Saturday, September 02, 2006

செயலற்ற சொற்களும் முறையற்ற செயற்பாடுகளும்

செயலற்ற சொற்களும் முறையற்ற செயற்பாடுகளும்
சபேசன் (அவுஸ்திரேலியா)

சிறிலங்கா அரசின் சிங்கள பெளத்த பேரினவாதச் செயற்பாடுகளும், அரச பயங்கரவாத நடவடிக்கைகளும் மறைத்து வைக்க முடியாதவாறு இப்போது மிக வெளிப்படையாகவே நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகவோ என்னவோ சில உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் தற்போதைய நிலை குறித்து விசனம் தெரிவித்து வருகின்றன.

இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகிய நாடுகள் கூட்டாகவும், தனித்தனியாகவும் கவலை தெரிவித்துள்ளதுடன் சமாதானப்பேச்சு வார்த்தைகளை உடனடியாக இருதரப்பினரும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்களை விடுத்து வருகின்றன.

ஐக்கிய நாடுகளின் சார்பாக அதன் செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாக வேண்டியதன் அவசியத்தை அதிபர் ராஜபக்சவிற்கு வலியுறுத்தியுள்ளார். இதேபோல் கனடா உட்பட பல நாடுகள் சமாதானப் பேச்சு வார்த்தைகளின் அவசியத்தையும் அவசரத்தையும் வலியுறுத்தியுள்ளன.

இவற்றோடு மட்டுமல்லாது மூதூரில் பிரான்ஸ்-அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டமை குறித்து சுயாதீனமான சர்வதேச அளவிலான விசாரணைகள் சிறிலங்கா அரசு நடாத்த வேண்டும் என்று இணைத் தலைமை நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் அதிபர் ராஜபக்சவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளன. வடக்கு-கிழக்கு பகுதிகளில் இடம் பெயர்ந்த மக்களுக்கான நிவாரண உதவிகள் முறையாகச் சென்றடைவதற்குச் சிறிலங்கா அரசு அனுமதியளிக்க வேண்டும் - என்றும் இவை கேட்டுக் கொண்டுள்ளன.

இன்னுமொரு பரிமாணமாக தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனை குறித்தும் வெளிப்படையாகவே பல உலக நாடுகளும் அமைப்புக்களும் இப்போது பேச ஆரம்பித்துள்ளதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் அமெரிக்க உதவிச் செயலாளர் றிச்சட் பெளச்சர் ((Richard Boucher)) என்பவர் தமிழ் மக்களுக்கு நியாயமான சட்டபூர்வமான அரசியல் வேட்கைகள் உண்டென்பதையும் அவர்களுடைய தாயகபூமிக் கோரிக்கைக்கு நியாயம் உண்டு என்பதையும் வெளிப்படையாக ஒப்புப் கொண்டுள்ளார். இதேபோல் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ((Human Rights Watch)) ஆசிய இயக்குனர் பிராட் அடம்ஸ் (Brad Adams) என்பவரும் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை ஏற்றுக்கொண்டு அறிக்கையன்றை வெளியிட்டிருந்தார். இவ்வாறு வேறு சில உலக நாடுகளும் தமிழர் பிரச்சனைகளைத் தாம் புரிந்து கொள்வதாக அண்மைக் காலத்தில் கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளதையும் நாம் அவதானிக்கின்றோம்.

இத்தகைய அறிக்கைகளையும் செய்திகளையும் கேட்கின்ற எம்மவர் மத்தியில் - குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் மத்தியில் - சமாதானத்தீர்வு மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுவது நியாயமாகாதுதான்.

உலக நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் குறித்துக் கவலையும் விசனத்தையும் தெரிவித்து வருகின்றன.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக சமாதானத்தீர்வு ஒன்றை அடையவேண்டும் என்றும் இவை வற்புறுத்தி வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ் மக்களுக்கு நியாயமான சட்டபூர்வமான அரசியல் வேட்கைகள் உண்டென்பதையும் அவர்கள் தனிநாடு கோருவதற்கு அடிப்படை நியாயங்கள் உண்டு என்பதையும் இவை ஏற்றுக்கொள்கின்றன. ஆகவே இம்முறை நியாயமான சமாதானத்தீர்வு கிட்டக்கூடும் என்று எம்மவர் எதிர்பார்க்கக்கூடும். இதே கருத்தைத்தான் பல அரசியல் ஆய்வாளர்களும் ஊடகங்களும் எழுத ஆரம்பித்திருப்பதை நாம் அவதானிக்கின்றோம்.

ஆனால் நாம் இந்த எதிர்பார்ப்பு எண்ணங்களிலிருந்து முற்றாக மாறுபடுகின்றோம். அது மட்டுமல்லாது இந்தச் செயலற்ற சொற்பிரயோகங்களுக்குப் பின்னால் உள்ள முறையற்ற செயற்பாடுகளையும் எண்ணிப் பார்க்கின்றோம். அதன் காரணமாக நாம் முன்னரையும் விட எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும் என்றும் எமது வாசகர்களுக்கு இந்த வேளையில் வேண்டுகோளும் விடுக்கின்றோம்.

ஆகவே இது குறித்துச் சில விடயங்களைத் தர்க்கிப்பது அவசியமாகின்றது.

சிறிலங்கா அரசு குறித்து விசனம் தெரிவித்தும் தமிழ் மக்களின தேசியப் பிரச்சனை குறித்து ஆதரவான கருத்துக்களை தெரிவித்தும் வருகின்ற இந்த வெளிச்சக்திகளில் பெரும்பான்மையானவை கூடவே இன்னுமொரு விடயத்தையும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தி வருவதையும் நாம் இவ்வேளையில் பொருத்திப் பார்க்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தமிழ் மக்கள் ஆதரவு வழங்கக்கூடாது என்றும் விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்த வெளிச்சக்திகள் வலியுறுத்தி வருவதையும் நாம் அவதானிக்கின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளோடுதான் சிறிலங்கா அரசு சமாதானப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள வேண்டும் - என்று கூறுகின்ற இந்த வெளிச்சக்திகள் அதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தமிழ் மக்கள் ஆதரவு வழங்கக் கூடாது என்று கூறி வருவதானது எத்தகைய முரணான விடயம்? இந்த வலியுறுத்தலின் பின்புலம் தான் என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என்று தமிழ் மக்களையே கேட்டுக் கொள்கின்ற இந்த வெளிச்சக்திகள் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு ஏதாவது ஆதரவை வழங்கி வந்துள்ளனவா? இந்த வெளிச்சக்திகள் இதுவரை காலமும் சிறிலங்கா அரசுகளுக்கு அல்லவா தமது ஆதரவை வழங்கி வந்திருக்கின்றன? சிறிலங்கா அரசுகள் தமிழ் மக்களை கொன்று குவித்தும், பொருளாதார உணவு மருந்துத் தடைகள் ஊடாக பட்டினி போட்டும் வந்துள்ள காலங்களின் போதெல்லாம் இந்த வெளிப்படை சக்திகள் சிறிலங்கா அரசுகளுக்குத் தமது வெளிப்படையான ஆதரவினை நல்கி ஆயுத தளபாடங்களையும் சிங்கள அரசுக்கு அள்ளிக் கொடுத்ததையும் தமிழ் மக்கள் அறிவார்கள்.

இன்று விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பரப்புரை செய்கின்ற இந்த வெளிச்சக்திகள் அன்று சிறிலங்கா அரசிற்கு அளித்திட்ட ஆதரவும் உதவியும்தான் தமிழ் மக்கள் அழிவுக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கியது என்பதும் வரலாற்று உண்மையல்லவா?

சிறிலங்கா அரசுகள் தங்கள் சொந்தப் பலத்தினுடும் பின்னர் வெளிநாடுகள் தந்த நிதியுதவி மற்றும் ஆயுதப் பலங்களோடும் தமிழ் மக்களை ஒடுக்கி அழித்து வந்த காலங்களில் இந்த வெளிச்சக்திகள் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளுக்காகக் குரல் கொடுக்கவில்லை. தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காக சாத்வீக முறையில் அரசியல் வழியில் ஜனநாயக ரீதியாகப் போராடிய போதெல்லாம் சிறிலங்கா அரசுகள் அவற்றை வன்முறை கொண்டு அடக்கின. அப்போதும் இந்த வெளிச்சக்திகள் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக கருத்துச் சொல்ல முன்வரவில்லை.

தமிழர்களின் உரிமைப்போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமையின் கீழ் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்த பின்னர்தான் இந்த உலக நாடுகள் திரும்பிப் பார்க்க தொடங்கின. அப்போதும் இந்த வெளிச்சக்திகள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்கவில்லை. தொடர்ந்தும் சிறிலங்கா அரசுகளை ஆதரித்து வந்த வெளிச்சக்திகள் தங்களுடைய தொடர்ச்சியான நிதியுதவியூடாகவும் ஆயுத உதவியூடாகவும் சிறிலங்கா அரசுகள் தமிழ் மக்களை அழிப்பதற்கு உதவியும் வந்தன.

களமுனைகளில் விடுதலைப் புலிகள் சில பின்னடைவுகளைச் சந்தித்தபோது சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள் என்று இந்த வெளிச்சக்திகள் குரல் கொடுக்கவில்லை. ஒரு போர் நிறுத்த உடன்படிக்கையைச் செய்வதற்கு இவை ஓடோடி வரவில்லை. கண்காணிப்புக்குழுவொன்றை அமைப்பதற்கு யோசனையும் வழங்கவில்லை. மாறாக அப்போதும் தொடர்ந்தும் சிங்கள அரசுகளுக்கு நிதி உதவியையும் ஆயுத உதவியையும் இந்த வெளிச்சக்திகள் கொடுத்து வந்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிறிலங்கா அரசின் பாரிய இராணுவ நடவடிக்கைகளை முறியடித்ததோடு மட்டுமல்லாது தன்னுடைய இராணுவ நடவடிக்கைகள் மூலம் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள் பலவற்றை வென்றெடுத்து நிதர்சனமான அரசாங்கம் ஒன்றையும் சிறப்பாக நிர்வகிக்கத் தொடங்கிய பின்னர்தான் இந்த வெளிச்சக்திகளும் வெளிச்சத்திற்கு வரத்தொடங்கின. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் தமிழ் மக்கள் பலமாக இருக்கின்றார்கள் என்பதால் இன்று சமாதானப்பேச்சு வார்த்தைகளும் ஆரம்பமாகின.

இன்று தமிழ் மக்கள் விடுதலை புலிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று சில வெளிச்சக்திகள் கூறுவதோடு அதற்கான காரணங்களையும் தெரிவித்தும் வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறைகளை கைவிட்டு சிறிலங்காவின் ஜனநாயக முறையைக் கைக்கொண்டு அதனனூடாகத் தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். இதனை செய்வதற்கு விடுதலைப் புலிகள் முன்வராத பட்சத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைப் புறக்கணிக்க வேண்டும்- என்று இந்த வெளிச்சக்திகள் இப்போது கூற ஆரம்பித்துள்ளன.

சிறிலங்காவின் அரசுகள் உண்மையான ஜனநாயக நெறியை கடைப்படிககாததன் காரணமாகத்தான் தமிழீழ மக்கள் தம்முடைய போராட்ட வடிவை மாற்றினார்கள். அடிப்படையில் தமிழர்களுடைய போராட்டம் சிறிலங்காவின் அநீதியான ஜனநாயகத்திற்கு எதிராக எழுந்த போராட்டமேயாகும். எந்த அநீதிக்கு எதிராகப் போராட்டம் நடைபெறுகின்றதோ அந்த அநீதியையே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று இந்த வெளிச்சக்திகள் கூறுகின்றன.சிறிலங்காவின் ஜனநாயக மரபுகள் சிங்கள-பெளத்த நலனை மட்டுமே பேணுபவையாகும். சிறிலங்காவின் அரசியல் யாப்பு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரானதாகும். சிறிலங்கா அரசுகளின் அரசியல் நிறைவேற்று திட்டங்கள் தமிழ் மக்களின் தேசிய நலனுக்கு எதிரானவையாகும். FOREMOST CONSTITUTIONAL AUTHORITY ON COMMONWEALTH CONSTITIUTIONS PROFESSOR S.A.D.SMITH என்பவர் சிறிலங்காவின் அரசியல் யாப்பை கடுமையாக கண்டித்துள்ளதோடு மட்டுமல்லாது சிறிலங்காவின் யாப்பு சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாது மிக அண்மையில் சிறிலங்காவிற்கான பிரித்தானிய உதவித் தூதுவர் திரு DOMINIC JOHN CHILCOTT அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், பிரித்தானியா அரசாங்கம் கொடுத்துச் சென்ற அரசியல் யாப்பு இலங்கைத் தமிழ் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் வலிமையற்றது என்று கூறியிருந்தார் அந்த பாதுகாப்பற்ற அரசியல் யாப்பை பி;ன்னர் வந்த சிறிலங்கா அரசுகள் இன்னும் மிக மோசமான விதத்தில் தமிழர்களுக்கு எதிராக மாற்றியமைத்ததைத்தான் போராசிரியர் S.A.D.SMITH கண்டித்திருந்தார்.

இப்படிப்பட்ட ஜனநாயக விரோத வழிமுறையோடு கலந்து தமிழர்களின் உரிமைகளை விடுதலைப் புலிகள் பெறவேண்டும் என்று இந்த உலக நாடுகள் இப்போது உபதேசம் செய்ய ஆரம்பித்துள்ன. இந்த உலக நாடுகளுக்குத் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகள் குறித்து இன்னும் சரியான தெளிவு வரவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. அது மட்டுமல்லாது இன்னுமொரு முக்கிய கேள்வியும் எமக்குள் எழுகின்றது.தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று புதிதாக பரப்புரை செய்ய ஆரம்பித்துள்ள இந்த வெளிச்சக்திகள் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்குப் பெற்றுத் தந்தது என்ன?ஒன்றுமேயில்லை!!

சரி, தங்கள் செல்லப்பிள்ளையான சிறிலங்காவிடமிருந்து தமிழ் மக்களுக்கு எதுவும் பெற்றுக் கொடுக்க முடியாது போயிருந்தாலும் அதற்காக ஏதாவது உருப்படியான முயற்சிகளையாவது இந்த உலக நாடுகள் எடுத்திருக்கின்றவா? கடந்த பெப்ருவரி மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது ராஜபக்சவின் அரசு ஏற்றுக் கொண்டவாறு ஒட்டுக்குழுக்களின் ஆயுதக் களைவுகள் மேற்கொள்ளப்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் சிறிலங்கா அரசால் செம்மையாக கடைப்பிடிக்கப்பட்டதா? இல்லையே!

இது குறித்து சிறிலங்கா அரசு மீது முறையான அழுத்தம் எதையும் இந்த உலக நாடுகள் மேற்கொண்டனவா? இல்லையே!

இன்றைய தினம்வரை இந்த உலக நாடுகள் சிறிலங்கா அரசுகள் மீது எந்தவிதமான உரிய அழுத்தங்களையும் தடைகளையும் விதிக்காமல் இருப்பதன் காரணமாகத்தான் இன்று இலங்கையில் சமாதானம் கிட்டாமல் யுத்தம் தொடர்ந்து நடைபெறுகின்றது.

மக்கள் - சுதந்திரப் போராட்டமானது மிகச் சரியான பாதையில் பயணித்து வெற்றிகளைப்பெற ஆரம்பிக்கின்ற போது அந்தப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக அந்த போராட்டத்தை நடாத்துகின்ற இயக்கத்தையும் தலைமையையும் கொச்சைப்படுத்துவது இந்த உலக நாடுகளின் வழக்கமாகும். மதிப்புக்குரிய நெல்சன் மண்டெலாவையும், அவரது இயக்கத்தையும் பயங்கரவாதிகள் என்று அழைத்ததும் இந்த உலகநாடுகள் தான். மக்களிடமிருந்து நெல்சன் மண்டெலாவின் இயக்கத்தைப் பிரிக்க முனைந்த மேற்குலகம் பின்னர் தோற்றுப் போனது.

இன்று வெளிச்சக்திகள் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பிரிப்பதற்கு வீணான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மக்கள் வேறு, புலிகள் வேறு அல்ல என்பதை இவர்கள் உணர்ந்தும் உணராதது போல் நடந்து வருகின்றார்கள்.

ஆகவே தமிழ் மக்கள்மீது அனுதாபம் காட்டுகின்ற செயலற்ற சொற்களை சொல்லிக் கொண்டு அதேவேளை தமிழ் மக்களுக்கு எதிரான முறையற்ற செயற்பாடுகளையும் இந்த சம்பந்தப்பட்ட உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. சிறிலங்கா அரசு மீதுமட்டுமல்ல இந்த உலக நாடுகள் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு இந்த உலக நாடுகள் உரியவற்றைச் செய்ய முன்வர வேண்டும். இல்லாவிட்டாலும் தமிழீழ போராட்டம் தன் வழி சென்று தன் இலட்சியத்தை அடையும். ஏனென்றால் இது மக்கள் போராட்டம்!. தமிழீழ மக்களின் போராட்டம்!! புலத்தின் பலமும் களத்தில் கைகொடுக்கும்.

நன்றி: தமிழ்நாதம்

0 பின்னூட்டங்கள்: