Sunday, September 17, 2006

மரியதாஸ் படுகொலை - முழுமையான விசாரணை வேண்டும்

மரியதாஸ் படுகொலை தொடர்பாக முழுமையான விசாரணையை கோருகிறது சோசலிச சமத்துவ கட்சி

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.க.க.) உலக சோசலிச வலைத்தளமும், சோ.ச.க. ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ் கிழக்கு மாவட்டமான திருகோணமலையில் ஆகஸ்ட் 7 அன்று படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டனம் செய்கின்றன. இந்தப் படுகொலை பற்றிய ஒரு முழு விசாரணையையும் மற்றும் இந்தக் குற்றத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடருமாறும் கோரும் எமது பிரசாரத்திற்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுப்பதாக இக்கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள், கொலையாளிகள் இலங்கை இராணுவம், பொலிஸ் அல்லது இவற்றோடு சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுக்களின் உறுப்பினர்களே என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டமையானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்துக்குள் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கையின் வட, கிழக்கில் வாழும் வெகுஜனங்களை அச்சுறுத்திப் பயமுறுத்துவதன் பேரில் நடத்தப்படும் பிரசாரத்தின் ஒரு பாகமாகும். இந்தப் பிரசாரத்தின் குறிக்கோள் யுத்தத்தை நனவுடன் எதிர்ப்பவர்களை மௌனமாக்குவதாகும் என்றும் அக்கட்சி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 வயதான மரியதாஸ் புகைப்படவியலை தனது தொழிலாகக் கொண்டிருந்ததோடு திருகோணமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள முள்ளிப்பொத்தான என்ற கிராமப்புற நகரில் ஒரு ஸ்டூடியோவையும் தொலைத்தொடர்பு நிலையத்தையும் நடத்தி வந்தார். அன்றாடம் வேலைக்காக பயணிப்பது சிரமமாகையால், அவர் கொல்லப்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர்தான் தனது மனைவி ஸ்டெல்லா கிருஷாந்தி மரியதாஸையும் தனது மூன்று வயது மகனையும் அழைத்துக்கொண்டு நகரில் சென்று குடியேறியிருந்தார்.

மரியதாஸ் ஆகஸ்ட் 7 இரவு 7.45 மணிக்கு வீடு திரும்பினார். சுமார் இரவு 9.30 மணியளவில், இரவு சாப்பாட்டை முடித்தவுடன், யாரோ ஒருவர் `மரியதாஸ் அண்ணா' என கூப்பிடுவதைக் கேட்டவுடன் கதவுக்கருகில் சென்றார். அவர் கதவை அண்டியவுடனேயே துப்பாக்கிதாரி அவரை நெற்றியிலும் கழுத்திலும் சுட்டான். அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.

சூட்டுச் சத்தத்தைக் கேட்டவுடன் சமயலறையிலிருந்து விரைந்த அவரது மனைவி ஸ்டெல்லா கிருஷாந்தி, மரியதாஸ் நிலத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டார். கட்டை கால்சட்டையும் டீ சேர்ட்டும் மற்றும் ஹெல்மட்டும் அணிந்திருந்த கொலையாளி கேட்டை நோக்கி ஓடுவதை அவர் கண்டார். மதில் மேல் ஏறிக் குதித்த கொலையாளி காத்திருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டான்.

கிருஷாந்தி உதவி கேட்டு சத்தமிடுவதைக் கேட்ட அயலவர்கள் இரு ஊர்காவற்படையினருடன் வீட்டுக்கு வந்தனர். அரை மணித்தியாலயத்தின் பின்னர் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் இருந்தும் அலுவலகர்கள் வந்துசேர்ந்தனர். கிருஷாந்தியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட அவர்கள், மரியதாஸின் உடலை 10 கிலோமீற்றர் தெற்காகவுள்ள கந்தளாய் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அடுத்தநாள் ஆஸ்பத்திரியில் நீதவான் விசாரணை நடந்ததோடு வழமையான ஒரு தீர்ப்பும் வெளியிடப்பட்டது. அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகள் செ்ய்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார். பூர்வாங்க விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்தப் படுகொலை நடந்துள்ள சூழ்நிலையானது பிரதேசம் முற்றிலும் யுத்தப் பிராந்தியத்தில் அமைந்துள்ளதோடு துருப்புகள், பொலிஸ் மற்றும் ஊர்காவற் படையினரின் கண்காணிப்பிலுள்ள பிரதேசமாகும். இரவில் பயணிக்கும் எவரும் வழமை போலவே வீதித் தடைகளில் சோதனைக்குட்படுத்தப்படுவர்.

ஆகஸ்ட் 5, மரியதாஸ் படுகொலை செய்யப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர், பிரான்ஸை தளமாகக் கொண்ட அக்ஷன் பாம் அரச சார்பற்ற நிறுவனத்தின் 17 உள்ளூர் தொண்டர்கள் மூதூரில் கொல்லப்பட்டிருந்தனர். 15 சடலங்கள் இந்த நிறுவனத்தின் வளாகத்தில் வரிசையாகக் கிடந்தன. இவர்கள் மரணதண்டனை பாணியில் தலையில் சுடப்பட்டிருந்தனர். தப்பி ஓட முயற்சித்த ஏனைய இருவர் பின்புறம் சுடப்பட்டுக்கிடந்தனர். யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்கும் இலங்கை கண்காணிப்புக் குழு தனது சொந்த விசாரணைகளின் பின்னர், ஆகஸ்ட் 30 அன்று இந்தக் கொலைகளுக்கு இராணுவமே பொறுப்பு என உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

கடந்த நவம்பரிலிருந்து நடந்த பல அவலங்களில் ஒன்றான மூதூர் படுகொலைகள், யுத்தத்தின் இனவாத பண்பைக் கோடிட்டுக் காட்டுகின்றன. பேரினவாதத்தில் தோய்ந்து போயுள்ள பாதுகாப்புப் படைகள் தமிழ் சிறுபான்மையினரை எதிரிகளாக நடத்துகின்றன. சிங்கள தீவிரவாத கட்சிகள் வடக்கு மற்றும் கிழக்கில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களை `புலி ஆதரவாளர்கள்' என மீண்டும் மீண்டும் கண்டனம் செய்து வந்துள்ளன.

இருநாட்களின் பின்னர், இந்த நச்சுத்தனமான அரசியல் காலநிலையின் மத்தியிலேயே மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலைக்கு அருகில் அவரது ஊரான செல்வநாகயப்புரத்தில் ஆகஸ்ட் 09 அவரது இறுதிக் கிரியைகள் நடந்தபோது, அந்தப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளிலில் ரோந்து சென்ற பாதுகாப்புப் படையினர் மக்களை அங்கு செல்லாமல் தடுக்க முயற்சித்தனர்.

இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்பவர்களை அச்சுறுத்தும் முயற்சிகள் இருந்தபோதிலும், கிட்டத்தட்ட 500 தமிழ் சிங்கள மக்கள் அதில் கலந்துகொண்டு தமது மரியாதையை செலுத்தினர். ஏனையவர்களுக்கு உதவுவதிலும் சமூக நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதிலும் பேர் போன மரியதாஸ் ஒரு பிரசித்திபெற்ற இளைஞராவார்.

மரியதாஸ் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அல்ல. அவர் சோ.ச.க.யின் அரசியல் நடவடிக்கையில் பகிரங்கமாக பங்குகொள்ளாவிட்டாலும், அவர் புலிகளின் பிரிவினைவாத முன்நோக்குக்கு அன்றி, கட்சியின் அரசியல் வேலைத்திட்டத்துடனேயே உடன்பாடுகொண்டிருந்தார். யுத்தம் 1983 இல் தொடங்கியதில் இருந்தே அதை எதிர்த்து வருவதிலும் மற்றும் சிறீலங்கா - ஈழம் சோசலிசக் குடியரசிற்காக தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதிலும், சோ.ச.க. மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் நீண்டகால போராட்டத்தை மரியதாஸ் பெரிதும் மதித்தார்.

மரியதாஸ் ஐந்து வருடங்களுக்கு முன்னர் சோ.ச.க. உடன் தொடர்பு கொண்டார். அவர் தொடர்ந்தும் உலக சோசலிச வலைத் தள தமிழ் கட்டுரைகளை வாசித்ததோடு தன்னால் முடிந்த சகல சந்தர்ப்பங்களிலும் அதன் நிருபர்களுக்கு உதவினார். அவரும் அவரது குடும்பத்தாரும் எமது நிருபர்களுக்கு உணவும் தங்குமிடமும் வழங்கியுள்ளனர். அவர்களது நிர்ணயம் ஆபத்தானதாக இருந்தால், தானும் அவர்களோடு சேர்ந்து வரவேண்டும் என அவர் வலியுறுத்துவார். அவரது பரந்த எண்ணிக்கையிலான நண்பர்கள் மற்றும் தொடர்புகள் மூலம் அவரால் எப்பொழுதும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் மற்றும் பேட்டிகளை ஒழுங்கு செய்யவும் முடிந்தது. அவர் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், அவர் வலைத்தளத்துக்காக மூதூர் அகதி ஒருவரை பேட்டிகாண ஏற்பாடு செய்து தந்தார். இலங்கையில் நடப்பது என்ன என்பதை சர்வதேச வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையிலான ஒரு யதார்த்தமான சித்திரத்தையே அவர் விரும்பினார்.

அவர் யுத்தத்திற்கு எதிரான தனது எதிர்ப்பை மிகவும் சாதாரணமாக வெளிப்படுத்தினார். "பாருங்கள், நாம் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் இங்கு நெருக்கமான பிணைப்புடனும் உறவுடனும் வாழ்கின்றோம். இந்த மூன்று தரப்பிலும் உள்ள ஒரு சிறு அளவானவர்கள் இங்கு வந்து தமது சொந்த முன்னேற்றத்திற்காக இனவேற்றுமைகளை கிளர்கிறார்கள்" யுத்தத்தை கடுமையாக எதிர்ப்பதோடு அனைத்து ஆளும் வர்க்கத்தின் மீதும் பகைமையுணர்வு கொண்ட அவர், "இந்த யுத்த்தில் உயிரிழப்பது சாதாரண தமிழர்களும் அப்பாவி சிங்கள பொது மக்களும், அதேபோல் படையினருமே ஆகும்", என கூறுவார். அவர் சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத்தளத்தாலும் ஈர்க்கப்பட்டது தற்செயலானது அல்ல.

மரியதாஸுக்கு தனிப்பட்ட எதிரிகள் கிடையாது. அவரது குடும்பத்தார் அவரை முல்லிப்பொத்தானையில் குடியேற வேண்டாம் என கூறியபோது, உள்ளூர் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் தன்னுடைய நண்பர்களாக இருப்பதால் நான் பயப்பட வேண்டியதில்லை என மரியதாஸ் கூறியிருந்தார். அவர் யுத்தத்தின் வெளிப்படையான எதிரி என்பதாலேயே கொல்லப்பட்டார். அவரது படுகொலை, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தீவை இனவாத யுத்த புதைச் சேற்றுக்கு வெளியே ஒரு முற்போக்கான அரசியல் பாதையைத் தேடும் ஏனையவர்களையும் பீதிக்குள்ளாக்கும் நடவடிக்கையாகும்.

சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், மரியதாஸ் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றஞ்சாற்றப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தைக் கோரும் சர்வதேச பிரசாரம் ஒன்றை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக ஆட்பேசனைக் கடிதங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரிகள்:

Inspector General of Police Chandra Fernando, Police Headquarters, Colombo 1, Sri Lanka, Fax : 0094112446174, Email :igp@police.lk, Attorney General K.C.Kamalasabeyson, Attorney General's Deparment, Colombo 12, Sri Lanka, Fax: 0094112436421.

நன்றி: தினக்குரல்

0 பின்னூட்டங்கள்: