Monday, October 02, 2006

வள்ளிபுனம் சிறுமிகள் கைது சம்பவம்: விசாரணை தேவை

வள்ளிபுனம் சிறுமிகள் கைது சம்பவம்: சர்வதேச அமைப்புக்களின் விசாரணைக்கு நிசோர் கோரிக்கை

முல்லைத்தீவு வள்ளிபுனம் மீதான வான்படைத் தாக்குதலில் உயிர் பிழைத்த சிறுமிகளை சிறிலங்கா அரசாங்கம் கைது செய்துள்ள சம்பவம் தொடர்பில் சர்வதேச அளவிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (நிசோர்) கோரிக்கை விடுத்துள்ளது.

நிசோர் அமைப்பின் தலைவர் கருணாரட்ணம் அடிகளார் வெளியிட்டுள்ள அறிக்கை:

வள்ளிபுனம் தாக்குதலில் உயிர் பிழைத்த மூன்று சிறுமிகளான சிறீபதி கஸ்தூரி, பாலசிங்கம் சுமித்ரா மற்றும் தம்பிமுத்து தயாளினி ஆகியோர் கண்டி மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கமோ மூவரையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று கூறியது.

கண்டி மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டது முதல் சிறிலங்கா காவல்துறையினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். மேலும் அடையாளம் காணப்பட முடியாத இடம் ஒன்றில் அவர்களிடம் விசாரணைகளiயும் நடத்தியுள்ளனர்.

சிகிச்சை பெற்று வந்த சுமித்ராவை தற்போது கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து வைத்துள்ளனர். வவுனியாவுக்கு தயாளினியும் கஸ்தூரியும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதில் தயாளினி உயிரிழந்துள்ளார். உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் தயாளினி இறந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆகையால் இது தொடர்பில் சர்வதேச குழுவினர் விசாரணைகளை நடத்த வேண்டும் என்று அதில் கருணாரட்ணம் அடிகளார் கேட்டுக்கொண்டுள்ளார்.

நன்றி: புதினம் (2 ஒக்டோபர் 2006)

0 பின்னூட்டங்கள்: