Sunday, November 05, 2006

ஜெனீவா சொன்ன செய்தி என்ன?

ஜெனீவா அமைதிப்பேச்சு தமிழ் மக்களால் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்று கூறலாமா? அது தவறானது அன்னிய தேசத்தின் இதயசுத்தியுள்ள அழுத்தங்கள் சிங்கள அரசு மீது இறுகும் வரையில் அல்லது சிங்கள அரசின் போரிடும் வலுவை முற்றாக அழிக்கும் வரையில் அதனுடன் பேசுவதில் பயனில்லை என்பது தழிழீழத்தில் முளைத்த புல்லுக்கும் தெரியும்.

இந்தப் பேச்சுக்களை ஆவலாக எதிர்பார்த்தவர்கள் ஒன்று சர்வதேசம் என தம்மை அழைத்துக்கொள்ளும் சில மேற்குலக நாடுகளும், ஆசிய நாடுகளும். இரண்டாவது சிங்கள அரசு (இதை நம்புவதற்கு உங்களுக்கு கடினமாக இருக்கும்).

இந்த இருதரப்புக்கும் பலத்த ஏமாற்றத்தை ஜெனீவாப் பேச்சுக்கள் கொடுத்திருக்கும் என்பது தான் உண்மை. புலிகளின் மீது அழுத்தங்களையும் தடைகளையும் போட்ட இணைத்தலைமை நாடுகளில் பெரும்பாலான நாடுகள் அந்த அழுத்தங்களின் ஊடாக ஐக்கிய இலங்கை என்னும் பகட்டு வார்த்தைக்குள் ஒழிந்துள்ள தழிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வை திணிக்க முனைந்து நின்றன. அதன் வெளிப்பாடுகள் தான் சிங்கள அரசு தமிழீழத்திற்குரிய நிலத்தை ஆக்கிரமிக்கும் போது மெளனம் காப்பதும், புலிகளின் தற்காப்பு பதில் தாக்குதலில் சிங்களப்படை புறமுதுகிடும் போது பதறியடித்துக்கொண்டு ஓடி வருவதும் அறிக்கை விடுவதும்.

அதாவது புலிகளை அமைதிப்பேச்சு என்ற சொல்லைக்கொண்டு கட்டிவிட்டு அழுத்தங்கள், படுகொலைகள் மூலம் இன விடுதலையை மழுங்கடித்து விடுவது. இது தான் சில மேற்குலக நாடுகளினதும், ஆசிய நாடுகளினதும் தந்திரம். சிங்கள அரசுகளை பொறுத்தவரை தனது பொருளாதார தேவைகளுக்கும், அரசியல் நலன்களுக்குமாக தமிழ் மக்களையும் அவர்களது விடுதலை போரையும் பயன்படுத்தி வருவதுண்டு.

அதாவது இராணுவ நடவடிக்கைகள் மூலம் தெற்கில் தன்னை ஒரு சிங்கள பேரினவாதிகளின் காவலனாக காட்டி வாக்கு வங்கிகளை அதிகரிப்பது ஓருபுறம், பேச்சுக்களில் ஆர்வமாக இருப்பது போல் பாசாங்கு செய்து சர்வதேச உதவிகள் மூலம் தனது நிதி வறட்சியை ஈடுசெய்வது மறுபுறம்.

அண்மையில் மகிந்தருக்கும் ரணிலுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள் கூட இருகட்சிகளும் தமக்குரிய சர்வதேச ஆதரவை தக்கவைப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை காப்பதற்குமாகவே செய்யப்பட்ட ஒப்பந்தம் பேரினவாதிகளை மீறி இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு எதையும் வழங்கப்போவதில்லை.

தென் ஆசியாவின் பிராந்திய வல்லரசு எனப்படும் இந்தியா இலங்கையுடன் செய்திருந்த இந்திய-இலங்கை ஓப்பந்தத்தின் இறுதியாக எஞ்சியிருந்த வடக்கு-கிழக்கு இணைப்பைக்கூட பிரித்து இந்தியாவின் முகத்தில் கரியைப் பூசிய சிங்கள பேரினவாதிகளின் முன் ரணில்-மகிந்த ஒப்பந்தம் எம்மாத்திரம்? அன்றைய அரைகுறை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்குக் கூட சிங்கள அரசின் வான்பரப்பில் அத்துமீறி நுளைந்து உணவுப்பொதிகளை வீசி தனது படையின் பலத்தை கொண்டு சிங்கள அரசை மிரட்டியிருந்தது இந்திய அரசு. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் இன்று எஞ்சியிருப்பது என்ன?

சாதாரண ஒரு சிங்கள அரச ஆதிக்கமுடைய நீதித்துறையினால் கிழித்து எறியக்கூடிய ஒப்பந்தத்தை தமிழ் மக்களுக்கு அதிக உரிமைகளை கொடுக்கும் ஒரு ஒப்பந்தமாக பிரகடனப்படுத்தி அதை நிறைவேற்ற புலிகள் தடையாக உள்ளார்கள் என்று தமிழ் மக்களின் மீது கொடிய போரை கட்டவிழ்த்து விட்டது இந்திய அரசு. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் கொன்று குவித்திருந்தது. ஆனால் இன்று கிழித்து எறியப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக இந்திய ஆட்சியாளர்களின் கருத்து என்ன?

இவை மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளர்களால் குப்பையில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் ஏராளம். இனப்பிரச்சனைத் தீர்வுக்கென அமைக்கப்பட்ட குழுக்கள் ஏராளம். கூடிய கூட்டங்கள் எண்ணுக்கணக்கற்றவை இவற்றை நம்பி ஏமாந்த தமிழ்க்குழுக்களும் உண்டு. ஆனால் எந்த ஒரு தீர்வோ அல்லது தீர்வுக்குரிய அறிகுறியோ தென்படாதது ஏன்??

தென்பகுதி அரசியல் கட்சிகள் தமது அரசியல் பொருளாதார வரட்சியை ஈடுசெய்வதற்கு கூடும் கூட்டங்களை இனப்பிரச்சனை தீர்வுக்குரிய கூட்டங்களாகவும், குழுக்களாகவும் அர்த்தப்படுத்துவதுண்டு. அதனை சில ஆசிய நாடுகளும், சில மேற்குலக நாடுகளும் தீர்வைத்தரப்போகும் மிகச்சிறந்த நடவடிக்கையாக பாராட்டுவதும் அறிக்கை விடுவதும் வழமை. இது தமது பிராந்திய ஆதிக்கத்தை நினைவுபடுத்தவும், இந்து சமுத்திரத்தில் தமக்கு அக்கறை உண்டு எனக் காட்டுவதற்குமாக அந்தந்த நாடுகளின் முயற்சி. சில நாடுகள் இலங்கையில் நடக்கும் போரின் உண்மை நிலையைக்கூட விளங்க முற்படாது அறிக்கைகள் வெளியிடுவதுண்டு.

நோர்வேயின்; சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சரும் அமைதிப் பேச்சிற்கான அனுசரனையாளருமான எரிக் சொல்ஹெய்ம்; கருத்து கூறும்போது, பேச்சுக்கள் வெற்றியளித்தால் ஒதுக்கப்பட்ட பெருமளவு உதவித்தொகை சிங்கள அரசுக்கு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இது தான் பேச்சுக்கு நிபந்தனை விதித்த ரம்புக்வெலவை குத்துக்கரணமடிக்க வைத்த மர்மம் இந்த உதவித்தொகை ஏறத்தாழ நாலரை பில்லியன் அமெரிக்க டொலர்கள். இது சிங்கள அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி இதை பெற்றுவிட வேண்டும் என்று தான் ஜெனீவாப் பேச்சுக்கு முன்னர் அவசர அவசரமாக மகிந்த, ரணிலை அரவணைத்தது. நிமால் ஸ்ரீபால டீ சில்வா அரசியல் தீர்வைப்பற்றி பேசப்போகிறோம் என அடிக்கடி அறிக்கை விட்டதும் இதற்காகத்தான்.

அமைதிப்பேச்சை காரணமாக்கி சிங்கள அரசு நிதியைப்பெற்று அதில் பெருமளவை போருக்கு செலவு செய்யப்போகின்றது என்பது தான் உண்மை. அதன் வெளிப்பாடு தான் அண்மைய பாதுகாப்புச்செலவு ஒதுக்கீடான 139.5 பில்லியன் ரூபாய்கள். இவ்வளவு நம்பிக்கையீனமான பேச்சிற்கு புலிகள் ஏன் சென்றார்கள்?

ஓன்று இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்தல், இரண்டாவது சிங்கள அரச பயங்கரவாதத்தால் அன்றாடம் அல்லற்படும் மக்களின் துயரத்தை உலகிற்கு எடுத்து சொல்லுதல் ஆறு இலட்சம் மக்களை ஒரு திறந்த சிறைச்சாலை போன்ற குடாவிற்குள் அடைத்துவிட்டு அரைகுறை உணவைப் போட்டு சித்திரைவதைகளும் படுகொலைகளும் புரியும் அரச பயங்கரவாதத்தை வெளிக்கொண்டு வருவதும் அதற்கு சர்வதேசத்தின் எதிர்வினைகள் எப்படியாக இருக்கப்போகின்றன என்பதையும் அறியும் முயற்சி. எனவே ஜெனிவாவில் ஏற்பட்ட தோல்வி சிங்கள அரசிற்கும் அதன் தோழமை சக்திகளுக்கும் கிடைத்த தோல்வி என்பதே யதார்த்தம்.

போர்நிறுத்தத்தை பொறுத்தவரை முற்று முழுதாக பொது மக்களின் பாதுகாப்புக் கருதி உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்களின் அவலங்களை கண்காணிப்புக்குழுவோ, சமாதான அனுசரணையாளரான நோர்வேயோ அல்லது இணைத்தலைமை நாடுகளோ கண்டு கொண்டதாக தெரியவில்லை. நோர்வேயின் சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம்;;, யப்பான் நாட்டுப் பிரதிநிதி அகாசி, ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் எல்லோரும் சமாதான முயற்சிகள் முன்னகராது விட்டால் இருதரப்பும் பொருளாதார, அரசியல் ரீதியிலான சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிக்கை விட்டிருந்தார்கள்.

இங்கு இருதரப்பின் மீதான அழுத்தம் என்பது பொய்யானது ஏனெனில் புலிகள் மீது தடைகள், பயணத்தடைகள் என எல்லா அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனவே புலிகளின் மீது சர்வதேசம் அழுத்தம் கொடுக்க இனிமேல் ஏதுவுமில்லை. ஆகவே சிங்கள அரசுமீது அழுத்தங்கள் போடப்படலாம் என்பதே உள்ளார்ந்த கருத்து. ஆனால் வெறும் வாய்வார்த்தைகள் ஒன்றும் செய்யப்போவதில்லை. சர்வதேச நாடுகள் அமைதி வழியில் இனப்பிரச்சனையை தீர்க்க விரும்பினால் சிங்கள அரசு மீது செயல்வடிவில் பிரயோகிக்கும் பொருளாதார அரசியல் அழுத்தங்கள் தான்; அதற்கு ஒரேவழி.

சர்வதேசம் இதை செய்யத்தயாரா? என்பது தான் இன்றைய முக்கிய கேள்வி. இதற்கான பதிலில் தான் போரா சமாதானமாக என்பதும் தங்கியுள்ளது.

எந்தவித அழுத்தங்களும் போடப்படாமல் சிங்கள அரசை வழிக்கு கொண்டுவர முடியாது. சிங்கள அரசுக்கு மட்டுமல்லாது உலகெங்கும் இருந்த இனவாத அரசுகளையும் இப்படிப்பட்ட அழுத்தங்கள் மூலமே பணியவைத்தது வரலாறு.

உதாரணமாக யப்பானை எடுத்தால் வடகொரியா அணுகுண்டுப் பரிசோதனை செய்து இருவாரங்களில் அதன் மீது ஐ.நா சபையில் அழுத்தங்களை கொண்டுவர எடுத்த அக்கறையை போல நான்கரை வருடங்களாக அமைதிப்பேச்சு என்ற போர்வையில் இன அழிப்பையும், அப்பட்டமான மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டுள்ள சிங்கள அரசுமீது மேற்கொண்டது கிடையாது.

வடகொரியா வெடித்த அணுக்குண்டினால் எத்தனை பேர் பலியானார்கள்? வடகொரியா தற்போது தான் பரிசோதனையை செய்துள்ளது இன்னும் ஓரு பத்து அல்லது இருபது வருடங்களில் யப்பானை அச்சுறுத்தலாம் அல்லது அச்சுறுத்தாமலும் இருக்கலாம். ஆனால் தினம் தினம் ஒரு இனத்தை அழித்துக்கொண்டிருக்கும் சிங்கள அரசுக்கு வாய்வழி அழுத்தங்களை பிரயோகிக்கும் யப்பான் வடகொரியா மீது இருவாரங்களில் செயல்வடிவில் அழுத்தங்களை இட்டது எப்படி?

15,000 மக்களுக்கான நீர்விநியோகம் 15 நாட்கள் தடைப்பட்டதை மனிதாபிமான பிரச்சனையாக்கி உலகெங்கும் பிரச்சாரப்படுத்திய சிங்கள அரசு நீரை திறந்துவிட்ட பின்னரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு மக்களுக்கு நீர் வழங்கவென மாவிலாறை ஆக்கிரமித்துக்கொண்டது. ஆனால் இன்று ஆறு இலட்சம் தமிழ் மக்களுக்குரிய உணவையும், இயல்பு வாழ்க்கையையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி பெரும் இன அழிப்பை மேற்கொள்ள முனைந்து நிற்கின்றது.

அமைதிப் பேச்சிற்கு முன்னோடியாக மக்களின் இயல்பு வாழ்கையை சீர்செய்யுங்கள் என்றுதான் புலிகள் கேட்டார்கள். ஆனால் சர்வதேசத்திற்கு முன்னால் வைத்து தமிழ் மக்களுக்குரிய மனிதாபிமான பிரச்சனையை கூட தீர்க்க முடியாது என கூறிவிட்டது அரசு. தமிழ் மக்கள் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் ஜெனீவா - 01 இல் ஒப்புக்கொண்ட விடயங்களில் எதை நிறைவேற்றியது சிங்கள அரசு?

சரி, தற்போது பதையை திறக்க அரசு ஓப்புக்கொண்டுள்ளது என வைத்துக்கொள்வோம். நாளைக்கு புலிகள் செல் அடித்து விட்டார்கள் என்று கூறிக்கொண்டு அதை இழுத்து மூடாது என்பது என்ன உறுதி? தற்போது நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள், விமானத்தாக்குதல்கள் எல்லாவற்றிற்கும் புலிகள் ஆட்டிலறியால் தாக்கிவிட்டார்கள், துப்பாக்கியால் சுட்டுவிட்டார்கள் என பொய்யான காரணங்களை கூறிக்கொண்டு தானே மேற்கொள்கிறது. உண்மை நிலையை சென்று பார்க்க சிங்கள அரசு அனுமதிக்கவில்லை என்று சாக்குப்போக்கு கூறிக்கொண்டு கொழும்பில் குந்தியிருக்கிறது கண்காணிப்புக்குழு.

அதாவது, அமைதிப் பேச்சிற்குரிய அடிப்படை காரணியான போர்நிறுத்தத்தை சிங்கள அரசு மதித்து நடாக்காத வரை அமைதி வழியில் எதுவும் சாத்தியப்படப் போவதில்லை. அப்படியொரு நிலைக்கு சிங்கள அரசை வர வைப்பதற்கு சர்வதேச நாடுகளின் பொருளாதார அரசியல் அழுத்தங்கள் அவசியம். இறைமையுள்ள நாடு என சிங்கள தேசத்திற்கு முத்திரை குத்த முடியாது ஏனெனில் அது சிங்களவர்களுக்கு மட்டுமே இறைமையுள்ள நாடு. தமிழ் மக்களை பொறுத்தவரை அது ஒரு பயங்கரவாத அரசு. அதாவது ஒரு இரத்தம் தோய்ந்த ஜனநாயக நாடு (Democracy with Blood).

ரோடேசியாவில் (1968) இருந்து சேர்பியா (மென்ரோநீக்குரோ-2006) வரைக்கும் ஒவ்வொரு இனவாத அரசுகள் மீதும் சர்வதேச நாடுகள் விதித்த அரசியல் பொருளாதார அழுத்தங்கள் தான் அந்த நாடுகளில் இனப்போரை முடிவுக்கு கொண்டுவந்தன. சர்வதேசம் இறைமையுள்ள நாடுகள் மீது அழுங்களை போடுவதில்லை போன்றதான தோற்றப்பாட்டை இலங்கை விடயத்தில் கைவிட வேண்டும்.

ஈராக், ஈரான், வடகொரியா, சீனா, சிரியா, யுகோஸ்லாவாக்கியா, ரூவாண்டா, சோமாலியா, சூடான், சிரோலியோன் இவை எல்லாம் இறைமையுள்ள நாடுகள் தான். இவற்றின் மீது பொருளாதார, அரசியல் உட்பட பல்வேறு அழுத்தங்களை ஐ.நாவும், மேற்குலக நாடுகளும் விதிக்கவில்லையா?

பொருளாதார அழுத்தங்கள் அடிமட்ட சிங்களவர் தொடக்கம் மேல்தட்டு சிங்களவர் வரைக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் போது தான். அமைதி தீர்வுக்கு சிங்கள தேசம் உளப்பூர்வமாக சம்மதிக்கும்.

அப்படியரு நிலையை ஏற்படுத்தும் பொறுப்பு சர்வதேசத்தை சார்ந்தது, சர்வதேசத்தை அந்த நிலைக்கு நகர்த்தவும் நாம் செயலாற்ற வேண்டும். மேலும் தமிழ் மக்களும் சிங்கள அரசின் பொருளாதார வளங்களையும், வளர்ச்சியையும் முடக்க வேண்டும். 'சிறுதுளி பெருவெள்ளம் என்று சொல்வார்கள்" அதேபோலவே ஒவ்வொரு தமிழ் மக்களும் செயலாற்ற வேண்டிய நேரம் இது.

ஐப்பசி 18 ஆம் நாள் காலியில் நடந்த தாக்குதல் உல்லாசப்பயணத்துறையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது வீழ்ச்சி அடைந்துள்ள சிங்கள அரசின் சர்வதேச விமானக்கட்டணத்தின் மூலம் உங்களுக்கு தெளிவாக பூ¢யும். நாமும் எந்த எந்த வழிகளில் தமிழ்மக்களின் மூலம் சிங்கள அரசு வருமானத்தை பெறுகின்றது என்பதை அறிந்து கொண்டு தடுத்துநிறுத்த வேண்டும்.

ஏனெனில் சிங்கள அரசு சர்வதேசத்தின் முன்னிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான செய்தியை ஜெனீவாவில் வைத்து சொல்லியுள்ளது. அதாவது 'மனிதாபிமான (உயிர் வாழ்வதற்குரிய) அடிப்படை வசதிகளைக்கூட தனது அரசியல், படை நலன்களுக்கு அப்பால் விட்டுத்தர சிங்கள அரசோ, பேரினவாத சிங்கள மக்கள் கூட்டமோ தயாரில்லை" என்பது தான்.

எமது படை பலத்தையும், பொருளாதார வளத்தையும் பெருக்கிக்கொண்டு புலிகளுடன் ஒன்றிணைந்து மக்கள் சக்தியாக சிங்களப்படைகளை தோற்கடிப்பதன் மூலம். நாம் தான் ஏ-9 பாதையை திறக்கவேண்டும். அப்போது தான் அது நிரந்தரமாக எப்போதும் யாராலும் மூடப்படாத பாதையாக திகழும்.

சிங்கள அரசின் நீதித்துறையால் பி¡¢க்கப்பட்ட வடக்கையும், கிழக்கையும், படைப்பலத்தால் பிரிக்கப்பட்ட கலாச்சார நகரத்தையும், இதயபூமியான வன்னி மண்ணையும் மக்கள் சக்தி என்னும் பலம் கொண்டு நாம் இணைத்திட வேண்டும்.

அப்படியொரு நிலைவரும்போது சர்வதேசம் எமக்கு பின்னால் அணிவகுக்கும் என்பதுடன் சிங்கள அரசுக்கும் போரிட வலு இருக்கப்போவதில்லை. இது தான் ஜெனீவா எமக்கு சொன்ன அழுத்தமான செய்தி.
-அருஸ் (வேல்ஸ்)-

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்

0 பின்னூட்டங்கள்: