தமிழீழத் தனியரசுதான் தீர்வு- தேசியத் தலைவர்
தமிழீழத் தேசிய மாவீரர் எழுச்சி நாளை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையன்று தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரையின் முக்கிய அம்சம்:
"நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானத்திற்கான இந்த அமைதிப் பயணம் ஆரம்பமாகி நீண்டகாலம் ஆகிவிட்டது. இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் நாம் எம்மால் இயன்றதைச் செய்தோம். பொறுமையினைக் கடைப்பிடித்தோம். அமைதிவழித் தீர்வினைக் கொண்டுவருவதற்காக எண்ணிலடங்கா சந்தர்ப்பங்களை வழங்கினோம். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது ஒரு தடவையும், மகிந்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இன்னொரு தடவையுமாக இரண்டு தடவைகள் எமது விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கான திட்டத்தினை ஒத்திவைத்து, சமாதான முயற்சிகளுக்கு மேலும் சந்தர்ப்பங்களை வழங்கினோம்.
தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சிங்களத் தலைவர்கள் நீதியான தீர்வினை ஒருபோதுமே முன்வைக்கமாட்டார்கள் என்பது இன்று தெட்டத் தெளிவாகியுள்ளது. ஆகவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, அதே பயனற்ற பழைய பாதையில் நடப்பதற்கு நாம் தயாராக இல்லை.
சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தினையும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். விடுதலைக்கான பாதையின் தமது பயணத்தினை மீளவும் தமிழர்கள் ஆரம்பித்திருக்கின்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் உலகத் தமிழினத்திடமிருந்து தொடர்ச்சியான ஆதரவினையும் உதவியையும் நாம் வேண்டிநிற்கின்றோம்.
தங்களது ஆதரவுக்குரலினை வழங்கிவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் நாங்கள், அவர்களது முயற்சிகளைத் தொடர்ந்தும் வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் படியும் அவர்களைக் கேட்டுநிற்கின்றோம்.
இடம்பெயர்ந்து உலகம் பூராகவும் பரந்து வாழும் புலம்பெயர்வாழும் தமிழ் உறவுகள் எமது போராட்டத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்புக்களுக்கு எங்களது அன்பையும் நன்றிகளையும் நாம் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், அவர்களது தொடர்ச்சியான பங்களிப்பினையும், ஆதரவினையும் தொடந்தும் வழங்கும்படி கேட்டுநிற்கின்றோம்.
தமிழீழத் தேசிய மாவீரர் எழுச்சி நாளை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையன்று தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய முழுமையான உரையை இங்கு வாசிக்கலாம்:
http://www.eelampage.com/?cn=29959
0 பின்னூட்டங்கள்:
Post a Comment