Sunday, September 24, 2006

தமிழ் எம்பிக்களை மன்மோகன்சிங் சந்திக்காதது ஏன்?

தமிழ்க் கூட்டமைப்புப் பிரதிநிதிகளை மன்மோகன்சிங் சந்திக்காதது ஏன்?
- (அஜாதசத்ரு)

இலங்கையின் உள்ளூர் அரசியல் விவகாரங்களில் மாத்திரமன்றி பொருளாதார விடயங்கள் உட்பட அனைத்து விடயங்களிலும் ஆரம்பகாலம் தொடக்கம் தனது ஆளுமையைச் செலுத்தி வரும் அயல் நாடான இந்தியா இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தற்போது மௌனமான போக்கொன்றை கடைப்பிடித்து வரும் இன்றைய போக்கானது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கவலையளிப்பதாகவேயுள்ளது.

இந்தியாவில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தங்கியுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு தரப்பினர் ஊடாகவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்கு முயற்சித்த போதிலும் வெள்ளிக்கிழமை வரை அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

கியூபாவில் நடைபெற்ற அணிசேரா மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியவுடன் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உறுதி மொழி வழங்கியதையடுத்து புதுடில்லியில் காத்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர்.

அதேநேரம் இந்தியப் பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஈ.அஹமட் மற்றும் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முக்கியஸ்தர்களையும் சந்திக்கும் வாய்ப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள போதிலும் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அகில இந்திய காங்கிரஸ் கட்சி என்பவற்றின் முக்கியஸ்தர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் இறுதி நேரத்தில் இல்லாமல் செய்யப்பட்டமை இலங்கைத் தமிழர்கள் மீதான இந்தியாவின் ஈடுபாடு தொடர்பில் பெரும் விசனத்தை தோற்றுவித்துள்ளது.

இதெல்லாவற்றுக்குமப்பால் அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் சென்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவினர் தமிழகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ உட்பட ஏனைய ஈழத்தமிழர் ஆதரவுக் குழுக்களின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்துள்ள போதிலும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவியும், முன்னாள் முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா ஆகியோரையும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது.

1991 மே மாதம் பெரம்புதூரில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்ட கசப்பான உணர்வலைகள் படிப்படியாக நீங்கி தற்போது முற்று முழுதான ஆதரவான நிலைப்பாடு தோன்றியுள்ள நிலையில், இந்திய மத்திய அரசினதும் தமிழகத்தினதும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்துள்ளமையானது ஈழத்தமிழர்கள் மத்தியில் மாத்திரமன்றி தமிழகத்திலும் பெரும் சீற்றத்தை உருவாக்கியுள்ளது.

உலகத் தமிழர்களின் தலைவரென்று தன்னைத்தானே புகழ்பாடிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் இன்றைய முதலமைச்சரான கலைஞர் மு.கருணாநிதி ஈழத்தமிழர் விவகாரத்தில் இரட்டைப் போக்கொன்றைக் கடைப்பிடிப்பதாகவே குற்றஞ்சாட்டப்படுகின்றது.

கடந்த ஆறு மாதகாலப்பகுதியில் தமிழகத்திற்கு தஞ்சம் தேடிச் சென்றுள்ள 14 ஆயிரம் அகதிகள் சொல்லும் சோகக்கதைகளைக் கேட்டுக் கண்ணீர் வடிப்பதாகக் கூறும் தமிழர் முதல்வர் கலைஞர் கருணாநிதி இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடைப்பிடித்த கர்ண கடூரமான போக்கையே தனது ஆட்சியிலும் கடைப்பிடித்து வருகின்றார் என்பதே அவருடைய அண்மையகால நடவடிக்கைகள் மூலம் தெளிவாக உணரக்கூடியதாகவுள்ளது.

தமிழகத்திற்கு தஞ்சம் தேடிச் சென்றுள்ள அகதிகளில் சமூக விரோதிகள் உள்ளதாகக் கூறி தமிழக பொலிஸ்படை மற்றும் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு விசேட அதிகாரம் வழங்கி தஞ்சம் தேடிச் சென்றுள்ள ஈழத்தமிழ் அகதிகளை விசாரணையென்ற பேரில் துன்புறுத்திக் கொடூரம் விளைவிக்கும் நடவடிக்கையிலும் தமிழகத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் செயற்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈழத்தமிழ் மக்களின் இன்றைய அவலநிலை குறித்து முறையிடச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு மறுத்து வரும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பையும் தடை செய்வதற்கான நடவடிக்கைகளிலும் பிரதான பங்கெடுத்தவர் என்றும் தமிழகத்தில் பரவலாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது முழுமையான பங்களிப்பைச் செலுத்தி வந்த அயல்நாடான இந்தியா இன்றைய மிக மோசமான நெருக்கடியான கால கட்டத்திலும் கூட மௌனப் போக்கொன்றைக் கடைப்பிடிப்பதன் உள்நோக்கம் எதைக் காட்டுகிறது?

மேலும் வாசிக்க: தினக்குரல்

2 பின்னூட்டங்கள்:

said...

சந்திப்புக்கு அனுமதி கொடுத்துதான் அவர்கள் வந்தார்கள், வந்தபின்னர் சந்திக்க மறுத்து அவரது உறுதியற்ற தன்மையைக்காட்டுகிறது, அல்லது அவருக்கு ஏதாவது பின் அழுத்தங்கள் இருந்திருக்கலாம். உலகத்தமிழின தலைவர் கலைஞராவது சந்திக்கிறாரா பாப்போம்.

said...

இந்தியர்கள் தொடக்கத்திலேயே மறுத்திருந்தால் இப்போரையே தடுத்திருக்கலாம், தொடக்கிவிட்டு கூத்து பார்க்கிறார்கள், Chickens... chickens... இழந்தது ஈழ மக்கள் தான்...