Saturday, September 23, 2006

தமிழ் எம்.பி.க்களை சந்திப்பதை மன்மோகன் தவிர்ப்பு

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களை சந்திப்பதை மன்மோகன் தவிர்ப்பு

சம்பந்தன் தலைமையிலான குழ நேற்று இரவு சென்னை திரும்பியது
இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புக்காக கடந்த சில தினங்களாக புதுடில்லியில் காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும், அவரைச் சந்திக்க இயலாமல்போனதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை அங்கிருந்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்குப் புறப்பட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான இத் தூதுக்குழு நேற்றும் இந்தியப் பிரதமருடனான சந்திப்புக்காக பல மணி நேரமாகக் காத்திருந்தது. சந்திப்பு நிச்சயம் இடம்பெறும் என்பதற்கான அறிகுறிகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலையில் தென்பட்டதையடுத்து நம்பிக்கை கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று ஏமாற்றமே கிட்டியது. ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு சாத்தியப்படாது போனதால் பெரும் விசனமடைந்த அவர்கள் புதுடில்லியை விட்டு நேற்று மாலை புறப்பட்டனர்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மேயில் கொலை செய்யப்பட்டதையடுத்து இலங்கைத் தமிழ்த் தரப்புக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட கசப்புணர்வுகளை அகற்றி புதியதொரு அத்தியாயத்தைத் திறப்பதற்காக புதுடில்லியுடன் நெருக்கமான தொடர்புகளுக்கு ஆவல் கொண்டிருந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலாநிதி சிங்குடனான சந்திப்பு கைகூடாததால் பெரும் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.

இந்தியப் பிரதமரைச் சந்திக்கத் தவறியது ஏன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜாவிடம் இந்தியச் செய்தியாளர்கள் கேட்டபோது, `இது மிகவும் உணர்ச்சி பூர்வமான ஒரு விவகாரம். இது குறித்து நாம் கருத்துக் கூறவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சை இது குறித்து கேட்டோம்' என்று பதிலளித்தார். எவ்வாறெனினும், பொருத்தமான தருணமொன்றில் கலாநிதி சிங்கைச் சந்திப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

கலாநிதி சிங்கிடம் கையளிப்பதற்காக வைத்திருந்த மகஜரை இந்திய அரசாங்க அதிகாரிகளிடம் கொடுத்திருப்பதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார். சந்திப்பு நடைபெறாததற்கான காரணம் குறித்து புதுடில்லி வட்டாரங்கள் எதையும் கூறவில்லை.
இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட மகஜரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்காக மகஜரில் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் புதுடில்லியுடன் நெருக்கமான தொடர்புகளை மீளவும் ஏற்படுத்துவதிலும் அக்கறை காட்டப்பட்டிருந்தது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை அரசாங்கம் தமிழர்களை இனப் படுகொலை செய்வதாகவும் 2002 பெப்ரவரி போர் நிறுத்த உடன்படிக்கையை படுமோசமாக மீறுவதாகவும் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மைய இராணுவ நடவடிக்கைகளினால் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நேரடி மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு இந்தியாவிடம் அந்த மகஜர் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. தமிழ் நாட்டுக்கு தப்பியோடி வந்த ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக புதுடில்லிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மகஜரில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடில்லிக்கு செல்வதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுக் குழுவினர் சென்னையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியையும் சந்திக்க முடியவில்லை என்பது தெரிந்ததே. எவ்வாறெனினும், இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையும் வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட்டையும் வியாழனன்று அவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தக் கூடியதாயிருந்தது.

நன்றி: தினக்குரல், 23 செப் 2006

1 பின்னூட்டங்கள்:

said...
This comment has been removed by a blog administrator.