Sunday, October 08, 2006

பேச்சுக்களைத் தவிர்ப்பதற்கு புலிகளைச் சீண்டும் அரசு

பேச்சுக்களைத் தவிர்ப்பதற்கு புலிகளைச் சீண்டும் அரசு

-விதுரன்-

இலங்கையில் மீண்டும் சமாதானப் பேச்சுகள் சாத்தியமாகுமா? படை வலுச் சமநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதும் அரசு, புலிகளை மேலும் பலவீனப்படுத்துவதன் மூலம் பேச்சுகளை இல்லாது செய்துவிடலாம் அல்லது பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் பேரம் பேசும் ஆற்றலை வெகுவாகக் குறைத்து விடலாமெனக் கருதுகிறது.

அடுத்த சுற்றுப் பேச்சுக்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவித்து, பேச்சுகள் நடைபெறும் இடத்தைத் தெரிவு செய்யும் முயற்சியில் நோர்வே அனுசரணையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கையிலேயே மீண்டும் கடுஞ் சமர் வெடித்துள்ளது.

வடக்கு - கிழக்கில் போர்முனைக்குச் செல்லப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போதை சமர்கள் குறித்து உடனடியாகத் தங்களால் எதுவித முடிவையும் தெரிவிக்க முடியாதிருப்பதாக கண்காணிப்புக் குழு கூறிவருகிறது. ஆனாலும், இதற்கு முன்னர் வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற ஆக்கிரமிப்பு சமர்கள் குறித்து கண்காணிப்புக் குழு கடுமையான நிலைப்பாடெதனையும் எடுக்காதது, தற்போது மேலும் பல சமர்களுக்கு வழிவகுத்துள்ளது. இதனால் இங்கு கண்காணிப்புக் குழு என்ன செய்கிறதென்ற கேள்வியும் எழுந்துள்ளது.

புலிகள் மிகவும் பலவீனமடைந்திருப்பதாக அரசும் படைத்தரப்பும் கருதுகின்றன. மற்றொரு பேச்சுவார்த்தையானது, அவர்கள் தங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வழங்கப்படும் கால அவகாசமென்றே அரசு கருதுகிறது. இதனால், புலிகளுடன் பேச்சுக்குச் செல்வதை விட போருக்குச் செல்வதிலேயே அரசு தீவிர ஆர்வம் காட்டுகிறது.

இதற்கு வசதியாக அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவினத்தை இரண்டு மடங்காக்கியுள்ளது.

சமாதானப் பேச்சுகளை குழப்புவதிலும் புலிகளை தொடர்ந்தும் சீண்டுவதிலும் நோர்வே அனுசரணையாளர்களை விரட்டுவதிலுமே தென்பகுதி தீவிர ஆர்வம் காட்டுகிறது. இதன்மூலம் பேச்சுக்கான வாய்ப்பை இல்லாது செய்து முழு அளவில் மீண்டும் யுத்தத்தைத் தொடக்கி புலிகளைத் தோற்கடித்து விடலாமென அவர்கள் கருதுகின்றனர்.

போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட நாள் முதல் புலிகளுக்கெதிராக தீவிர பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உடன்பாட்டைப் பயன்படுத்தி, புலிகள் ஆயுதங்களைக் கடத்தி வந்து குவிப்பதாகவும் படையணிகளுக்கு ஆட்களைப் பெருமளவில் சேர்த்து வருவதாகவும் கடந்த நான்கு வருடங்களாக இந்தக் குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டு வந்தது.

ஆனால், இன்னமும் போர் நிறுத்த உடன்பாடு முறிவடையாத நிலையிலும், முழு அளவில் போர் தொடங்காத நிலையிலும் புலிகள் பற்றி அரசும் படைத்தரப்பும் இனவாதிகளும் கூறிவருபவை பெரும் ஆச்சரியமாகவேயுள்ளது. புலிகள் மிகவும் பலவீனமடைந்துவிட்டார்கள், அவர்களிடம் ஆயுதபலமில்லை, ஆட்பலமும் வெகுவாகக் குறைந்துவிட்டது, போரிடும் ஆற்றலுமில்லை, புலிகள் தோற்கடிக்கப்பட முடியாதவர்களென கடந்த 20 வருடங்களாக தவறான எண்ணத்தில் இருந்துவிட்டோம், அவர்கள் மிக விரைவில் தோற்கடிக்கப்படக் கூடியவர்களென்றெல்லாம் பெரும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

அப்படியாயின், இந்தப் போர் நிறுத்த காலத்தில் புலிகள் ஆயுதங்களைக் கடத்தி வந்து குவித்ததாகவும், படையணிகளுக்கு அவர்கள் ஆயிரக் கணக்கில் ஆட்களைச் சேர்த்துள்ளதாகவும் போர் நிறுத்த உடன்பாட்டைப் பயன்படுத்தி அவர்கள் தங்களைப் பெருமளவில் கட்டியெழுப்பியுள்ளதாகவும் தென்பகுதியிலும் சர்வதேச ரீதியிலும் ஏன் பெரும் பிரசாரங்கள் செய்யப்பட்டன.

அங்கீகரிக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில் அங்கீகரிக்கப்படாத போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்த உடன்பாட்டின் அனைத்து விதிகளும் மீறப்பட்டுவிட்டன. ஆனாலும், போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருப்பதாகக் கூறப்படுகிறது. புலிகளுக்கிடையே ஏற்பட்ட சிறுபிளவைப் பயன்படுத்தி கருணா குழுவை உருவாக்கி அரசு நிழல் யுத்தத்தை ஆரம்பித்த போதே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமென எச்சரிக்கப்பட்டது. ஆனால், எவருமே அதனைப் பொருட்படுத்தவில்லை. நிழல் யுத்தம் ஆரம்பமான நாள் முதல் இன்று வரையிலான காலத்தை நன்கு அவதானித்தால் இது நன்று புரியும்.

போர் நிறுத்தகாலத்தில், சமாதான முயற்சிகளுக்கும் பேச்சுகளை நடத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைவிட மீண்டுமொரு போரைத் தொடங்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளே மிக அதிகம். அதுவே இன்று பெரும் போரைத் தோற்றுவிக்கப்போகிறது. வடக்கு - கிழக்கு என சகல பகுதிகளிலும் இன்று பாரிய படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்படுகின்றனர். பல்லாயிரக் கணக்கானோர் வீடு வாசல்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். எனினும், போர் நிறுத்த உடன்பாட்டின் பேரில் பொதுமக்களுக்கு எதிராக நடைபெறும் இந்த அட்டூழியங்களைத் தடுக்க எவருமே முன்வரவில்லை.

தற்பாதுகாப்புக்கான நடவடிக்கையெனக் கூறி அரச படைகள் தினமும் பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்கின்றன. புலிகளின் ஆட்லறி நிலைகளையும் மோட்டார் நிலைகளையும் அழிக்க வேண்டியிருப்பதால் அப்பகுதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறியும் படை நடவடிக்கை இடம்பெறுகிறது.

தங்கள் மீது புலிகளே தாக்குதலை நடத்தியதாகவும் தற்பாதுகாப்புக்கான நடவடிக்கையிலேயே தாங்கள் இறங்கியதாகவும் கூறி பாரிய படை நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் புலிகளை முழு அளவில் போருக்கிழுப்பதும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை இல்லாது செய்வதுமே அரசின் நோக்கமாகும்.

இணைத் தலைமை நாடுகளின் கடும் அழுத்தத்தாலேயே தற்போது அரசு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டது. ஆனாலும், பேச்சுவார்த்தையை இப்போது நடத்த அரசு விரும்பவில்லை. அதனைக் குழப்புவதற்கான முயற்சிகள் தற்போது முழு அளவில் மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்ந்தும் புலிகளின் பகுதிக்குள் பெரும் படையெடுப்பு நடத்தப்படுகிறது. புலிகளும் சில தந்திரோபாயங்களுக்காக பின் நகரும்போறது, அது படையினரின் கடும் நடவடிக்கையால் கிடைத்த வெற்றியெனவும் புலிகளால் படையினரின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியவில்லையெனவும் தென்பகுதி கருதுகிறது.

வடக்கில் அடிக்கடி தாக்குதல்களை நடத்தியவாறு கிழக்கில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு அங்கிருந்து புலிகளை விரட்டி விடலாமென அரசு கருதுகிறது. சம்பூர் உட்பட மூதூர் கிழக்கில் பல பகுதிகளிலுமிருந்து புலிகள் வெளியேறியதன் மூலம் திருகோணமலையில் புலிகளின் ஆதிக்கத்தையே இல்லாது செய்துவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது.

மூதூர் கிழக்கிலிருந்து வெளியேறிய புலிகளின் படையணிகள் வாகரைப் பகுதியை மையமாக வைத்தே தற்போது செயற்படுவதாகக் கருதும் படையினர், தொடர்ந்தும் அப்பகுதிகளில் படை நடவடிக்கைகளை மேற்கொணடு புலிகளின் ஆட்பலத்தையும் ஆயுத பலத்தையும் குறைத்து கிழக்கில் அவர்களின் செயற்பாடுகளுக்கு முடிவு கட்டிவிடலாமெனக் கருதுகிறது.

துணைப்படைகளுக்கு பலாத்காரமாக ஆட்களைச் சேர்த்து அவர்களைப் பயன்படுத்தி அங்கு தொடர்ச்சியாக படுகொலைகளை மேற்கொள்வதும் மக்களை மிரட்டித் தொடர்ந்தும் அச்சத்தின் பிடியில் வைத்திருந்து அங்கு நடைபெறும் தாக்குதல்களையெல்லாம் துணைப்படைகளே மேற்கொள்வது போன்றதொரு தோற்றப்பாட்டை வெளியுலகில் ஏற்படுத்தி கிழக்கில் துணைப் படைகள் விரைவில் புலிகளைத் தோற்கடித்து விடுவார்களென்றதொரு மாயையை ஏற்படுத்தவும் அரசு முயல்கிறது.

இதனொரு கட்டமாகவே வெள்ளிக்கிழமை அதிகாலை திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் மட்டக்களப்பின் மாங்கேணி மற்றும் கஜுவத்தை படைமுகாம்களிலிருந்து புலிகளின் பகுதியிலுள்ள பனிச்சங்கேணிக்குள் பாரிய படைநகர்வொன்று மேற்கொள்ளப்பட்டது. வாகரையை இலக்கு வைத்தே இந்தப் பாரிய படைநகர்வு மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவசவாகனங்கள் சகிதம் பல நூற்றுக்கணக்கான படையினர் இந்தப் பாரிய நகர்வில் ஈடுபட்டிருந்தனர்.

விமானப் படை விமானங்களும் கடற்படைப் பீரங்கிப் படகுகளும் இந்தச் சமரில் கடும் தாக்குதல்களைத் தொடுத்தன. ஆரம்பத்தில் ,முன்னேறிய படையினர் மீது புலிகள் கடும் தாக்குதலைத் தொடுக்காததால் புலிகளின் பலம் குறித்துப் படையினர் தவறாகக் கணித்து மேலும் முன்னேறவே, புலிகள் உக்கிர தாக்குதலைத் தொடுத்தனர். தங்களுக்கு வாய்ப்பான பகுதியில் வைத்தே அவர்கள் இந்த உக்கிர தாக்குதலைத் தொடுத்தனர்.

இதனைச் சற்றும் எதிர்பாராத படையினரும் பின்னர் கடும் தாக்குதலைத் தொடுத்த போதும் புலிகளின் எதிர்த்தாக்குதலை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. பல மணிநேரம் நடைபெற்ற சமரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். துணைப் படையினரும் பெருமளவில் கொல்லப்பட்டனர். 15 படையினரின் சடலங்களும் 10 துணைப் படையினரின் சடலங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டதுடன் சிப்பாயொருவர் புலிகளிடம் பிடிபட்டுமுள்ளார்.

இதேநேரம் கடல் வழியாகத் தரையிறங்க முற்பட்ட போது கடற்படையினருக்கும் பலத்த சேதமேற்பட்டுள்ளது, டோரா பீரங்கிப் படகொன்றும் பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் பலத்த இழப்புகளின் பின் படையணிகள் மீண்டும் பழைய இடங்களுக்குத் திரும்பி விட்டன. ஆரம்பத்தில் இந்தத் தாக்குதலை கருணா குழுவே நடத்துவதாக படைத்தரப்பு கூறியது. பின்னர், மாங்கேணி முகாம் மீது புலிகள் தாக்கியதாகவும் படையினர் அந்தத் தாக்குதலை முறியடித்ததாகவும் கூறப்பட்டது.

அதன்பின்னர், புலிகளின் ஆட்லறி மற்றும் மோட்டார் நிலைகளை அழிப்பதற்காக படையினர் புலிகளின் பகுதிகளுக்குள் சென்றதாகக் கூறப்பட்டது. இறுதியில் படையினர் மேற்கொண்ட ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதலாலும் விமானப் படையினரும் கடற்படையினரும் மேற்கொண்ட கடும் தாக்குதலாலும் புலிகள் பனிச்சங்கேணி பகுதியிலிருந்து பின்வாங்கிச் சென்றதாகக் கூறப்பட்டது.

இந்தச் சமரில் படையினர் கடுமையான பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கிழக்கில் புலிகளின் பலம்குறித்து அவர்கள் போட்ட கணக்கு தப்புக் கணக்காகிவிட்டது. இந்தச் சமரில் புலிகளின் 22 உடல்களைக் கைப்பற்றியதாக முதலில் படைத்தரப்பு பிரசாரம் செய்தபோதும் பின்னர் அவ்வாறு எதனையும் கைப்பற்றவில்லையென ஒத்துக்கொண்டது.

பேச்சுக்கு செல்வதை விட போருக்குச் செல்ல முயலும் அரசுக்கு இந்தச் சமர் கடும் அடியாகவுள்ளது. எனினும், புலிகள் பெரிதும் பலவீனமடைந்திருப்பதாலும் அவர்களுக்கு சமாதானப் பேச்சுகள் தற்போது மிகவும் அவசியமாயிருப்பதாலும், பாரிய படை நடவடிக்கைகள் எது நடைபெற்றாலும் அவர்கள் நிச்சயம் பேச்சுக்கு வருவார்களென அரசு கருதுகிறது.

இதனால் பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் பேரம் பேசும் ஆற்றலை எந்தளவுக்குக் குறைக்க முடியுமோ அந்தளவுக்குக் குறைத்து பேச்சுவார்த்தை மேசையிலும் அவர்களைத் தோற்கடிக்க வேண்டுமென அரசு கருதுகிறது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் இயலாத நிலைமை தற்போது அரசுக்கு வாய்ப்பாகியுள்ளது. அரசினது இந்த நடவடிக்கை குறித்து இணைத் தலைமை நாடுகளும் மௌனம் சாதிப்பது அரசுக்கு வாய்ப்பாகிவிட்டது. இதனால், தற்போதைய நிலைமையை வாய்ப்பாகப் பயன்படுத்தி மேலும் மேலும் படை நடவடிக்கைகளை மேற்கொண்டு புலிகளை மேலும் மேலும் பலவீனமாக்குவதுடன் அவர்கள் வசமுள்ள பிரதேசங்களையும் கைப்பற்றியவாறு அவர்களைப் பேச்சுவார்த்தை மேசையில் பலமிழக்கச் செய்துவிடலாமென அரசு கருதுகிறது.

ஆனாலும், புலிகள் மௌனம் சாதிப்பதை எந்தத் தரப்பும் உணர்ந்து கொள்ளவில்லை. புலிகள் மிகவும் பலவீனமடைந்துள்ளதாலேயே தோல்விகளைச் சந்தித்து வருவதாகக் கருதும் அரசும் இனவாதிகளும் விரைவில் பேரதிர்ச்சிகளைச் சந்திக்கப் போகிறார்கள். இலங்கை அரசு எதற்கும் இணங்கக் கூடியதல்ல. சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனான அனுசரணையை மிக மோசமாக உதாசீனம் செய்வதை இணைத் தலைமை நாடுகள் தற்போது நன்குணர்ந்துள்ளன. இதனால் புலிகள் இனிமேல் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே இவர்களை வழிக்குக் கொண்டு வரலாமென உணரத் தொடங்கியுள்ளன.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திற்கு புலிகளும் காத்திருக்கின்றனர். அப்போது அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இலங்கை அரசுக்கு பெரும் படிப்பினையாக இருக்கும். இதனால், தற்போதும் புலிகள் பொறுமை காக்கின்றனர்.

நன்றி: தினக்குரல்

0 பின்னூட்டங்கள்: