Sunday, June 11, 2006

மன்னாரில் நடந்த அராஜகம்!

மன்னாருக்கு தென்கிழக்கே சுமார் 15 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வங்காலை பத்தாம் வட்டாரம் தோமஸ்புரி கிராமத்தில் ஒரு இளம் குடும்பத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் அவர்களது இரு பச்சிளம் குழந்தைகளும் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்தோ அல்லது நீதித்துறையிடமிருந்தோ ஒரு போதும் `உண்மையான நீதியை' எதிர்பார்க்க முடியாது.

ஆனால், தொடரும் இவ்வாறான மிக மோசமான நாகரிகமற்ற மிகக் கொடூரமான அப்பாவி தமிழ் மக்கள் மீதான படுகொலைச் சம்பவங்கள் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பாக இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அதிக ஈடுபாட்டைக் கொண்டுள்ள அயல் நாடான இந்தியா மற்றும் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் மௌனம் சாதித்தால் இரக்கமற்ற மனிதர்கள் வாழும் உலகமொன்றிலேயே உள்ளோம் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படுவார்கள்.

போர்நிறுத்த உடன்படிக்கை மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை என்பன கைச்சாத்திடப்பட்டதற்கு பின்னரான சுமார் மூன்று வருடகாலம் மன்னார் மாவட்டத்திலேயே மிகக் குறைந்தளவிலான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன.
மாவட்டமாக மன்னார் மாவட்டம் உள்ளதென்று போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் கடந்த ஒரு வருடகாலத்தில் மன்னார் மாவட்டம் மிக மோசமான மனித அவலங்களை அரச படையினரின் எதிர்த்தாக்குதல் சம்பவங்களால் எதிர்கொண்டு வருகின்றது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் உச்சநிலையை அடைந்திருந்த யுத்த காலங்களில் மன்னார் மாவட்டத்திலிருந்து தமிழகத்திற்கு உயிர் அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்து அங்குள்ள அகதி முகாம்களில் மிக மோசமான, துன்பகரமான, அவல வாழ்க்கையை எதிர்கொண்டிருந்த மன்னார் மாவட்ட மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு சமாதான காலத்தில் திரும்பி வந்து இயல்பு வாழ்க்கையை எதிர்கொண்டிருந்த வேளையில் தற்போது தொடரும் மனித அவலங்கள் அச்சத்தையும் பயப்பீதியையும் தோற்றுவித்துள்ளன.

அதுமட்டுமன்றி அயல்நாடான இந்தியாவுக்கு மீண்டும் பாதுகாப்பு தேடி நகரப்போகும் அகதிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கலாமென்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஒரு மாதகாலப்பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதல் மற்றும் நேரடி மோதல் சம்பவம் என்பவற்றுக்கு பின்னர் அடிக்கடி அப்பகுதிகளிலுள்ள கிராமங்களை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தும் படையினர் பல இளைஞர்களை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதுடன் ஒரு குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாகவும் மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்புக்குழு, மாவட்ட பிரஜைகள் குழு என்பவற்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனைவிட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் படையினர் பொது மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொள்வதுடன் பெண்கள் மீதான பாலியல் ரீதியான இம்சைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், நள்ளிரவு வேளைகளில் இப்பகுதிகளுக்குள் ஊடுருவும் ஆயுதம் தாங்கிய நபர்களின் அச்சுறுத்தல் காரணமாகவும் வங்காலைப் பங்குத்தந்தையிடம் முறையிட்ட பின்னர் இரவு வேளைகளில் அங்குள்ள தேவாலயங்களில் தஞ்சமடைந்து காலை வேளையிலேயே தமது வீடுகளுக்கு திரும்பினர்.

இவ்வாறானதோர் படையினரின் அச்சமூட்டு நிலைமைகளுக்கு மத்தியில் தான் கடந்த வியாழக்கிழமை இரவு பாதுகாப்புத்தேடி வங்காலை புனித தேவாலயத்திற்கு செல்லாமல் தமது வீட்டில் தங்கியிருந்த இளம் குடும்பத்தினர் கோரத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தச்சுத்தொழிலாளியான மூர்த்தி மார்ட்டின் (வயது 38) அவரது மனைவியான மேரி மெட்டலின் சித்திரா (வயது 27) இவர்களது குழந்தைகளான ஆன் லக்ஷிகா (வயது 9), ஆன் டிலக்ஷன் (வயது 7) ஆகியோர் மிருகத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கணவனும் இரு குழந்தைகளும் உடலின் பல பாகங்களிலும் கூரிய ஆயுதங்களால் குத்திக்கிழிக்கப்பட்ட நிலையில் வீட்டிலுள்ள அறையொன்றில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தனர்.

மனைவி மிகக் குரூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் உடலின் பல பாகங்களிலும் கூரிய ஆயுதத்தால் குத்திக் கிழிக்கப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.

வங்காலை தேவாலயத்தில் தங்கியிருந்து விட்டு மறுநாள் காலை தமது வீட்டுக்கு வந்த கொல்லப்பட்ட பெண்ணின் சகோதரி குறிப்பிட்ட வீட்டுக்கு சென்று கதவைத் திறந்து பார்த்தபோது அங்கு கண்ட காட்சிகள் ஊர் மக்கள் அனைவரையும் திரண்டெழச் செய்யுமளவிற்கு கதறியழ வைத்துள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவத்தை கேள்வியுற்ற அப்பகுதி பொது மக்கள் திரண்டு வந்து அங்கு வந்த கண்காணிப்புக்குழு பிரதிநிதிகள், மாவட்ட நீதிபதி உட்பட முக்கிய பிரமுகர்களிடம் இந்தக் கொலைக்கு படையினரே காரணமென்று தெரிவித்துள்ளனர்.
இதனைவிட சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் படையினருக்கு எதிராகவும் கோஷமெழுப்பினர்.

தமது தங்கையின் குடும்பத்தினர் மீதான படுகொலைச் சம்பவத்திற்கு படையினரே காரணமென்று அவரது சகோதரியும் அயலவர்களும் முறையிட்டுள்ளனர்.
இதனைவிட, பாலியல் வக்கிரத்தனமான நோக்குடன் சென்ற படையினராலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் சர்வதேச சமூகம் தான் இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முன்வர வேண்டுமென்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வருட முற்பகுதியில் பேசாலை நூறு வீட்டுத் திட்டம் பகுதியில் கடற்படையினர் மீதான கிளேமோர் தாக்குதல் சம்பவத்தையடுத்து அப்பகுதியிலுள்ள பொது மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவங்களில் பத்துக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததுடன் 20 இற்கு மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
கடற்படையினரால் இவ்வாறு எரிக்கப்பட்ட வீடொன்றிலிருந்து ஒரு குழந்தை இளம் தாய் உட்பட பலரது எரியுண்ட அங்கங்களின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டபோதும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த மூன்று மாதகாலப் பகுதியில் மன்னாரின் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பலர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போன ஒரு குடும்பஸ்தரின் சடலம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மன்னார் உப்புக்குளம் கடற்கரையில் இரு உரப் பைகளுக்குள் முட்கம்பிகளால் சுற்றப்பட்ட நிலையில், கரையொதுங்கியதும் கவனிக்கத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்திலிருந்து அரச படையினரதும் சிங்கள பெரும்பான்மையினக் காடையர்களினதும் அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் மன்னாருக்கு வந்து அங்கிருந்து தமிழகத்திற்கு படகுகள் மூலம் அகதிகளாக தப்பியோடுபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ள நிலையில் நொந்து போன மக்களை மேலும் பீதியூட்டுவதாகவே இந்தப் படுகொலைச் சம்பவம் அமைந்துள்ளது.

அல்லைப்பிட்டியிலும் இவ்வாறே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கணவன் மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் பூர்த்தியாகும் நிலையில் மீண்டுமொரு துயரம் வங்காலையில் இடம்பெற்றுள்ளது.
விசாரணைகள் நடைபெறும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று ஒவ்வொரு சம்பவங்களின் பின்னரும் அரசாங்கம் அறிக்கைவிடுவதைத் தவிர இதுவரை நீதியாக என்ன நடவடிக்கையெடுத்துள்ளது?

உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இலங்கையின் உள் விவகாரங்களில் அக்கறை செலுத்தும் சர்வதேச சமூகம் அரச பயங்கரவாதத்தின் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டுவர என்ன செய்யப்போகிறது?

நன்றி: தினக்குரல்

0 பின்னூட்டங்கள்: