Saturday, October 14, 2006

மன்மோகன்சிங்கை வளைத்திருக்கும் தமிழர் எதிர்ப்புக்குழு

இலங்கை இனப்பிரச்சனையை புரிந்து கொள்ள முடியாமல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கேரளாவைச் சேர்ந்த மலையாளிகள் குழு ஒன்று இறுக்கிப் பிடித்திருப்பதாக பிரபல இந்திய ஆங்கில ஊடகமான தி ஸ்டேட்ஸ்மென் சாடியுள்ளது.

த ஸ்டேட்ஸ்மென் நாளிதழில் பிரபல ஊடகவியலாளர் சாம் ராஜப்பா எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்:

தெற்காசியாவில் சிறிலங்கா இராணுவமயமாக்கப்பட்ட ஒரு நாடாக உருவாகி உள்ளதாக அண்மையில் பெங்களுரைச் சேர்ந்த உத்திகளுக்கான அமைப்பு ஒன்றின் அறிக்கையில் அண்மை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானைவிட 1,000 பேருக்கு 8 இராணுவத்தினர் என்கிற நிலை சிறிலங்காவில் உள்ளது. தனது பொருளாதாரத்தில் 4.1 விழுக்காட்டை பாதுகாப்புக்கு சிறிலங்கா ஒதுக்குகிறது. இந்தியாவோ 2.5 விழுக்காடு, பாகிஸ்தான் 3.5 விழுக்காடுதான் ஒதுக்குகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் 8 மில்லியன் டொலர் இராணுவ நிதி ஒதுக்கீட்டு எதிராக சிறிலங்கா அரசாங்கமானது ஒரு பில்லியன் டொலர் நிதியை ஒதுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்காவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் மட்டும்தான் அச்சுறுத்தல் உள்ளது. 8 ஆயிரம் வலிமையான போராளிகளைப் பெற்றுள்ள விடுதலைப் புலிகளுக்கு எதிராக 1 இலட்சத்து 50 ஆயிரம் முழு அளவிலான வலுவான இராணுவத்தினரையும் 20 ஆயிரம் கடற்படையினரையும் சிறிலங்கா இராணுவம் கொண்டிருக்கிறது.

இஸ்ரேலிய தயாரிப்பான கிபீர் சூப்பெர் சொனிக் விமானங்கள், மிக்-23, எம்.ஐ.-24 மற்றும் உலங்குவானூர்திகளை சிறிலங்கா விமானப் படை பெற்றுள்ளது.

சிங்களப் பேரினவாத கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினர் கூட்டணியுடன் கடும் போக்கு தேர்தல் அறிக்கையை முன்வைத்து அரச தலைவரானார் மகிந்த ராஜபக்ச.

அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்களின் ஜனநாயகப் பூர்வ உரிமைகளுக்கான விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் பலியாக்கப்பட்டு விட்டது.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்க், தமிழ் மக்களின் விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாத ஆலோசகர்களின் இறுக்கமான பிடியில் உள்ளார்.

திட்டமிடப்பட்டதோ அல்லது யதேச்சையானதோ பிரதமர் மன்மோகன்சிங்கின் முதன்மைச் செயலாளர், பாதுகாப்பு ஆலோசகர், இலங்கை விவகாரங்களைக் கையாளும் வெளிவிவகார இணை அமைச்சர், வெளிவிவகாரச் செயலாளர், கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர், றோ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் அனைவருமே மலையாளிகள், இவர்கள் அனைவருமே செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கும் வாழும் மொழியாக தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான கடும் போக்கு உணர்வு கொண்டவர்கள்.
இந்தியாவின் நிலைப்பாட்டை தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட சிறிலங்கா பாகிஸ்தானை அங்கு அனுமதித்துள்ளது. பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநரும் ஐ.எஸ்.ஐ.யை இயக்குபவருமான பசீர் வாலி மொகமட், சிறிலங்காவின் முன்னாள் தூதுவராக பணியாற்றினார். அவருக்குப் பின்னால் பாகிஸ்தானின் விமானப் படையின் பிரதி தளபதி ஏர் வைஸ் மார்சல் செக்சத் அஸ்லம் செளத்ரி அண்மையில் நியமிக்கப்பட்டார். பிரிவினைவாதத்துக்கு எதிராக வான் வழித் தாக்குதல்களில் நிபுணத்துவம் பெற்றவர் அவர். மகிந்த ராஜபக்ச அரச தலைவரான பின்னர் சிறிலங்கா மற்றும் பாகிஸ்தானிய இராணுவங்களுக்கிடையேயான இரகசிய கூட்டுறவின் பின்னணியில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் முக்கியமான இராணுவ விவகாரங்களை இந்தியாவுக்கு தெரிவிக்கும் வழமையை சிறிலங்கா கொண்டிருந்தது. சிறிலங்காவின் போர் விமானங்கள், பாகிஸ்தானில் மறுசீரமைப்புக்காக அனுப்பிவைக்கபப்ட்டிருந்தன.
இப்போது சிறிலங்காவின் விமானப்படையானது ஆளில்லா வேவு விமானனங்களையும் வான்குண்டுகளையும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து கோருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகலின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எதிரான நடவடிக்கைக்காக இவை கோரப்பட்டுள்ளன. சிறிலங்கா எதிர்கொண்டிருக்கும் இனப்பிரச்சனைக்கு தீர்வானது பிரபாகரனை அழிப்பதில் அல்ல.

சிறிலங்கா இராணுவம் பெருந்தொகை மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ தளபாடக் கொள்வனவில் ஈடுபடுகிறது. பாகிஸ்தானிடமிருந்து ரி-55 பிரதான யுத்த டாங்கிகளையும் சி-130 விமானத்தையும் சிறிலங்கா கோரியுள்ளது. மேலும் 10 பக்டர் சிகான் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்டவைகளும் சிறிலங்காவின் கொள்வனவுப் பட்டியலில் உள்ளன.

பலூச் விடுதலைப் போராட்ட வீரர்கள் மீது அண்மையில் பாகிஸ்தான் விமானப் படையினர் வெற்றிகரமாக நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிய பயிற்சி உதவியுடன் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழர் பகுதிகளில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா விமானப் படை குண்டு வீசி வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக ஒரு கொடும் செயலாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் படையணியையும் உருவாக்க மகிந்த ராஜபக்ச நகர்வுகளை மேற்கொண்டுள்ளார். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மகிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை ஒரு வளைகுடாவுக்குள் தள்ளிவிட மகிந்த ராஜபக்ச முயற்சிக்கிறார்.

அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் கடந்த செப்ரெம்பர் 18 ஆம் நாளன்று 10 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினர்தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் குற்றம்சாட்டியது. சிங்களவர் பெரும்பான்மையாக வசிக்கும் றாத்தல்குளம் பகுதியில் அணைக்கட்டு ஒன்றை சீரமைக்கச் சென்ற போது இச்சம்பவம் நடந்தது. படுகொலைச் சம்பவம் நடந்த இடமானது சிறப்பு அதிரடிப்படையினர் முகாமுக்கு அருகாமையில் உள்ளது. கொழும்பு ஊடகங்களும் அரசாங்கம் கூறியதைத்தான் ஒப்புக் கொண்டதே தவிர சுயாதீனமாக அச்செய்தியை ஆய்வு செய்யவில்லை.

ஓகஸ்ட் முதல் வாரத்தில் 17 நிவாரணப் பணியாளர்கள் மூதூரில் சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம்சுமத்தப்பட்டது. 17 பேரும் தமிழர்கள். பிரான்ஸ் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். படுகொலை செய்யப்பட்டோரில் 15 பேர் மண்டியிட வைக்கப்பட்டு தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருவர் தப்பியோட முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 17 பேரும் நிவாரணப் பணியாளர்கள் என்பதைத் தெரிவிக்கும் வகையிலான உடை அணிந்திருந்தனர். இந்தப் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமே முழுமையான காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியது.

வன்னியில் முல்லைத்தீவில் ஓகஸ்ட் 16 ஆம் நாளன்று கைவிடப்பட்டோர் இல்லம் மீது வான்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு 61 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டனர். சென்னையில் உள்ள சிறிலங்கா பிரதித் தூதுவர் பி.எம்.ஹம்சா உள்ளிட்ட சிறிலங்கா அதிகாரிகள் அனைவருமே விடுதலைப் புலிகளின் சிறார் படையணியினரே கொல்லப்பட்டனர் என்று பொதுமக்களுக்கு தவறான தகவலைத் தெரிவித்தனர். அந்த இல்லத்தை சர்வதேச பார்வையாளர்கள் சென்று பார்வையிட்டு சிறிலங்காவின் கருத்தை நிராகரித்தனர்.

ஹவானாவில் செப்ரெம்பர் 16 ஆம் நாள் நடைபெற்ற மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு கொடுமையான பயங்கரவாத இயக்கமாக வர்ணித்த மகிந்த ராஜபக்ச, கொடூரமான பயங்கரவாதம் தலை தூக்கும்போது பயங்கரவாதத்துக்கு எதிரான போரையும் வலிமையாக புதுப்பிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரம நாயக்க கூறுகிறார்: இந்த நாட்டின் எந்தப் காட்டில் பயங்கரவாதம் இருந்தாலும் அதனை விரட்டியடிக்க சிறிலங்காவுக்கு ஆயுதங்களை தருவதற்கு பல நாடுகள் முன்வந்துள்ளன" என்கிறார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண இராணுவ வழித் தீர்வையே முன்வைக்கிறது என்பதை இது தெளிவாக வெளிப்படுத்துகிறது.

தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கு - கிழக்கு மாகாணங்கள் 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்டன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வடக்கு கிழக்கைப் பிரிக்க ஜே.வி.பி.யின் மூலம் வழக்கு தொடர்ந்திருப்பார் மகிந்த ராஜபக்ச என சந்தேகிக்கத் தோன்றுகிறது.

சிங்கள அரசியல்வாதிகளின் மனநிலையை இந்திரா காந்தி நன்கு அறிந்து வைத்திருந்தார். அதனால் இலங்கை விவகாரங்களுக்காக ஜி.பார்த்தசாரதியை சிறப்பு ஆலோசகராகவும் நியமித்திருந்தார். இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார். அதனைச் செயற்படுத்தும் முன்னமே அவர் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்.

ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் இந்தியாவின் வைஸ்ராய் என்று சிங்கள அதிருப்தி அரசியல்வாதிகளால் வருணிக்கப்பட்ட அப்போதைய சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் ஜே.என்.டிக்சிட்டும் சில திரிபுவேலைகளைச் செய்த போதும் இந்திராவின் கொள்கையை பின்பற்றி அவரது மகன் ராஜீவ் காந்தி வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைத்தார்.

இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்திக்குப் பின்னர் இந்தியாவின் எந்தப் பிரதமரும் இலங்கை இனப்பிரச்சனையை புரிந்து கொள்ளவோ இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண உதவோ இல்லை.

கிளிப்பிள்ளை சொல்வதைப் போலவே "இலங்கையின் ஐக்கியம் மற்றும் பிரதேச ஒற்றுமை குறித்து" இந்தியா வாசித்துக் கொண்டிருந்தால் அது பிரச்சனைக்குத் தீர்வு ஆகாது. இலங்கையின் இனப்பிரச்சனைக்கு சில நெளிவுகளுடன் கூடிய கூட்டாட்சி முறையிலான தீர்வு காண மகிந்த ராஜபக்ச முன்வர வேண்டும் என்று சாம் ராஜப்பா அந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார்.

நன்றி: புதினம்

1 பின்னூட்டங்கள்:

said...

நல்லதொரு கட்டுரை இணைப்புக்கு நன்றி.