Saturday, August 12, 2006

பலாலி படைத்தளம் மீது புலிகள் விமானத் தாக்குதல்

யாழ். பலாலி சிறிலங்கா படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பலாலி படைத்தளம் மீது இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் விடுதலைப் புலிகள் தங்களது விமானம் மூலம் ரொக்கெட்டுக்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் ஒரு விமானம் ஈடுபடுத்தப்பட்டதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விமானத் தாக்குதலைத் தொடர்ந்து பலாலி படைத்தளத்திலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தி வந்த எறிகணைத் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.

"எமது தாயகத்தையும் மக்களையும் பாதுகாக்க எமது முப்படையினரையும் நாம் பயன்படுத்துவோம்" என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் அறிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னரங்க நிலைகளையொட்டிய இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் உள்ள பொதுமக்கள் இடம்பெயர்ந்து செல்லுமாறு விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரல் வேண்டுகோள் விடுத்து வருகிறது.

எழுதுமட்டுவாள், புலோப்பளை, கிளாலி, கொடிகாமம், கச்சாய், வரணி ஆகிய இடங்களில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் 1 கிலோ மீற்றர் தூரம் இடம்பெயர்ந்து செல்லுமாறு வேண்டுகோள் புலிகளின் குரல் வானொலியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஏ-9 வீதியை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவம் தொடர்ச்சியான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனிடையே யாழில் இரவு 7 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யாழ். சிறிலங்கா காவல்துறை அதிகாரி எரிக் பெரேரா அறிவித்துள்ளார்.

பலாலி சிறிலங்கா படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் சிறிலங்கா விமானப்படை உலங்குவார்திகள் இரண்டு சேதம் அடைந்துள்ளதாக சிறிலங்கா விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படையின் எம் - 24 ரக பீரங்கி உலங்குவானூர்தி, பெல் - 2 1 2 ரக துருப்புக்காவி உலங்குவானூர்தி ஆகியன சேதமடைந்துள்ளதாக சிறிலங்கா விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.

நன்றி: புதினம்

1 பின்னூட்டங்கள்:

said...

நன்றிகள்.

யாழ் செய்திகளை அறிந்து கொள்ள:
cinthanai-sei.blogspot.com/2006/08/blog-post_11.html