Sunday, October 15, 2006

விடுதலைப்போரின் அடுத்த கட்டம் ஆரம்பமாகப்போகிறது

இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளை மதித்து புலிகள் நிபந்தனையற்ற பேச்சிற்கு சம்மதித்ததை தவறாக அர்த்தப்படுத்தியது சிங்கள அரசு. புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்றும் சிங்களப்படைகள் இராணுவ பலத்தில் மேலோங்கி உள்ளார்கள் என்றும் எண்ணியது. அதன் வெளிப்பாடுகள் தான் பேச்சு ஆரம்பிக்க முன் ஹேகலிய ரம்புக்வெல புலிகளுக்கு விதித்த மூன்று நிபந்தனைகள். ஆனால் பின்னர் தான் நிபந்தனைகள் விதிக்கவில்லை என கரணமும் அடித்திருந்தார்.

சர்வதேச நாடுகளின் உதவித்தொகையில் சீவியம் நடத்தும் சிங்கள அரசுக்கு என்று தனியான கொள்கைகள் ஏதும் இருக்க முடியுமா? அது தான் ரம்புக்வெலவின் குத்துக்கரணத்திற்கு காரணம். ரம்புக்வெல நிபந்தனை விதித்ததன் அர்த்தம் என்ன? தாம் பலமாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் முயற்சி. அதாவது மாவிலாறு, சம்பூர் ஆக்கிரமிப்புக்கள் இராணுவத்திற்கு மிகப்பெரும் பலத்தை கொடுத்தவிட்டது போன்றும், புலிகள் பெரும் அழிவை சந்தித்து விட்டார்கள் போன்றதுமான கற்பனை.

பொதுவாக உலகில் போரில் வென்ற நாடுகள் அல்லது பலத்தில் மேலோங்கிய நாடுகள் தான் பலவீனமான நாடுகள் மீது நிபந்தனைகளை விதிப்பதுண்டு. சிங்கள அரசின் கற்பனையும் அது தான். அது மட்டுமல்லாது தான் தோன்றித்தனமான விமானக்குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்கள் மீதான படுகொலைகள் என அரச பயங்கரவாதமும் கட்டுக்கடங்கவில்லை.

புலிகள் இது தொடர்பாக பல தடவைகள் சர்வதேசத்திற்கும், நோர்வேக்கும், கண்காணிப்புக்குழுவிற்கும் கூறிவிட்டார்கள். ஆனால் எதுவுமே போர் வெறிகொண்ட அரசின் காதில் ஏறியதாக இல்லை. அரசு தனது அரசியல் தோல்விகளை மறைக்க தமிழ் மக்களின் மீதான இன அழிப்பு போரை முனைப்பாக்க முயன்றது. அதற்காக எதிர்வரும் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவை 139.5 பில்லியன் ரூபாய்களாக உயர்த்தியதுடன், கனரக ஆயுதங்களும் வாங்கி குவிக்கப்படுகின்றன.

படையினரதும், சிங்கள மக்களினதும் மனவலுவை அதிகா¢க்கும் முயற்சியில் அரசுத் தலைவர் முதல் அடிமட்ட சிங்கள அதிகா¡¢கள் வரை ஈடுபட்டுள்ளார்கள். அதன் ஓரங்கமே ஐப்பசி 10 ஆம் நாள் கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி கிபீர் விமானத்திலும் ஏறி சிங்கள மக்களுக்கு வலுவுட்டியுள்ளார். அண்மைக்காலமாக விமானப்படை விமானங்கள் நடாத்தும் தாக்குதல்களால் தான் புலிகள் பெரும் தாக்கு¡தல்களில் ஈடுபடவில்லை என்பது சிங்கள அரசின் கணக்கு. எனவே தான் 20 வருடங்களின் பின் ஜனாதிபதி ஒருவர் விமானப்படைத்தளத்திற்கு விஜயம் செய்ததுடன் போர்விமானத்திலும் ஏறிவிளையாடியுள்ளார்.

இந்த வீர விளையாட்டுக்களின் தொடர்ச்சியாக பெரும் தாக்குதல்ளை நிகழ்த்தி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சில பிரதேசங்களை கைப்பற்றிவிட்டு ஜெனிவாவிற்கு செல்வது அல்லது இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளுக்கு ஆத்திரமூட்டி பேச்சுக்களில் இருந்து அவர்களை விலக வைப்பது தான் அரசின் தந்திரம். அதற்காக அரசு கிழக்கில் ஒன்று, வடக்கில் ஒன்றாக இரு களமுனைகளை தொ¢வு செய்தது. கிழக்கில் வாகரையை ஆக்கிரமிக்கும் முயற்சியாக பனிச்சங்கேணியை கைப்பற்றுதல், வடக்கில் ஆனையிறவை கைப்பற்றுவதற்கு ஏதுவான முதற்படியாக பளையை கைப்பற்றுதல்.

பனிச்சங்கேணி ஆக்கிரமிப்பு, கருணா குழு உறுப்பினர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. கடுமையான ஆட்டிலறி, பல்குழல் எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டு வீச்சுக்களுடன் இராணுவ மேஜர் தலைமையில் 400 இராணுவத்தினரும், 75 கருணா குழு உறுப்பினர்களும் மாங்கேணி படைமுகாமில் இருந்து நகர்வை ஆரம்பித்தனர். இவர்களுக்கு உதவியாக கடற்படையும் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் தான் பெருமளவான கருணா குழு உறுப்பினர்களை முதல் முறையாக இராணுவம் பயன்படுத்தி உள்ளது. இது இரு நோக்கங்களை கொண்டது.

அதாவது பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட கருணா குழு உறுப்பினர்களுக்கு ஒரு பயிற்சி களமாக பனிச்சங்கேணித்தாக்குதலை ஏற்படுத்துதல்.

பனிச்சங்கேணி கைப்பற்றப்பட்டால் கருணா குழு கிழக்கை மீட்கத்தொடங்கி விட்டார்கள் என பிரச்சாரத்தை முடுக்கிவிடுவது. ஆனால் தந்திரமாக இவர்களை உள்வாங்கிய புலிகள் ஒரு பெட்டி வடிவில் முற்றுகையிட்டு தாக்கத்தொடங்கினார்கள்.

புலிகளின் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த தளபதி கேணல் சொர்ணம் வழிநடத்த உக்கிரமான எதிர்ச்சமர் ஆரம்பித்தது.

சிங்களப்படைக்கும் தமிழ் துரோகக்கும்பலுக்கும் நின்று நிதானித்து சமரை எதிர்கொள்ள நேரம் இருக்கவில்லை. வாகனங்கள், ஆயுதங்கள், இறந்த, காயமடைந்த சகாக்களையும் விட்டுவிட்டு முகாமுக்கு பின்வாங்கி ஓடிவிட்டார்கள். 30 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரும், 20 இற்கு மேற்பட்ட கருணா குழுவினரும் பலியானதுடன் 75 பேர் வரை காயமடைந்தார்கள். இந்த மோதலில் தாக்குதலுக்கு தலைமை தாங்கி வந்த மேஜரும் பலியாகிவிட்டார். இராணுவ வாகனங்கள் உட்பட பெருமளவு ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டது. இதில் கைப்பற்றப்பட்ட 81 மி.மீ மோட்டார்கள் 2 உம் அவற்றிற்கான எறிகணைகளும் முக்கியமானவை.

இராணுவத்தின் 11 உடல்களும், கருணா கும்பலின் 06 உடல்களும் கைப்பற்றப்பட்டதுடன் ஒரு சிப்பாயும் கைது செய்யப்பட்டார். போர்நிறுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் தெற்கில் அரச படைகள் வலுவுள்ளவர்கள் என ஏற்படுத்தப்பட்ட தோற்றப்பாடு பனிச்சங்கேணி தாக்குதல் மூலம் கலைந்து போகாமல் தடுப்பதற்கு அரசும் தென்பகுதி ஊடகங்களும் மிகவும் திட்டமிட்டு செயற்பட்டனர். தாக்குதலை இருட்டடிப்பு செய்ய முயன்றனர், கருணா குழு தாக்கியதாக செய்தி பரப்ப முனைந்தனர் ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை.

எனவே தான் இறந்த சிங்களப் படைகளின் உடல்களை கூட புதைத்து மீண்டும் தோண்டி எடுத்து கையளிக்க வேண்டிய நிலை புலிகளுக்கு ஏற்பட்டது. இறந்த படையினரின் உடல்களை விட தமது அரசியல் நலன்கள் தான் தற்போது சிங்கள இனவாதிகளுக்கு முக்கியமானது. அதற்கு ஒத்திசைவாகவே தென்பகுதி ஊடகங்களும் செயற்பட்டிருந்தன.

கிழக்கில் ஏற்பட்ட தோல்வியையும் வடக்கில் சரி செய்து விடலாம் என எண்ணிய அரசு பளையை கைப்பற்றும் நடவடிக்கைக்கு நாள் குறித்தது. ஓகஸ்ட் 11 ஆம் நாள் படையினர் புலிகள் மீது ஒரு வலிந்த தாக்குதலுக்கு ஆயத்தமான வேளை முகமாலை முன்னரங்கை புலிகள் உடறுத்து தாக்கி இருந்தார்கள். அதற்கு பதிலடியாக ஒக்ரோபர் 11 ஆம் நாளை தனது தாக்குதலுக்கு அரசு தெரிவு செய்தது. இந்த நாளில் மற்றும் ஒரு விசேடம் உண்டு. அதற்கு முதல் நாள் தான் சிங்கள இராணுவத்தின் 57 ஆவது ஆண்டுவிழா.

2001 இல் தீச்சுவாலை நடவடிக்கையின் போது படையினர் நகர்ந்த அதே பாதையால் இம்முறையும் நடவடிக்கை ஆரம்பமானது. செறிவான ஆட்டிலறி, பல்குழல் எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டு வீச்சுக்களுடன் சிங்களப்படையின் படைப்பி¡¢வுகள் நகர்ந்தன. புலிகளை பொறுத்தவரை இராணுவத்தின் இந்த நகர்வை முன்கூட்டியே கணித்திருந்தனர். அதை எதிர்கொள்ள வியூகங்களை வகுத்ததுடன் கேணல் கிட்டு ஆட்டிலறி படைப்பி¡¢வுத்தளபதி கேணல் பாணுவும் வடபோர்முனைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

நாகர்கோவில் அச்சில் முன்னேறிய படைகள் சிறிது நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், முகமாலை, கிளாலி ஊடாக முன்னேறிய படைகள் புலிகளின் முன்னணி நிலைக்கு உள்வாங்கப்பட்டார்கள். தமது இரண்டாவது நிலைக்கு தந்திரமாக பின்னகர்ந்த புலிகளின் அணிகள் இராணுவத்தை சுற்றிவளைத்து தாக்கத் தொடங்கினார்கள். துல்லியமானதும், மிகச்செறிவானதுமான மோட்டார், ஆட்டிலறித்தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத படையினர் சிதறி கண்ணிவெடி வயல்களின் ஊடாக ஓடியுள்ளார்கள். அதுவே இராணுவத்தின் பேரழிவுக்கு காரணமாக அமைந்தது.

படையினருக்கு உதவியாக வந்த டாங்கிகளும் தப்பவில்லை இரண்டு வு-55 ரக பிரதான போர் டாங்கிகள் முற்றாக அழிக்கப்பட்டதுடன், மேலும் இரு டாங்கிகள் சேதமடைந்தன. ஐந்து மணிநேரத்தில் முடிந்து போன சமரில், 200 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட, 515 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 75 சடலங்களையும் நூற்றிற்கும் மேற்பட்ட ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியதுடன், ஒரு சிப்பாயும் கைது செய்யப்பட்டார். இவர் சத்தமின்றி நடைபெறும் நாலாம் கட்ட ஈழப்போ¡¢ல் வடபகுதியில் கைதான முதல் சிப்பாய். முன்னர் கிழக்கில் வாகனேரி, பனிச்சங்கேணி தாக்குதல்களில் தலா ஒவ்வொரு சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே.

முகமாலை சமரில் கனரக ஆயுதங்களின் நேர்த்தியான கையாளுகையும், தளபதிகளின் சிறந்த போர்க்கள நுட்பமும், கனரக ஆயுதங்களின் ஓருங்கிணைந்த பயன்பாடும் புலிகளின் வெற்றிக்கு காரணமாகியதுடன். அவர்களின் இழப்புக்களையும் வெகுவாகக் குறைத்துள்ளது. 4 துணைப்படையினரும், 18 போராளிகளும் வீரச்சாவைத் தழுவியிருந்தனர். இது ஏனைய சமர்களுடன் ஒப்பிடும் போது குறைவானது.

2000 இல் ஆனையிறவை இழந்த பின்னர் சிங்களப்படை அதை மீட்பதற்கு கொடுக்கும் விலைகள் மிக, மிக அதிகம். தற்போது தென்னிலங்கையைப் பெறுத்தவரை ஆனையிறவு இராணுவ முக்கியத்துவத்தை விட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே மாறியுள்ளது. இரு மரபுவழிப் படைகள் தமது பலத்தை சரிபார்க்கும் களமாக அமைந்துள்ளது என்றாலும் தவறில்லை.


இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் முயற்சியில் இதுவரை ஏறத்தாள 1,100 படையினர் பலியானதுடன் 3,700 படையினர் காயமடைந்தும் உள்ளார்கள். இது அண்ணளவாக சிங்களப்படையினரின் ஒரு டிவிசன் படையினரின் மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கைக்கு ஒப்பானது. புலிகளை பொறுத்தவரையில் தீச்சுவாலையில் 141 வீரர்களை இழந்திருந்தனர். அதற்கு பின்னரான அண்மைய சமர்களையும் சேர்த்தால் ஏறத்தாள 250 வீரர்களே வீரமரணமடைந்துள்ளனர்.

அதாவது சிங்களப்படைகளின் கொல்களமாக நாகர்கோவில், முகமாலை, கிளாலி அச்சு அமைந்துள்ளது என்றால் மறுக்கமுடியாது. யாழ். குடாவில் நிலைகொண்டுள்ள சிங்களப்படைகளின் பெரும் படைபலம் இந்த அச்சிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் தான் செறிவாக்கப்பட்டுள்ளது. இங்கு சிங்களப்படை சந்திக்கும் இழப்புக்கள் அதன் பின்தளங்களின் பாதுகாப்பையும் பலத்தையும் ஆட்டம் காண வைக்கும் என்றால் தவறில்லை.

2002 இற்கு முதல் நடைபெற்ற சமர்களுக்கும், தற்போது நடைபெறும் சமர்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. தற்போது நடைபெறும் சமர்களை கண்காணிப்புக்குழுவும் சர்வதேசமும் உன்னிப்பாக அவதானிப்பதுடன். கண்காணிப்புகுழு மூலம் உண்மையான களநிலவரம் உடனுக்குடன் உலகை எட்டிவிடும். அதாவது சிங்கள அரசின் பொய்யும் புரட்டும் உடனுக்குடன் அம்பலமாகிவிடும் என்பதுடன் இருதரப்பு பலம் தொடர்பான கணிப்புக்களும் உலகின் கவனத்திற்கு சென்றுவிடும்.

கடந்த 10 நாட்களுக்குள் நிகழ்ந்த இரண்டு எதிர்த்தாக்குதல்கள் மூலம் புலிகள் சிங்கள அரசிற்கு புரியும்படி அவர்களின் மொழியில் பல தகவல்களை கொடுத்துள்ளார்கள். அதாவது:

  • கடந்த நான்கரை ஆண்டுகளில் கிழக்கிலோ வடக்கிலே புலிகளின் பலம் சற்றேனும் மாற்றமடையவில்லை.
  • அரசு சமாதானத்தை நோக்கி நகர்ந்தால் புலிகளும் தயார், பேசிக்கொண்டே போர் புரிவோம் என்றால் அதற்கும் புலிகள் தயார்.
  • ஓட்டுக்குழுக்கள் புலிகளின் பலத்தை சிதைக்கவோ அல்லது படையினரின் பலத்தை அதிகரிக்கவே பயன்படப்போவதில்லை.
  • சர்வதேசத்தால் அமைதி வழிக்கு திரும்பவைக்க முடியாத சிங்கள அரசை புலிகளால் திரும்பவைக்க முடியும்.
  • அரசு முழு அளவிலான போரை விரும்பின் புலிகள் அதற்கும் தயார்.

பனிச்சங்கேணி, முகமாலை சமர்களில் ஒரு சில சதுரகிலோ மீற்றர் நிலப்பரப்புக்களை கைப்பற்றிவிட்டு அல்லது ஒரு டசின் புலிகளின் இறந்த உடல்களையாவது எடுத்து தென்பகுதி சிங்களவரை மகிழ்சிப்படுத்தி விட்டு பேச்சுக்கு சென்றால். அரசு பலமான நிலையில் பேச்சுக்கு செல்கிறது என்ற மாயையை தெற்கில் ஏற்படுத்தி விடலாம். மேலும் அரசு நிபந்தனையற்ற பேச்சுக்கு செல்கின்றது என்று கூப்பாடு போடும் ஜே.வி.பி, கெல உறுமைய போன்ற கட்சிகளின் வாயையும் அடைத்து விடலாம் என்ற அரசின் கனவில் மண்விழுந்துள்ளது.

எனினும் எதிர்வரும் 28-29 ஆம் திகதிகளில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள பேச்சுக்களுக்கு முன்னர் மீண்டும் சிங்களப்படைகள் தம்மை பலமானவர்கள் என காண்பிக்க மிக இலேசான புலிகளின் இலக்குகளை பெரும்படை கொண்டு கைப்பற்றவோ அல்லது தாக்கவோ முனையலாம். அல்லது தமிழ் மக்களின் மீது கண்மூடித்தனமாக விமானக் குண்டுவீச்சுக்களை நிகழ்த்தி விட்டு அவர்களை புலிகளின் கணக்கில் சேர்க்கலாம். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் அரசு செலுத்தவேண்டிய விலைகள் அதிகமாகவே இருக்கும் என்பது தான் களயதார்த்தம்.

பேச்சையும் போரையும் சமகாலத்தில் நிகழ்த்த அரசால் முடியும் என்றால் புலிகளாலும் அது முடியும் என்பது தான் தற்போது நடைபெறும் நிகழ்வுகளின் சுருக்கம். மேலும் போர்நிறுத்த காலத்தில் ஒருவர் பிரதேசத்தை மறுதரப்பு கட்டப்பாட்டுக்குள் கொண்டு வரலாமா என்பது உட்பட பல போர்நிறுத்த அம்சங்கள் ஜெனிவா பேச்சின் ஊடாக உறுதிப்படுத்தப்படும். இதன் மூலம் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளும்; தெளிவாகும்.

ஏனெனில் கடந்த வருடம் நவம்பரில் தேசியத் தலைவரால் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அல்லது சமாதான முயற்சிகளுக்குரிய நல்லெண்ண சமிக்கைகளை உருவாக்குவதற்காக மகிந்தவிற்கு ஒரு கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த கால எல்லையும் தனது முடிவை அண்மித்து விட்டதாகவே தோன்றுகிறது. மகிந்த வெளிப்படுத்திய நல்லெண்ணங்களையும் நாமும் அறிவோம் உலகும் அறியும். எனவே விடுதலைப்போர் தனது அடுத்த கட்டத்திற்கு தாமதமின்றி நகரப்போவதை மட்டும் தான் தற்போது நடைபெறும் நிகழ்வுகளின் ஊடாக உறுதிபடக் கூறமுடியும்.

எழுதியவர்: அருஸ் (வேல்ஸ்)

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம் (ஒக்டோபர் 14, 2006)

0 பின்னூட்டங்கள்: