Sunday, August 27, 2006

திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு

தீவிரமடையும் படுகொலைகள்
- திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு -
(தாயகன்)

படுகொலைக்களமாக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் இராணுவ புலனாய்வுப் பிரிவினராலும் அவர்களோடு இணைந்த துணை இராணுவ குழுக்களினாலும் பல அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சு, ஆட்லறி, மல்ரிபரல் தாக்குதல்களில் 200 இக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் திட்டமிட்ட படுகொலைகள் உச்ச நிலையை அடைந்துள்ளன.

கடந்த இருவாரங்களில் மட்டும் யாழ். குடாநாட்டில் 20 இற்கும் மேற்பட்டவர்களும் கிழக்கில் 30 இற்கும் மேற்பட்டவர்களும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் இலக்கு வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கிழக்கில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையே ஏற்பட்ட மாவிலாறு சமருக்கு பின்னரும் வடக்கில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையே ஏற்பட்ட முகமாலை சமருக்கும் பின்னரே இளைஞர், யுவதிகள், தமிழ் ஆர்வலர்கள், வர்த்தகர்களென பலர் அதி உச்சவேகத்தில் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்தப் படுகொலைகளின் பின்னே இனசுத்திகரிப்பும் மிகப் பெரியதொரு இராணுவ நலனும் தொக்கி நிற்கின்றது.

முகமாலையில் போர்க்களத்தை திறந்த இலங்கை அரச படைகள் விடுதலைப் புலிகளின் உக்கிர பதிலடியால் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகள் சிலவற்றை இழந்ததுடன் உயிர், உடைமை பேரழிவுகளையும் சந்திக்க வேண்டியேற்பட்ட அதேவேளை, குடாநாட்டைப் பறிகொடுக்க வேண்டியேற்படுமோ என்ற அச்சநிலையையும் ஏற்படுத்தியது.

இதனால், தமது படைகளையும் குடாநாட்டையும் பாதுகாத்துக்கொள்ள மக்களை கேடயமாக்கிய படைகள் இன்று வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் ஸ்தம்பிக்கச் செய்து பெரும் யுத்த பீதியொன்றுக்குள் அவர்களை வைத்துள்ளது. இதனொரு கட்டமாக உளவியல் போர் ஒன்றை குடாநாட்டில் ஆரம்பித்துள்ள அரச படைகளின் புலனாய்வுக் குழுக்கள், படுகொலைகளையும் ஆட்கடத்தல்களையும், தினசரி அரங்கேற்றிக் கொண்டிருக்க, சுற்றி வளைப்புகள், தேடுதல்கள், போராட்ட நினைவுச் சின்னங்களை அழித்தல், கொள்ளையிடல் என பொதுமக்களை பீதியில் உறைய வைக்கும் முயற்சியில் இராணுவமும் ஈடுபட்டுள்ளது. குடாநாட்டில் மட்டும் 120 இற்கு மேற்பட்ட பிரமுகர்கள், புத்திஜீவிகள், தமிழ் ஆர்வலர்கள், விடுதலையுணர்வுடையவர்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் கொலைப் பட்டியலில் உள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கும் அதேவேளை, அதனை மெய்ப்பிக்கும் வகையில், பலர் கொல்லப்பட்டுமுள்ளனர்.

