Thursday, August 17, 2006

வடக்கில் கடும் மோதல்

சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலுக்கு எதிராக இராணுவ முன்னரண் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் செறிவான தாக்குதலை நடத்தி படைத்தரப்புக்கு இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.

கிளாலி முதல் முகமாலை வரையான முன்னரண் பகுதிகளில் இந்த தாக்குதல் நேற்று பிற்பகல் 3 மணிமுதல் இன்று அதிகாலை 1.30 மணிவரை நீடித்தது.

இராணுவத்தினருக்கு எதிராக செறிவான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். இதில் இராணுவத் தரப்பில் 70-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 120-க்கும் அதிகமான இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

மேலும் யாழ். பலாலி படைத்தளம் மீது தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை நடத்தி வருவதாக தெரிகிறது.

பலாலி விமானத் தளத்தில் நேற்று புதன்கிழமை இரவு பாரிய குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்களுக்குப் பின்னர் புதன்கிழமை இரவு பலாலி தளம் நோக்கி விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

பலாலி படைத்தளத்துக்கு மேலாக நேற்று இரவு வானில் தீப்பிழம்புகள் கொழுந்துவிட்டெரிந்துள்ளன.

பலாலி படைத்தளத்துக்குள் நேற்று இரவு 6.45 மணி முதல் 2 மணி நேரத்துக்கும் மேலாக குண்டுவெடிப்புக்களும் ரொக்கெட் வீச்சுகளும் நீடித்துள்ளன. முன்னதாக பலாலி படைத்தளத்துக்குள் சிறிலங்கா விமானப் படை விமானம் தரையிறங்க முயற்சித்து அதன் பின்னர் திரும்பிச் சென்றது.

நேற்று புதன்கிழமை நள்ளிரவில் பாரிய குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் பலாலி விமானத்தளத்திலிருந்து உலங்குவானூர்திகள் புறப்பட்டுச் செல்லும் சத்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக் குண்டுவெடிப்புச் சத்தங்களையடுத்து பலாலி தளத்திலிருந்து நடத்தப்பட்டு வந்த எறிகணை மற்றும் பல்குழல் உந்துகணைத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பலாலியை அண்மித்த கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும் பலாலி படைத்தளத்தை நோக்கிய விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல் இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு மீண்டும் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

நன்றி: புதினம்
மேலும் தகவல்கள்: TamilNet

0 பின்னூட்டங்கள்: