர் பொலநறுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மோதலில் சுமார் 45 படையினர் காயமடைந்துள்ளனர் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவித்தது. விடுதலைப் புலிகள் தரப்பு இழப்புக்கள் குறித்து இதுவரை தெரியவரவில்லை.

நன்றி: புதினம்