காங்கேசன்துறை மக்கள் வங்கிக் கிளை முகாமையாளர் பொன். கணேசமூர்த்தி, நமது ஈழநாடு பத்திரிகை நிறுவன நிர்வாக முகாமையாளரும், தெல்லிப்பழை ப.நோ.கூட்டுறவு சங்கத் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான `மாமனிதர்' சிவமகாராசா உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள அதேவேளை, இராணுவத்தின் படுகொலைகளை அம்பலப்படுத்திய அல்லைப்பிட்டி பங்குத் தந்தை நிஹால் ஜிம்பிறவுன் உட்பட பலர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளமையைக் குறிப்பிடலாம்.
அத்துடன், பல காலமாக குறிவைத்திருந்த யாழ். பல்கலைக்கழகத்தினுள் தற்போதைய யுத்தநிலையைப் பயன்படுத்தி உள்நுழைந்த இராணுவ படைகள் அங்கு பாரிய சுற்றி வளைப்பை நடத்தியதுடன் மாணவர் ஒன்றியத் தலைவராக தெரிவாகவிருந்த பகீரதன் என்ற மாணவனைக் கைது செய்து காங்கேசன்துறை தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர். இச்சுற்றி வளைப்பின்போது, பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் போரில் உயிர் நீத்த மாவீரரின் நினைவுச் சின்னத்தையும் சிதைத்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட செய்தியை பெரும் பரப்புரையாக மாற்றிய தென்னிலங்கை அரச ஊது குழல்கள் புலிகளின் கோட்டையாகவும் இரகசியமறை விடமாகவும் திகழ்ந்த யாழ். பல்கலைக்கழகத்தை சுற்றி வளைத்த இராணுவத்தினர் அங்கிருந்து கண்ணிவெடிகள் மற்றும் பல வெடி பொருட்களையும் விடுதலைப் புலிகளின் உபகரணங்கள் பலவற்றையும் கைப்பற்றியதாக வாய்க்கு வந்தபடி கூறினர்.

இதேபோன்றே முகமாலையில், புலிகளிடம் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்குமுகமாக முல்லைத்தீவில் வல்லிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது கொடூர வான் தாக்குதலை நடத்தி அங்கு முதலுதவி பயிற்சி பெற வந்திருந்த 61 பாடசாலை மாணவிகளை படுகொலை செய்து 150 இற்கும் மேற்பட்ட மாணவிகளை படுகாயப்படுத்திய அரசு கொல்லப்பட்ட அனைவரும் புலிகளென பிரசாரப்படுத்த முயன்று தற்போது மூக்குடைப்பட்ட நிலையிலுள்ளது.

1995 ஆம் ஆண்டு குடாநாட்டைக் கைப்பற்றிய போது தமிழ் மக்கள் தமது உயிரிலும் மேலாக போற்றி வணங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள், மாவீரர்களின் சிலைகள், நினைவுச் சின்னங்களை அழித்து இராணுவ நெறிமுறைக்கே அவமானத்தை ஏற்படுத்திய இலங்கை இராணுவத்தினர் தற்போது மீண்டும் அவ்வாறான போர் விதிமுறைகளுக்கு மாறான இழிவான வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுச் சின்னத்தை சிதைத்த இராணுவத்தினர், விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலியான கப்டன் மில்லருக்கு நெல்லியடிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தையும் இடித்தழித்துள்ளனர். இனி அடுத்ததாக அவர்கள் மாவீரர் துயிலுமில்லங்களை இலக்கு வைப்பார்களென்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லை.

இவ்வாறான செயல்கள் மூலம் மக்களிடையே பாரியதொரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி தமது சில நோக்கங்களை நிறைவேற்றவே இராணுவம் முயற்சிக்கின்றது. குடாநாட்டுப் போர் ஒரு முடிவுக்கு வரும் வரை இந்த படுகொலைகள், காணாமல் போதல்கள் தொடரவே செய்யும். யார் யாரெல்லாம் தமக்கு எதிராக செயற்படுகிறார்களென இராணுவ புலனாய்வுப் பிரிவு தீர்மானிக்கின்றதோ அவர்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக்கப்படும். குடாநாட்டை பாதுகாக்க வேண்டுமானால் பொதுமக்களை நசுக்க வேண்டுமென்பதை தற்போதைய இராணுவ தந்திரமாக அரசு கடைப்பிடிக்கின்றது. இதனால் இன்னும் பலரின் உயிர்களுக்கு உலை வைக்கப்படும் செயல்கள் தொடரவே போகின்றன.

இதேபோன்ற படுகொலைகளே கிழக்கிலும் இடம்பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் பல இளைஞர்கள் வீதிகளிலும் வீடுகளிலும் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். திருகோணமலையில் வர்த்தகர்களே இலக்கு வைத்துப் படுகொலை செய்யப்படுகின்றனர். கடந்த வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு பாலமீன் மடுப் பகுதியில் வைத்து 5 இளைஞர்கள் ஒரேயடியாக விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இராணுவ துணைக்குழுவினரால் கடத்தப்பட்ட இளைஞரொருவரை பவள் கவச வாகனத்தில் ஏற்றி வந்த இராணுவத்தினர் வலையிறவு பாலத்தடியில் இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளொன்றை கொடுத்து புலிகளின் பகுதிக்கருகே சென்று என்ன நடக்கிறதென பார்த்து வருமாறு மிரட்டியுள்ளனர். உயிருக்கு அஞ்சிய அந்த இளைஞர் இராணுவம் கொடுத்த மோட்டார் சைக்கிளில் புலிகளின் பகுதிக்கு அருகே சென்ற போது, அவ்விளைஞனுக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிளில் பொருத்தியிருந்த குண்டை இராணுவத்தினர் வெடிக்க வைத்துள்ளனர். இதில் அவ்விளைஞன் உடல் சிதறிப் பலியானார். இதனை தென்னிலங்கை ஊடகங்கள் புலிகள் மீது கருணா குழுவின் கரும்புலித் தாக்குதலென பெரும் பிரசாரத்தை முன்னெடுத்தன.

இதேபோன்றே முன்னொரு தடவையும் ஆட்டோவொன்றில் குண்டைப் பொருத்திவிட்டு இரு இளைஞர்களை அதில் அனுப்பி இராணுவம் படுகொலை செய்தபோதும் அதனை இந்த பேரினவாத ஊடகங்கள் கருணா குழுவின் கரும்புலித் தாக்குதலென பிரசாரப் படுத்தியபோது கருணா குழுவின் ஊடக பேச்சாளரான தூயவன் இதனை முற்றாக மறுத்திருந்தார். தாம் இவ்வாறான தாக்குதல்களை ஒருபோதும் நடத்துவதில்லையென அவர் கூறியதன் மூலம் இதன் பின்னணியில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகள் உள்ளமை தெளிவாகின்றது. கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் மற்றும் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுகளிலேயே அதிகளவு படுகொலைகள் இடம்பெறுகின்றன. அண்மையில் வாழைச்சேனை கறுவாக் கேணிப் பகுதியில் ஒன்றரை வயது குழந்தையொன்று கூட சுட்டுக்கொல்லப்பட்டது. பல வீடுகள் எரியூட்டப்பட்டன.

பலர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். பலருக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கான போக்குவரத்துககள், மின்சாரம், உணவுப் பொருட்கள், சுகாதார உதவிகள், மட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, அப்பகுதிகளை நோக்கி ஆட்லறித் தாக்குதல்களும் விமானக் குண்டு வீச்சுகளும் நடத்தப்படுகின்றன. இதனால், பல பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்த பலர் மட்டக்களப்புக்கு வந்து சிகிச்சை பெற முடியாத நிலையிலுள்ளனர்.

இதேவேளை, அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களில் பணிபுரிவோரும் அண்மைக் காலமாக இலக்கு வைத்து சுட்டுக் கொல்லப்படுகின்றனர். மூதூரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்றின் 17 பணியாளர்கள் இராணுவத்தினரால் நிலத்தில் படுக்க வைத்து கைகளை தலைக்கு மேலே வைக்குமாறு கூறி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று வவுனியாவில் ஐ.சி.ஆர்.சி.யில் பணிபுரியும் யுவதியொருவரும் மட்டக்களப்பு திருக்கோவில் பகுதியில் ஐ.நா. அலுவலக ஊழியரொருவரும் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகளுக்கு சார்பாக செயல்படுவதாக அரசு குற்றம் சாட்டி வரும் நிலையிலேயே தற்போது அதில் பணிபுரியும் தமிழ் ஊழியர்கள் படுகொலை செய்யும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொது மக்களை நெருக்கடிக்குள் தள்ளி பலிக்கடாக்களாக்குவதன் மூலம் புலிகளின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த இராணுவ தரப்பினர் முயற்சிக்கின்றனர். ஆனால், இவ்வாறான அணுகு முறைகளே மக்களை விடுதலைப் புலிகள் பக்கம் நகர்த்தி பெரும் வளர்ச்சியடைய வைத்ததென்பதை எந்தவொரு சிங்கள ஆட்சியாளரும் இன்று வரை புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

நன்றி: தினக்குரல் (27 ஆகஸ்ட் 2006)

0 பின்னூட்டங்கள்: