Saturday, October 21, 2006

கொழும்பில் கடத்தப்பட்ட 3 தமிழர்கள் சுட்டுக் கொலை

கொழும்பில் வெள்ளை வான் குழுவினரால் கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மகரகம பகுதியில் மத்தேகொட வீடமைப்புத் திட்டத்தில் வசித்து வந்த டேவிட் விக்னேஸ்வரன்(வயது 35) மற்றும் அவரது மனைவி திருக்கேஸ்வரி விக்னேஸ்வரன் (வயது 30) ஆகியோர் கடந்த வியாழக்கிழமை (19 ஒக்டோபர் 2006) அதிகாலை 1 மணிக்கு கடத்திச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் காலை 6 மணியளவில் இருவரது உடல்களும் பிலியந்தல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டன.

மற்றொரு சம்பவத்தில் கொழும்பு அளுத்மாவத்த பகுதியில் ரெஜி பாலநாதன் (வயது 30) என்பவர் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் கடத்தப்பட்டார். அவரது உடல் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ராகம-வல்பொல பகுதியில் வீதியோரத்தில் காணப்பட்டது.

மக்கள் கண்காணிப்புக் குழு தலைவர் சிறிதுங்க ஜயசூர்ய, மனோ கணேசன் உள்ளிட்டோர் சம்பவ இடங்களுக்குச் சென்று உடல்களை அடையாளம் காட்டினர்.

கடந்த இரு நாட்களில் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான ஜெயராஜா (வயது 46), மோதர பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரதீபன் (வயது 25) மற்றும் மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த மாணவரான சான் ஜோர்ஜ் (வயது 15) ஆகியோர் கடத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் கடந்த சில வாரங்களில் 9 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ள்தாகவும் 33 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுத்த பின்னர் 9 பேர் விடுவிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கடத்தல் மற்றும் படுகொலைகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள அழுத்தம் கொடுக்க பொதுமக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த சிறிதுங்க ஜயசூர்ய, மனோ கணேசன் மற்றும் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நன்றி: புதினம் [சனிக்கிழமை, 21 ஒக்ரொபர் 2006]

0 பின்னூட்டங்கள்: