Saturday, November 18, 2006

ஓராண்டு கால ஆட்சியில் மகிந்த சாதித்தது என்ன?

சிங்கள இனத்தின் கடும்போக்காளர் என பலராலும் கருத்துக்கூறப்பட்ட மகிந்தவின் புதிய அரசு பதவியேற்று ஒரு வருடம் இந்த மாதம் 18 ஆம் நாளுடன் பூர்த்தியடைகின்றது. இந்த கடும்போக்கு அரச கூட்டணியால் தமிழ் மக்களின் விடுதலைப் போரை மழுங்கடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முதலில் போர்நிறுத்த ஒப்பந்தமீறலாகி, மென்தீவிரயுத்தமாகி, தீவிர போராகி இன்று சத்தமின்றி நாலாம் கட்ட ஈழப்போர் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

போர்நிறுத்தத்தில் உள்ள பலவீனமான சரத்துக்களையும், கருணா குழு என்ற ஒட்டுக்குழுவையும் நம்பி மகிந்தர் ஆரம்பித்த போர் இந்த ஒரு வருடத்தில் அவரின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றியுள்ளதா?

மகிந்த சுதந்திரக்கட்சியில் இருந்து ஜனாதிபதியாக தெரிவாகி இருந்தாலும், ஜனாதிபதியான பின்னர் பண்டாரநாயக்கா குடும்பம் அரசியலில் கொண்ட செல்வாக்கை போல ஏன் ராஜபக்ச குடும்பம் ஒரு உயர்மட்ட செல்வாக்கை பெறமுடியாது என சிந்திக்க தலைப்பட்டுள்ளார். எனவேதான் தனது முதல் வேலையாக பண்டாரநாயக்க குடும்பத்தை அரசியலில் இருந்து ஓரங்கட்ட ஆரம்பித்திருந்தார். ஓரங்கட்டுவது மட்டுமல்லாது முற்றாக அழித்துவிடவும் மகிந்த துணிந்துவிட்டார் என்றே கூறமுடியும்.

அதனால் தான் முன்னைநாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது உயிரை கையில் பிடித்தபடி லண்டனுக்கும் அமெரிக்காவிற்கும் பறந்து கொண்டிருந்தார். அவர் ஒரு சாதாரண பிரஜையாக கூட இலங்கை திரும்ப முடியவில்லை. இறுதியில் யுனெஸ்கோவில் ஒரு பதவியை பெற்றுக்கொண்டு உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க தனது நாட்டிற்கு தற்போது திரும்பியுள்ளார். இனிமேல் மகிந்த நினைத்தாலும் சந்திரிகாவை கொல்ல முடியாது ஏனெனில் ஒரு யுனெஸ்க்கோ பிரதிநிதியை கொன்றுவிட்டார் என்ற பழி அரசு மீது வீழ்ந்துவிடும்.

மகிந்தவின் அடுத்த இரு நகர்வுகளும் மகிந்தரின் இனவாதக் கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியவை. தனது குடும்ப உறுப்பினர்களையும் அவர்களின் விசுவாசிகளையும் பொறுப்பான பதவிகளில் அமர்த்தியதுடன். எதிர்த்தரப்பு முக்கியஸ்தர்களும் ஓரங்கட்டப்பட்டார்கள். அதன் வெளிப்பாடுகள் தான் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் நியமனங்களும், மேஜர் ஜெனரல் வஜீர விஜயகுணவர்த்தன தூக்கி எறியப்பட்டதும்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்து அதன் உறுப்பினர்களை உள்வாங்குவது இரண்டாவது உத்தி. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் கட்சி தாவியவர் தான் கேகலிய ரம்புக்வெல. தற்போது அவர் செஞ்சோற்றுக் கடன்கழிக்கும் தொழிலை தான் செம்மையாக செய்து கொண்டு இருக்கிறார்.

அரசியலில் தனது கட்சி மற்றும் குடும்ப அரசியலை உறுதிப்படுத்தும் வேலைகளை முடுக்கிவிட்ட மகிந்த தென்னிலங்கையில் தனது செல்வாக்கை வலுப்படுத்த அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார். அது என்ன என்பதை நீங்களே ஊகித்திருப்பீர்கள். தமிழ் மக்களின் மீதான ஆக்கிரமிப்பு போர்களையே சிங்கள அரசுகள் தென்னிலங்கையில் தமது செல்வாக்கை வலுப்படுத்துவதற்கு எப்போதும் கையில் எடுப்பதுண்டு.

'போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என ஜே.ஆரும், 'சமாதானத்திற்கான போர்" என சந்திரிகாவும் ஏறிய குதிரைக்கு பெயர் மாற்றப்பட்டது. அதுதான் 'பேச்சும் போரும்" இந்த பேச்சும் போரும் என்ற தந்திரம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தேசப்பற்றாளர்களையும், அப்பாவி பொதுமக்களையும் கருணா குழு என்ற போர்வையில் சிங்களப்படை படுகொலை செய்ய ஆரம்பித்ததில் இருந்து தீவிரமானது. இதை எதிர்த்து மக்கள் படையின் தற்காப்பு தாக்குதல்களும் ஆரம்பமாகின. வேறு வடிவில் சொல்வதானால் நாலாம் கட்ட ஈழப்போரின் கொரில்லாத் தாக்குதல்கள் உக்கிரமாகின.

விமானக்குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என சிங்களப் படைகளின் போர் எல்லைகள் விரிந்தன. இந்த போர்முனைப்புக்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் புலிகளுக்கு ஏற்பட்டது. தாக்குதல்கள், பதில் தாக்குதல்கள், ஊடுருவித் தாக்குதல்கள் என களம் கட்டுமீறியது. கருணா குழு என அரசு போட்டிருந்த முகமூடி தூக்கி வீசப்பட்டது. நேரடியான மோதல்களில் சிங்கள அரசு இறங்கியது அதற்கு காரணமும் அரசால் கூறப்பட்டது.

எனினும் அவசரமான ஒரு இராணுவ வெற்றி மகிந்தருக்கு தேவைப்பட்டது ஏனெனில் ஜே.வி.பி, கெல உறுமைய போன்றவற்றின் வாயை அடக்குவதற்கும், முடிந்தால் பொதுத்தேர்தலையும் நடாத்திவிடுவதற்கும். இந்த இராணுவ வெற்றிக்கு முதற்படியாக போர்நிறுத்த காலத்தில் புலிகளின் பலத்தை குறைத்துவிட திட்டமிட்டது அரசு. இதற்காக மூன்று அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டன.

  • சர்வதேசத்தடைகள், உள்ளுர் பொருளாதார தடைகள், தமிழ் வர்த்தகர்கள் மீதான படுகொலைகள் மூலம் புலிகளின் நிதிவளத்தை முடக்குதல்.
  • வலிந்த தாக்குதல்கள் மூலம் புலிகளின் படைபலத்தை குறைத்தல்.
  • விமானக் குண்டுவீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள், படுகொலைகள் மூலம் தமிழ் மக்களின் போரிடும் மனவலிமையை சிதறடித்தல்.

'எந்தத்தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் இருக்கும் (For every action, there is an equal and opposite reaction) என்ற நியூட்டனின் மூன்றாம் விதி சிங்கள அரசிற்கு புரியாது போனது தான் ஆச்சரியம். சிங்கள அரசின் தாக்குதல்களுக்கான பதிலடிகள் தெரிந்தெடுத்த இலக்குகள், தெரிந்தெடுத்த படையணிகள், அழிக்கப்பட வேண்டிய கனரக போர்க்கலங்களின் மீது துல்லியமாக வீழ்ந்தது.

பெரும் படையணிகள், கடும் சூட்டாதரவுடன் கிழக்கில் சிங்களப்படை நகர்வுகளை மேற்கொண்டது. ஆனால் அதற்காக அவர்கள் கொடுத்த விலைகள் அதிகம். வடக்கில் மேற்கொள்ள முனைந்த இராணுவ ஆக்கிரமிப்பு மண்ணைக்கவ்வியது. சிங்களப்படைகள் ஆரம்பித்த போர் சிங்களப்படைகளின் இருப்பை கேள்விக்குறியாக்கியது. அதாவது யாழில் உள்ள இராணுவம் தனது இருப்புக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

யாழில் உள்ள படையினரின் ஒரே ஒரு வழங்கல் பதையான கடலும் (40,000 துருப்புக்களை வான்வழி வழங்கல் மூலம் தக்கவைக்க சிங்கள அரசால் முடியாது) அடிக்கு மேல் அடிவாங்கி மூச்சிழுக்கும் நிலைக்கு வந்துள்ளது. அதாவது இந்த ஒரு வருடச்சமரை ஏன் நாலாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்துவிட்டதாக கருதுகிறோம்?

இதற்கு ஆதாரமாக இரண்டாம் ஈழப்பரின் ஓராண்டு நிறைவையும், மூன்றாம் ஈழப்போரின் ஓராண்டின் நிறைவையும் ஓப்பிட்டு பார்த்தல் பயனுள்ளது.

  • இரண்டாம் ஈழப்போரின் ஒருவருடத்தில் (10.06.1990 - 10.06.1992) சிங்களப்படை இழந்தவை: கண்காணிப்புக்கப்பல் - 01, சியாமாச்செட்டி குண்டுவீச்சு விமானம் - 01, ஏறத்தாள 2600 துருப்புக்கள்.
  • மூன்றாம் ஈழப்போரின் ஒரு வருடத்தில் (19.04.1995 - 19.04.1996) சிங்களப்படை இழந்தவை: கட்டளைக்கப்பல்கள்-02, பீரங்கிப்படகுகள் (Shangai class)-02, டோரா-03, ரோந்துப்படகு-01, அவ்ரோ-02, புக்காரா-01, MI-17 -01, Y-8 -01, அன்ரனோவ் - 02, டாங்கிகள் - 05, ஏறத்தாழ 2,100 துருப்புக்கள்.
  • உக்கிரமற்ற நாலாம்கட்ட ஈழப்போரின் ஒரு வருடத்தில் சிங்களப்படை இழந்தவை: கட்டளைக்கப்பல்-01, டோரா-07, ரோந்துப்படகு-02, கிபீர்-01, டாங்கிகள்-12, 1,600-க்கும் மேற்பட்ட துருப்புக்கள்.

மேற்கூறப்பட்ட இழப்புக்களை பார்க்கும் போது புலிகளின் வலிமை எத்தகையது என ஓரளவு ஊகிக்க முடிவதுடன் உக்கிரமற்ற போரின் உக்கிரமும் விளங்கும்.

ஏனெனில் பிரகடனப்படுத்தப்படாத இந்த ஒருவருடப் போரில் புலிகள் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மட்டும் தான் மேற்கொண்டுள்ளார்கள். அதாவது கனரக ஆயுதங்களையோ, ஏவுகணைகளையோ அதிகளவில் பாவிக்க முனையவில்லை என்பது ஒருபுறம். தற்காப்புத்தாக்குதல்கள் தவிர்ந்த பெரும் தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்பது மறுபுறம். போர்நிறுத்தம் என்ற சங்கிலியால் ஒரு கை கட்டப்பட்ட நிலையில் சமர்பூ¢ந்துள்ளார்கள் என சுருக்கமாக கூறலாம்.

சிங்கள அரசின் கடற்படை இந்த ஒரு வருடத்தில் சந்தித்த இழப்புக்கள் ஈழப்போர் வரலாறுகளுடன் ஒப்பிடும் போது மிக அதிகம். அதாவது குறுகிய காலத்தில் இழந்த பயிற்றப்பட்ட படையினரதும், வலிமையான கலங்களினதும் இழப்புக்கள் மிக அதிகம். மூன்றாம் ஈழப்போர் எப்படி சிங்கள தரைப்படையையும், விமானப்படையையும் முடக்கியதோ அதே போன்று நாலாம் கட்ட ஈழப்போரின் முழுமையான ஆரம்பம் கடற்படையை வலுவிழக்க செய்துவிடும் என்பது தான் நிகழ்வுகளின் சுருக்கம்.

இன்று அழிவைநோக்கி உள்ள தனது துருப்புக்களை காப்பாற்றுவதற்காக கொத்துக் கொத்தாக அப்பாவி மக்களையும், தெரிந்தெடுத்த மக்களின் பிரதிநிதிகளையும் கொன்று குவிக்கிறது அரசு. அதாவது இந்த ஒரு வருடத்தில் அரசின் இராணுவ முனைப்புக்கள் எல்லாம் எதிர்வினையாகிப் போனதும், சிங்கள அரசு மெல்ல மெல்ல சர்வதேச விதிமுறைகளில் இருந்து விலகிப்போகும் ஒரு பயங்கரவாத அரசாக மாறிக்கொண்டு இருப்பதும் உண்மை. அரசிற்கு முண்டுகொடுத்துவந்த மேற்குலகத்திற்கும், சில ஆசியநாடுகளிற்கும் இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குலகை பொறுத்தவரை தங்கள் மீது மூன்றாம் உலக நாடுகள் கொண்டுள்ள கொஞ்ச நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளார்கள். அதன் வெளிப்பாடுகள் தான் கண்டனங்கள், கவலைகள், குயடைநன ளுவயவந என்ற பிரகடனம், மனித உரிமை அமைப்புக்களின் சாடல்கள் எல்லாம். மகிந்தவின் ஆட்சியின் வருட முற்பகுதியில் புலிகள் மீது வீழ்ந்த அழுத்தங்கள் பிற்பகுதியில் அரசை நோக்கி திரும்பத்தொடங்கியுள்ளன. ஆனால் இந்த அழுத்தங்கள் செயல்வடிவில் எவ்வளவு காத்திரமாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் தான் அமைதிமுயற்சியின் ஆயுட்காலம் தங்கியுள்ளது. எனவே மேற்குலகின் ஏட்டுச்சுரக்காயால் தற்போதைக்கு பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.

எனினும் சர்வதேசத்தினதும், சர்வதேச அமைப்புக்களினதும் இத்தகைய கண்டனங்களும், அறிக்கைகளும், புலம்பெயர்ந்த நாடுகளில் எமது மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களும், புலிகளின் தாக்குதல்களும், முறிந்துபோன பேச்சும், அதிகரித்த பாதுகாப்புச்செலவும் சிங்கள அரசின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. அதாவது அரசால் ஆரம்பித்த வலிந்த போர் அதன் பொருளாதாரத்தின் அத்திவாரத்தை ஆட்டம்காண வைத்துள்ளது. வேறுவிதமாகக் கூறின் சாதாரண சிங்கள மக்கள் போரின் சுமையை சுமக்கப்போகிறார்கள்.

அரசு தனது பொருளாதாரம் முன்னேற்றமாக உள்ளது என காட்டும் அறிக்கைகள் எல்லாம் போலியானவை என்பது பொருளியல் வல்லுனர்களின் கருத்து. இந்த பொருளாதாரத்தை சீர்செய்யாது மகிந்த சிந்தனையை தெற்கில் நடைமுறைப்படுத்த முடியாது.

அதாவது இந்த ஒரு வருடத்தில் மகிந்தவின் இராணுவக்கனவு எதிர்வினையாகியதால் தென்னிலங்கையில் ஏற்பட்ட பலவீனம், சர்வதேசத்தில் சிங்கள அரசு மீது ஏற்பட்டுள்ள அதிதிருப்தி, பொருளாதார நெருக்கடி போன்றவை மகிந்தவின் அரசியல் செல்வாக்கை தென்னிலங்கையில் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதில் எதிர்க்கட்சிகளினதும், கூட்டணி கட்சிகளினதும் பங்கும் காத்திரமானது அதாவது மகிந்தா¢ன் செல்வாக்கை சரிப்பதற்கு போர் தான் சரியானவழி என அவர்கள் கணிப்பிட்டு அதற்கு ஏற்ப மகிந்தரை உசுப்பேத்தி விட்டிருந்தனர். மாவிலாறை நோக்கி படையெடுத்த கெல உறுமய, நீல அல்லி பிரச்சாரம் மேற்கொண்ட ஜே.வி.பி, மகிந்தரின் போர் நடவடிக்கை வெற்றிகளை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்ற சஜீத் பிரேமதாசாவின் (ஐ.தே.க) கூற்று என்பன இதையே எடுத்தியம்புகின்றன.

வரலாறும் இதைத்தான் கூறி நிற்கின்றது. 1977 இல் ஜே. ஆரின் திறந்த பொருளாதாரக்கொள்கை சிங்கள அரசின் பொருளாதாரத்தை சிங்கப்பூரை விட அதிகளவில் உயர்த்தும் எனவும் ஐ.தே.கவை அசைக்க முடியாது எனவும் தென்னிலங்கை கனவுகண்டது. ஆனால் ஜே.ஆரின் போர்வெறி அவரை இறுதியில் அநாதை பிணமாக்கியது.

1989 இல் அதிகாரத்திற்கு வந்த பிரேமதாசாவின் '2000 ஆம் ஆண்டில் எல்லோர்க்கும் புகலிடம்" என்ற கோசம் தென்னிலங்கையில் பட்டி தொட்டியெல்லம் எதிரொலித்தது. ஆனால் அரைகுறை ஆட்சியில் அவர் நடுத்தெருவில் உயிரைவிட்டது தமிழ் மக்கள் மீது தொடுத்த போரினால்.

1994 இல் பதவிக்கு வந்த சந்திரிகா அம்மையார் சிங்கள தேசத்தின் அதிர்ஸ்ட தேவதையாக மின்னினார். ஆனால் அவர் கொட்டிய போர்முரசு அவரை அரசியல் அநாதையாக்கியதுடன். தனது உயிரை காப்பாற்ற இன்று உலகெங்கும் ஓடவேண்டிய நிலைக்கும் கொண்டு சென்றுள்ளது.

இவை எல்லாம் அவர்கள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடிய போரின் விளைவுகள் தான். இந்த வரலாற்றை சீர்தூக்கிப் பார்க்க மறுத்த மகிந்தவிற்கு கடந்து போன ஆண்டு நல்ல படிப்பினையை கொடுத்திருக்கும் என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. இதை மேலும் உதறித்தள்ளியவராக மகிந்தரின் வரும் ஆண்டுகளும் அமையின் ராஜபக்ஷ என்ற சொல்லை தென்னிலங்கை அரசியலில் இருந்து அழிக்கக்கூடிய வல்லமை ஈழப்போருக்கு உண்டு என்பதை காலம் கற்பிக்கும்.

- அருஸ் (வேல்ஸ்) -

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்

0 பின்னூட்டங்கள்: