Thursday, August 10, 2006

மாவிலாறில் கடும் சண்டை-பொது மக்கள் பலர் பலி

திருகோணமலை மாவிலாறை நோக்கி சிறிலங்காப் படையினர் இன்று ஆரம்பித்துள்ள பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையின் போது விமானப் படையினர் நடத்திய கண்மூடித்தனமான குண்டுவீச்சுத் தாக்குதலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

திருகோணமலை கல்லாறு இராணுவ முகாமிலிருந்து மாவிலாறை நோக்கி பல்லாயிரக்கணக்காக சிறிலங்கா இராணுவ காலாற்படையினர் இன்று பிற்பகல் பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது ஈச்சிலம்பற்று மற்றும் கதிரவெளி பகுதிகளை நோக்கி கண்மூடித்தனமான ஆட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இராணுவத்துடன் இணைந்து விமானப் படையினரும் தாக்குதல்களை நடத்தினர்.

முன்னேறி வரும் படையினரை வழிமறித்து விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை நடத்துகின்றனர்.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் சண்டை மூண்டுள்ளதாகவும் பல மணி நேரமாக சண்டை நடைபெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏறிகணை மற்றும் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களில் உயிரிழந்த சுமார் 50 பொதுமக்களின் சடலங்கள் ஈச்சிலம்பற்றுப் பகுதியில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இன்றைய மோதலில் படுகாயமடைந்த சுமார் 23 படையினர் கந்தளாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் ஒன்பது படையினர் பொலநறுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மோதலில் சுமார் 45 படையினர் காயமடைந்துள்ளனர் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவித்தது. விடுதலைப் புலிகள் தரப்பு இழப்புக்கள் குறித்து இதுவரை தெரியவரவில்லை.

நன்றி: புதினம்

0 பின்னூட்டங்கள்: