Monday, October 09, 2006

கொழும்பில் துணை ராணுவக்குழுவின் சித்திரவதை முகாம்

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் தலங்கமவில் நடத்தப்பட்டு வரும் சித்திரவதை முகாம் குறித்து கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

மட்டக்களப்பைச் சேர்ந்த பூபாலபிள்ளை கந்தராஜா (வயது 26) என்பவர் கடத்தல் மற்றும் பணம் பறிப்பு வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்தல் தொடர்பாகவும் தலங்கமவில் கந்தராஜாவும் அவரது குழுவினரும் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடியது தொடர்பாகவும் பலமுறை காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதே கந்தராஜா முன்னர் ஒருமுறை அத்துகிரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோவினால் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு வர்த்தகரான சதாசிவம் குமாரசாமியை கடத்தி பணம் பறித்த போது குமாரசாமியின் மகன் கொடுத்த தகவலின் அடிப்படையில் கந்தராஜா கைது செய்யப்பட்டார். கொட்டாஞ்சேனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கந்தராஜாவிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டு பட்டினப்பாக்கம் காவல்துறையினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார்.

இந்த விசாரணையின் போது தான் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவைச் சேர்ந்தவர் என்றும் அக்குழுவினருடன் மேலும் இரு குழுக்கள் இணைந்து செயற்படுவதாகவும் இக்குழுவினரே கொழும்பு தமிழ் வர்த்தகர்களின் கடத்தல்களை மேற்கொண்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

கந்தராஜாவிடமிருந்து கடத்தப்பட்ட வர்த்தகர்கள் தொடர்பான விவரங்களை கொழும்பு குற்றப் பிரிவினர் பதிவு செய்து வருகின்றனர்.

மலபேயைச் சேர்ந்த ரி.நகுலேந்திரன் என்பவர் தலைமையிலான குழு ஒன்றும் கடத்தலில் ஈடுபடுவதாக கந்தராஜா கூறியுள்ளார்.

தலங்கமவில் உள்ள மற்றொரு வீட்டிலிருந்தும் மலபே வீட்டிலிருந்துதான் கடத்தப்பட்டோரை சித்திரவதை செய்துள்ளனர். இந்த இரு வீடுகளும் சிங்களவர்களிடமிருந்து வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் சிங்களவருக்குச் சொந்தமானது. தலங்கம வீட்டை காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.

இந்த வீட்டில் தங்கியிருந்தவர்கள் தமிழர்கள் என்றும் அவர்கள் சந்தேக நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்கள் என்றும் தெரிந்து காவல்துறையினரிடம் நாங்கள் தெரிவித்தோம் என்று அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

துணை இராணுவக் குழுவினரால் தான் கடத்தப்பட்டது குறித்து கொழும்பு வர்த்தகரான சதாசிவம் குமாரசாமி (வயது 51) கூறியதாவது:

கடந்த செப்ரெம்பர் 28 ஆம் நாளன்று பணியிடத்திலிருந்து வீட்டுக்கு காலை 10.15 மணிக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். புறக்கோட்டை சந்தைப்பகுதியில் சிறு அளவிலான மீன் வர்த்தகமும் காசோலை மாற்றும் பணியையும் செய்து வந்தேன்.

உந்துருளியில் ஹின்னி அப்புகாமி வீதியில் வந்து கொண்டிருந்தேன். அப்போது மற்றொரு உந்துருளியில் வந்த நபர்கள் என் வாகனத்தை நிறுத்துமாறு கூறினர்.

"குமார் அய்யா நில்லுங்கள்" என்றனர். ஆனால் நான் நிற்கவில்லை.

அப்போது வெள்ளை வான் ஒன்று என்னை கடந்தது. உந்துருளியிலிருந்து கீழே விழுந்த நான் தப்பி ஓட முயற்சித்தேன். அந்தக் குழுவைச் சேர்ந்த ஒரு இளைஞர் துப்பாக்கியால்
என் தலையில் தாக்கினார். நான் வலியால் துடித்தேன்.

அதன் பின்னர் என் வாய் கட்டப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கைக்கு கீழே வாகனத்துக்குள் இருந்தேன். என்னுடைய நகைகள் மற்றும் உடைமைகளை அவர்கள் பறித்துக் கொண்டனர்.

20 நிமிட பயண நேரத்துக்குப் பின்னர் ஒரு இராணுவ முகாம் போன்ற தோற்றமுள்ள ஒரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டேன். ஆனால் அது இராணுவ முகாம்தானா என்று தெரியவில்லை. 46-க்கு 25 அடி என்கிற அளவிலான ஒரு அறையில் நான் அடைத்து வைக்கப்பட்டேன். என்னை அழைத்துக் கொண்டு வரும் வழியில் வெள்ளை வான் ஒரு இடத்தில் நின்றது. ஆனால் அது எந்த இடம் எனத் தெரியவில்லை.

அறையினுள் இருந்த என்னை விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுப்பவராக இருந்தால் யார் பணத்தைப் பெறுவது? அது எப்படி வடக்குப் பகுதிக்குச் செல்கிறது என்று கேள்வி எழுப்பினர்.

என்னைத் தாக்கினர். நான் பதில் சொல்லாது போனால் கொன்றுவிடப்போவதாகவும் எச்சரித்தனர். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. நான் கொழும்பில் பிறந்தவன். எப்போதுமே யாழ்ப்பாணத்துக்கு சென்றது இல்லை. விடுதலைப் புலிகளையும் எனக்குத் தெரியாது.

அதன் பின்னர் இரவு 8.30 மணியளவில் முன்னரைப் போலவே என்னைக் கட்டி வெள்ளை வானில் இருக்கையின் கீழே அடைத்தனர். வானில் 10 பேர் கொண்ட குழுவினர் இருந்தனர்.

15 நிமிட நேர பயணத்துக்குப் பின்னர் வாகனம் நின்றது. 8 பேர் அதிலிருந்து இறங்கினர். அதன் பின்னர் இருவருடன் வாகனம் சென்றது. எனக்குப் பின்னால் ஒருவரும் முன்னால் ஒருவரும் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் என்னைத் தாக்கினர். அவர்களின் தாக்குதல்களால் கதறியழுது கொண்டிருந்தேன்.

என் கண்ணில் கட்டப்பட்டிருந்த துணியை சிரமப்பட்டு சற்று விலக்கிவிட்டேன். அந்த வாகனம் நாவல கொசவத்தையில் நின்றது. அந்த இரு நபர்களும் வாகனத்திலிருந்து இறங்கினர். அங்கிருந்த பல்பொருள் அங்காடிக்கு வெளியே உந்துருளியில் ஒருவர் நின்றிருந்தார். இறங்கிச் சென்ற இருவரும் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தனர்.
வலதுபுறமாக வெள்ளை வான் திரும்பி குடியிருப்புப் பகுதியை நோக்கிச் சென்றது. இரண்டு மாடி கட்டட வீடு ஒன்றில் இருட்டான பகுதிக்கு அழைத்துச் செல்லப்ப்ட்டேன்.

எனது உடைகளை கழற்றுமாறு கூறினர். பிராண வாயு கலன் ஒன்றுடன் என்னை கட்டினர். நான் விடுவிக்கப்பட வேண்டுமானால் ரூ. 10 மில்லியன் தொகை அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டனர். என்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்றனர். அதன் பின்னர் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டனர். நவராத்திரிக்காக உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறினேன். சாப்பாடும் குழம்பும் கொடுத்தனர்.

கடத்திய நபர்கள் அனைவரும் தமிழர்கள். சிங்களமும் நன்றாக பேசினர். கடத்தியவர்கள் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்களாக தோன்றினாலும் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த நபர்களும் அக்குழுவில் இருந்தனர்.

என்னைக் கடத்தியோரில் சிலர் அதிகாலை 2.30 மணிக்கு அங்கு மீண்டும் வந்து என்னைத் தாக்கி தொகை கேட்டனர். நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டாவது மாடியானது சிறப்பு சித்திரவதை முகாம் போல அமைக்கப்பட்டிருந்தது. எந்த ஒரு நபரும் உள்ளே நுழைந்தாலும் அங்கே அடைத்து வைக்கப்பட்டிருப்போர் தெரியாத வகையில் அந்த அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. நான் அங்கு அடைக்கப்பட்டிருந்தபோது 4 பேர் ஏற்கெனவே அங்கிருந்தனர்.

அதன் பின்னர் 29 ஆம் நாள் காலை 10 மணிக்கு கடத்தல்காரர்கள் என்னிடம் வந்து பணத்தை தாங்கள் பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

என்னுடைய செல்லிடப்பேசியை பயன்படுத்தி 28 ஆம் நாள் மாலை என் மகனிடம் பேசியுள்ளனர். பணத்தைக் கொடுத்தால்தான் என்னை விடுவிக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடத்தல் குழுவைச் சேர்ந்த ஒருவர் பணத்தை பெறுவதற்காக சென்றார். அப்போது கொட்டாஞ்சேனை காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்னிடம் வித்தியாசமான முறையில் நடந்து கொண்டனர். தங்களது குழுவைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர் என்றும் என்னை விடுவிக்க உள்ளதாகவும் கூறிய அவர்கள், கைது செய்யப்பட்ட நபர் இருநாட்களில் வந்துவிடுவார் என்றும் தெரிவித்தனர்.

அதன் பின்னர் கரும்பச்சை நிற வாகனத்தில் மீண்டும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்துச் சென்றனர். தங்களது இயக்க வளர்ச்சிக்கான நிதிக்காகவே கடத்திச் சென்றதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

அப்போது அக்குழுவைச் சேர்ந்த தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி வந்தது. என்னிடம் பேசக் கொடுத்தனர். "நாம் தமிழர்கள். எங்களது சகாவை காவல்துறையிடமிருந்து விடுவிக்க நான் உதவுகிறேன்" என்று கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துவிட்டார்.

பொரள்ளைச் சந்தியில் என் கண்களைக் கழற்றிவிட்டு விட்டுவிட்டனர். திரும்பிப் பார்க்காமல் செல்ல வேண்டும் என்றும் இல்லையெனில் சுட்டுவிடுவதாகவும் அவர்கள் கூறினர். நானும் திரும்பிப் பார்க்கவில்லை. அந்த வாகனம் அங்கிருந்து நகர்ந்துவிட்டது என உறுதி செய்த பின்னர் அப்பகுதியில் இருந்த தொலைத் தொடர்பகம் ஒன்றிலிருந்து எனது வீட்டுக்குத் தொலைபேசியில் பேசினேன். முச்சக்கர வாகனத்தில் வீடு போய் சேர்ந்தேன் என்றார் குமாரசாமி.

மொத்தம் ரூ. 10 மில்லியன் தொகை கேட்ட அந்நபர்கள் ரூ. 6 மில்லியன் கேட்டுள்ளனர். ஆனால் இந்தத் தொகை கூடுதலானது என்று குமாரசாமியின் மகன் மறுத்ததுடன் கொட்டாஞ்சேனை காவல்துறையினரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

கொட்டாஞ்சேனையில் உள்ள நவீன் செராமிக்சுக்கு எதிர்ப்புறம் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே பணத்தைக் கொண்டு வருமாறு கடத்தல்காரர்கள் கூறியுள்ளனர். கடத்தல் குழுவைச் சேர்ந்த ஒரு நபர் குமாரசாமியின் மகனிடம் நெருங்கி வந்து பணத்தைக் கேட்டுள்ளார். தந்தையை விடுவித்தால்தான் பணம் தரமுடியும் என்று கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பூபாலபிள்ளை கந்தராஜா என்ற அந்நபர் கைது செய்யப்பட்ட போது தான் கருணா குழுவைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். ஆனால் விடுதலைப் புலிகளுக்காக அவர் பணம் பறித்ததாக அரசாங்கம் முதலில் தெரிவித்தது.

கருணா குழுவினரது கொழும்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பூபாலபிள்ளை கந்தராஜா, சிறிலங்கா காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். அக்குழுவைச் சேர்ந்தவர்களும் தமது குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யபப்ட்டதாக ஒப்புக் கொண்டுள்ளனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: eelampage.com

0 பின்னூட்டங்கள்: