Thursday, October 19, 2006

கிஃபீரை வீழ்த்தியது புலிகளின் ஏவுகணையா?

கிழக்கில் பனிச்சங்கேணியில் ஆரம்பித்த சமர் முகமாலையில் உக்கிரமடைந்து, ஹபரணையில் தாவி நீர்கொழும்பு வாவியில் தற்போது சங்கமமாகியுள்ளது.

இந்த சமரில் சிங்கள அரசின் முப்படைகளும் பேரழிவை சந்தித்துள்ளன. சிங்கள அரசின் தரைப்படையின் போரிடும் கூர்முனை என வர்ணிக்கப்படும் 53 ஆவது படைப்பிரிவு முகமாலையில் தனது ஒரு பிரிகேட்டின் முக்கால் பங்கை இழந்ததுடன் ஒரு டசின் கவச வாகனங்களையும் இழந்துள்ளது.

கடலிலே நூறு இருநூறு புலிகளை அடிக்கடி கொன்று குவிப்பதாக தம்பட்டம் அடிக்கும் கடற்படை கடந்த திங்கட்கிழமை (16.10.06) ஹபரணையில் நடந்த பாரிய குண்டு வெடிப்பில் சின்னாபின்னமாகியுள்ளது. இந்த கட்டுரை எழுதும் போதும் சடலங்கள் தேடப்படுகின்றன. 116 பேர் இறந்ததாகவும், 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

ஹபரணை குண்டு வெடிப்புக்கு தமிழ் மக்கள் மீது பழி தீர்க்கவென புறப்பட்ட சிங்கள வான்படையின் கிபீர் விமானங்கள் முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பில் அப்பாவி மக்களின் மீது குண்டுத்தாக்குதலை நடாத்தி விட்டு திரும்பிய வேளை அவற்றில் ஒரு கிபீர் விமானம் நீர்கொழும்பு கடலில் வீழ்ந்து நொருங்கிபோனது.

தென்னிலங்கை எங்கும் மரண ஓலங்கள் எழுகின்றன. சிங்கள நண்பர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தன்னை பீதி சூழ்ந்துள்ளதாக கூறியுள்ளார். எமக்கு வலியை தந்தவன் தற்போது அதன் வேதனையை உணருகிறான்.

கிபீர் சிங்களப் படைகள் பெரிதும் நம்பியிருந்த இயந்திரப்பறவை, கடந்த சித்திரைக்கு பின்னர் தமிழ் மக்களின் மீதும் அவர்களின் வாழ்விடங்களின் மீதும் 40 இற்கும் மேற்பட்ட தடவை தொன் கணக்கில் குண்டுகளை கொட்டியுள்ளது. வல்லிபுனத்தில் 61 அப்பாவி மாணவிகளை கொன்றதும் இந்த விமானம் தான்.

1972 இல் பிரான்ஸ் நாட்டின் மிராச்-V விமானத்தின் பிரதி வடிவமாக இஸ்ரேலினால் தயாரிக்கப்பட்ட முதல் சண்டை விமானம் தான் கிபீர். கிபீர் என்றால் lions club என்பது அர்த்தம். அவற்றில் கிபீர்-C1, கிபீர்-C2, கிபீர்-C7, கிபீர்-C10 ஆகிய வடிவங்கள் உள்ளன. அதன் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதாவது கிபீர்-c1 மிகவும் பழமையானது கிபீர்-c10 மிகவும் நவீனமானது. சிங்கள அரசிடம் தற்போது 12 கிபீர் விமானங்கள் உள்ளன. அதில் தற்போது நொருங்கிப்போனதை கழித்தால் 11 விமானங்கள் எஞ்சியுள்ளன.

கிபீர் பற்றிய சில தரவுகள்.

ஓற்றை இருக்கையுள்ள பலநோக்கு தாக்குதல் விமானம்.
நீளம் - 15.55 மீ., அகலம்- 8.22 மீ., உயரம்- 4.25 மீ.
வேகம் - 2,285 கிமீ/மணி
பறக்கும் உயரம்- 18,000 மீ.
தூரம்- 1,300 கி.மீ
இயந்திரம் - General Electric J79-GE-17 jet engine.
ஆயுதங்கள் - 30 மி.மீ. பீரங்கிகள் - 02 (2x Rafael-built DEFA 553 30-mm cannons with 140 rounds per gun), 6,065 கிலோ நிறையுள்ள குண்டுகளையும் (Mk-82, GBU-13 LGB, TAL-1 and TAL-2 CBUs, BLU-107 Durandal, HOBOS) காவ வல்லது. இவை தவிர விண்ணில் இருந்து தரைக்கு பாயும், ஆகாயத்தில் இருந்து ஆகாயத்திற்கு பாயும்(Shrike ARMs; Maverick ASMS, Sidewinder, Shafrir, and Python-series AAMs) ஏவுகணைகளையும் உடையது.

பாவனையில் உள்ள நாடுகள் - அமெரிக்கா, இஸ்ரேல், கொலம்பியா, ஈகுடோர், சிறிலங்கா.
கிபீர் விமானமும் அதன் ஆயுதங்களும்.

1995 ஆம் ஆண்டு சிங்கள அரசு 06 கிபீர்-c2, 01 கிபீர்-TC2 என்பவற்றை கொள்வனவு செய்தது. பின்னர் 2001 ஆம் ஆண்டு 04 கிபீர்-C2, 04 கிபீர்-C7 களையும் கொள்வனவு செய்தது. தற்போது சிங்கள வான்படையிடம் 02 கிபீர்-TC2, 02 கிபீர்-C7, 08 கிபீர்-C2 என்பன உண்டு.

ஓவ்வொன்றும் 2.2 மில்லியன் அமொ¢க்க டொலர் (220 மில்லியன் ரூபாய்கள்) பெறுமதியான இந்த விமானங்களில் இது சிங்கள வான்படை இழந்த 06 ஆவது கிபீர் விமானமாகும்.

21.01.1997 - 01 கிபீர் C2 நீர்கொழும்பு வாவியில் வீழ்ந்தது.
24.07.2001 - 03 கிபீர் C2, C7 விமானங்கள் கட்டுநாயக்கா தாக்குதலில் அழிந்துபோயின.
22.10.2002 - 01 கிபீர் C-7 கட்டுநாயக்காவில் வீழ்ந்தது.
16.10.2006 - 01 கிபீர் C-2 நீர்கொழும்பு வாவியில் வீழ்ந்தது.

1978 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 7 ஆம் நாள் விடுதலைப் புலிகளால் பலாலியில் இருந்து கட்டுநாயக்காவிற்கு சென்ற சிங்கள அரசின் அவ்ரோ விமானம் நேரக்கணிப்பு குண்டு மூலம் தகர்க்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை சிங்களப்படை ஏறத்தாழ 50 இற்கும் மேற்பட்ட விமானங்களை இழந்துள்ளது.

இவற்றில் 40 இற்கும் மேற்பட்ட விமானங்கள் புலிகளின் தாக்குதலால் அழிந்து போனவை. அதிலும் புலிகளின் லெப். கேணல் ராதா வான்காப்பு படையணியினதும், விசேட படையினதும் தாக்குதல்களினால் அழிந்தவை தான் அதிகம். இரண்டு பரல் கொண்ட 20 மி.மீ ஒலிகன் துப்பாக்கி, சாம்-7, ஸ்ரிங்கர், இக்லா ஏவுகணைகள் என்பவை புலிகளின் பிரதான விமான எதிர்ப்பு ஆயுதங்கள்.

SAM ஏவுகணைகள் மூலம் கிபீரை வீழ்த்த முடியுமா? 1993 ஆம் ஆண்டு சோமாலியாவில் நடந்த சமரில் கெரில்லாக்கள் SAM-7 ஏவுகணை மூலம் அமெரிக்காவின் F-16s விமானத்தை வீழ்த்தியிருந்தனர். இந்த விமானம் இஸ்ரேலின் கிபீர் விமானத்தை விட மிக நவீனமானது. எனவே கிபீரை இலகுவாக வீழ்த்த முடியும்.

உலகில் மிகக்குறைவான நாடுகளே கிபீர் விமானத்தை பயன்படுத்துவதால் அதன் இழப்புக்கள் மிகக்குறைவு. 1970 களில் சிரியாவின் மிக் விமானத்தினால் ஒரு கிபீர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட இன்றைய போர்களில் கிபீரை பயன்படுத்துவதில்லை.

தற்போது மக்களின் மனங்களின் எழும் கேள்வி நீர்கொழும்பில் வீழ்ந்த கிபீர் விமானம் புலிகளின் தாக்குதலால் வீழ்ந்திருக்கலாமா? என்பது தான். இதை மறுக்க முடியாது ஏனெனில் தாம் தாக்கப்படும் களங்களில் அதிக உயரத்திற்கு பறக்கும் விமானங்கள் (அதாவது ஏவுகணைகளின் தூர வீச்சிற்கு அப்பால்) பாதுகாப்பான பிரதேசங்களுக்கு (சிங்களப் பகுதிகள்) மேல் பறக்கும் போதும், விமானத்தளங்களை அண்டிய பகுதிகளிலும் தாழ்வாக பறப்பதுண்டு.

எனவே அவற்றை அத்தகைய இடங்களில் வைத்து மிக சுலபமாக ஏவுகணைக்கு இரையாக்கி விடலாம்.
உதாரணமாக 2000 ஆண்டு மாசி மாதம் அனுராதபுரத்தில் தலவா பகுதியில் பலாலியில் இருந்து படையினரை ஏற்றிச்சென்ற அன்ரனோவ் - 24 ரக விமானம் 04 உக்ரைன் நாட்டு விமானிகள் உட்பட 36 படையினருடன் வீழ்ந்து நொருங்கியது.

உடனடியாக இயந்திரக்கோளாறு எனக்கூறிய சிங்கள அரசு. விசாரனையின் பின்னர் திகைத்துப்போனது. உக்கிரைனில் இருந்து வந்த நிபுணர்கள் குழு விமானம் இக்லா (SA-16 GIMLET Igla-1 9K310) ரக தரையில் இருந்து விண்ணுக்கு பாயும் ஏவுகணையினாலேயே வீழ்ந்ததாக கூறிவிட்டு சென்றுவிட்டார்கள்.

காடுகளின் ஊடாக ஏவகணையுடன் நகர்ந்த புலிகளின் விசேட படையணி விமானத்தை வீழ்த்திவிட்டு தளம் திரும்பிவிட்டார்கள். இது ஓரு விசேட நடவடிக்கை. அதாவது கிபீருக்கும் அதே நிலமை ஏற்பட்டு இருக்கலாம் என்பது தான் தற்போதைய கருத்து. நீங்கள் நினைக்கலாம் அடித்த ஏவுகணையின் ஏவும் பகுதியை எப்படி புலிகள் கொழும்பில் இருந்து தளத்திற்கு கொண்டு வருவார்கள் என்று (ஏவுகணை மிக அதிக பெறுமதியானது).

பொதுவாக அமெரிக்காவின் ஆயுதங்களுக்கும் சோவியத்தின் ஆயுதங்களுக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. அதாவது அமெரிக்காவின் போர் வீரர்களால் காவிச்செல்லப்படும் (Man-Portable) கனரக ஆயுதங்கள் பாவித்த பின்னர் மீண்டும் பாவிக்க முடியாதவை (fire-and-forget) சோவியத்தின் ஆயுதங்கள் மீண்டும் மீண்டும் பாவிக்கக்கூடியவை.

உதாரணமாக சோவியத்தின் டாங்கி எதிர்ப்பு ஆயுதமான RPG மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை. ஆனால் அமெரிக்காவின் அதை ஒத்த டாங்கி எதிர்ப்பு ஆயுதமான LAW (Light Anti-Tank Weapon) ஒருமுறை பயன்படுத்தி விட்டு எறியக்கூடியது. அதாவது அமெரிக்கா முழுக்க முழுக்க விசேட படை நடவடிக்கையை முதன்மைப்படுத்தியே ஆயுதங்களை தயாரிப்பதுண்டு. உலகிலே அதிக விசேட படை அணிப்பிரிவுகளை உடைய நாடும் அமெரிக்கா தான். அமெரிக்காவின் வெற்றியின் இரகசியமும் அது தான்.

விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பார்ப்போமாயின் சோவியத்தின் SAM இது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியது. ஆனால் அமொ¢க்காவின் ஸ்ரின்ஞர் (FIM-92A Stinger) ஏவுகணை ஒரு தடவை மட்டுமே பயன்படத்தக்கூடியது. விசேட படை நடவடிக்கைக்கு மிகச்சிறப்பான ஆயுதம். அதாவது நீர்கொழும்பின் ஒரு மூலையில் நின்று ஏவுகணையை ஏவிவிட்டு அதன் வெற்றுக்கூட்டை வாவியில் எறிந்துவிட்டு அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு பேரூந்தில் எறிப்போக வேண்டியது தான்.
தங்கள் மீது ஒரு பெரிய தாக்குதல் நடந்தால் தமிழ் மக்கள் மீது பழிதீர்க்க நிச்சயமாக சிங்கள விமானப்படை புறப்பட்டு வரும் என்பது ஒரு சிறு குழந்தைக்கும் தெரியும். எனவே கட்டுநாயக்காவிற்கு அண்மையில் நாட்கணக்கில் ஏவுகணையுடன் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. ஹபரணைத் தாக்குதல் நிகழ்ந்து 4 மணி நேரத்திற்குள் விமானம் சிக்கிவிட்டது.

சிங்கள அரசை பொறுத்த வரையில் இந்த இரண்டு வாரத்திலும் நிகழ்ந்த அதிர்ச்சிகளால் அசைவின்றி உறைந்து போயுள்ளது. எனவே போர் விமானம் வீழ்ந்ததற்கான உண்மையான காரணங்களை தற்போது கூறப்போவதில்லை.

உண்மை தெரிந்தால் எதிர்க்கட்சிகள் அரசை விடப்போவதும் இல்லை. மேலும் மகிந்த ஏறிய விமானம் ஒரு வாரத்திற்குள் சாம்பலாகும் என மகிந்தவோ அவரது கூட்டமோ எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள்.
எனினும் இறுமாப்புடன் வந்து எம்மீதும், எமது பள்ளிப்பிஞ்சுகள் மீதும் குண்டு விசிய எதிரிக்கு அவனது இடத்தில் வைத்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை.

பேச்சுவார்த்தைக்கு என இணைத்தலைமை நாடுகள் குறித்த நாட்களுக்கு இன்றுடன் இரு வாரங்கள் தான் உள்ள நிலையில் மகிந்தவின் இராணுவ மேலாதிக்கக் கனவு தவிடுபொடியாகியுள்ளது. மாறாக புலிகளின் இராணுவப் பலம் அரசைவிட உயர்ந்துள்ளது என்பது தான் கள யதார்த்தம்.

எனவே நிழல்போர் நிஜப்போராகும் போது சிங்களப்படைக்கு பேரழிவை ஏற்படுத்த எமது படைபலத்தை நாம் மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதுடன் எல்லோரும் ஒண்றிணைய வேண்டிய வேளையும் இது தான்.
-அருஸ் (வேல்ஸ்)-

நன்றி: தமிழ்நாதம்

0 பின்னூட்டங்கள்: