Friday, January 26, 2007

வாகரையில் தவறாகிப்போன மதிப்பீடும் இலக்கும்

வாகரைப் பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியமையானது விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டனரா?- விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் இராணுவச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா? என்ற கேள்விகளைப் பலர் கேட்கக் காரணமாகியுள்ளது.

வாகரைப் பிரதேசத்தின் முக்கியத்துவம், கிழக்கில் ஒரு பிரதேசத்தின் கட்டுப்பாட்டை விடுதலைப் புலிகள் இழந்துள்ளமை போன்ற விடயங்களே இக்கேள்விகள் எழுவதற்கான முக்கியமான காரணியாகும். மேல் சொன்ன காரணங்களின் அடிப்படையில் பார்க்கப் போனால், வாகரைப் பிரதேசத்தை விட்டு விடுதலைப் புலிகள் வெளியேறியமை புலிகளுக்குப் பின்னடைவு அல்ல எனக் கூறிவிட முடியாது.

ஏனெனில் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பிரதேசம் கைமாறிப் போவது என்பதும், கிழக்கிற்கான தொடர்பாக, அதாவது மட்டக்களப்பிற்கான கடல்வழித் தொடர்பிற்கான மார்க்கமாக இருந்த ஒரு பகுதி இல்லாது போயுள்ளமை என்பது சிறிதளவேனும் பின்னடைவாகவே பார்க்கப்படும். ஆகையினால் இப்பிரதேசத்திற்காக விடுதலைப் புலிகள் தொடர்ந்து போரிட்டிருத்தல் வேண்டுமா? அவ்வாறு போரிடுதல் எந்தளவிற்கு இராணுவ ரீதியில் ஏற்புடையதாக இருக்க முடியும்? என்பவை இங்கு எழுப்பப்பட வேண்டிய முக்கியமான கேள்வியாகும்.

வாகரைப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்கு சிறிலங்கா இராணுவத்தினருக்குச் சுமார் நான்கு மாதங்கள் தேவைப்பட்டன. வேறுவிதமாகக் கூறுவதானால், ஜயசிக்குறு நடவடிக்கையின் போது இராணுவம் விட்டுச்சென்ற பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கென நான்கு மாதங்கள் போரிட வேண்டியதாகியது.

அது மட்டுமன்றி நூற்றுக்கு மேற்பட்ட படையினரை இழக்க வேண்டியதாகவும், நூற்றுக்கணக்கான படையினர் காயமடைய வேண்டியதுமானதொரு நிலையும் இராணுவத்தரப்பிற்கு ஏற்பட்டிருந்தது. அதாவது கைவிட்டுச் சென்ற பிரதேசம் ஒன்றை மீளக் கைப்பற்றுவதற்காகச் சிறிலங்கா இராணுவம் எதிர்பார்த்ததற்கும் மேலாக விலை கொடுக்க வேண்டியதாக இருந்தது.

யுத்த நிறுத்த உடன்பாட்டின் பிரகாரம் இருதரப்பினரதும் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்ற ரீதியில் வடக்கிலும் கிழக்கிலும் பிரதேசங்கள் குறிப்பிடப்பட்டிருந்தனவே ஒழிய, வடக்கில் வரையறை செய்யபட்டது போன்று கிழக்கில் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் வரையறை செய்யப்பட்டதாக இல்லை.

இதனால் யுத்த நிறுத்த காலத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டதும் உண்டு. அதாவது சிறிலங்கா ஆயுதப்படையினர் சில வேளைகளில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டிற்குள் இல்லை எனக் கூறியதும் உண்டு. அதேபோன்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுப் பகுதி என்றும் கூறியதுண்டு.

தற்பொழுது வாகரையை இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பினும், அதன் கட்டுப்பாட்டை இராணுவம் எந்தளவிற்குக் கொண்டிருக்கப் போகின்றது· கொண்டிருக்க முடியும் என்பதைப் பொறுத்தே வாகரையை ஆக்கிரமித்தமை பொருத்தமானதொரு இராணுவ நடவடிக்கைதானா? என்ற முடிவிற்கு வரமுடியும்.

இனி வாகரை தொடர்பான நடவடிக்கைகளுக்கு வருவோம். வாகரையைக் கைப்பற்றுதல் என்ற சிறிலங்கா அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் இராணுவம் செயற்படத் தொடங்கியதும் அதற்குப் பல வழிகள் கைக்கொள்ளப்பட்டன. இதில் முக்கியமானது அப்பிரதேசத்தில் பெரும் மனித அவலத்தைத் தோற்றுவித்து அப்பிரதேசத்தில் இருந்து மக்களை வெளியேற்றுதல் என்பது இதற்கென அரச தரப்பு இரண்டு வழிமுறைகளைக் கைக்கொண்டது.

1. உணவுப் பொருள், மருந்துப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள், சேவைகள் என்பனவற்றை முற்றாக முடக்குதல்.

2. பா¡¢ய இன அழிப்பு நடவடிக்கையாக விமான மற்றும் தொடர் எறிகணை வீச்சுக்களை மக்கள் குடியிருப்புக்கள் மீது நடாத்துதல்.

ஒக்ரோபர் மாதத்தின் ஆரம்பத்தில் வாகரையைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்கா இராணுவம் நடவடிக்கைகளைத் தொடங்கியதும் வாகரைப் பிரதேசத்திற்கான தரை வழிப்பாதையான ஏ-15 பாதையை மூடியது இதன்மூலம் மக்களின் போக்குவரத்து உட்பட அப்பிரதேசத்திற்கான அனைத்து விநியோகங்களும் முடக்கப்பட்டன.

ஒக்ரோபாரின் ஆரம்பத்தில் மேற்கொண்ட முற்றுகையை அடுத்து நவம்பர் மாத இறுதிப் பகுதியில் ஒரு தடவை மட்டும் மிகக் குறைந்த அளவிலான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. அவையும் சர்வதேச நிவாரண அமைப்புக்களின் பெரும் முயற்சிகளிலேயே சாத்தியமாகியது.

அதன் பின்னர் இராணுவம் வாகரைப் பிரதேசத்திற்குள் நுழையும் வரை அதாவது ஆக்கிரமிக்கப்படும் வரை அத்தியாவசியத் தேவைப் பணிகள் முடக்கப்பட்டவையாகவே இருந்தன. சிறிலங்கா அரசு மக்களின் அத்தியாவசிய தேவைகளை யுத்தத்தின் ஒரு கருவியாக்கிக் கொண்டது.

அடுத்ததாக, வாகரைப்பிரதேசத்தின் மீது சிறிலங்கா இராணுவமும், விமானப்படையும் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலினால் பெரும் மனித அவலமே தோற்றுவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு, பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர், காயமடைந்தவர்களில் ஒரு பகுதியினர் மருத்துவ வசதி கிட்டாததால் மரணமடைந்தனர்.

இதேசமயம் வாகரை வைத்தியசாலைப் பகுதியைத் தாக்குதலற்ற சூனியப்பிரதேசமாக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக வாகரை வைத்தியசாலையும் அதன் வளாகப் பகுதியும் தாக்குதலுக்கு உள்ளானதில் பலர் காயமடைய வேண்டியதாயிற்று.

அதாவது பெரும் மனித அவலத்தைத் தோற்றுவித்து மக்களை வெளியேற்றுதல் என்பது அரசின் உறுதியான கொள்கையாக இருந்தது. இதன் வழிமுறையாக ஒருபுறத்தில் பட்டினி போட்டு மக்களைக் கொல்லுதல் மற்றொரு புறத்தில் இராணுவ நடவடிக்கைகள் மூலம் மக்களை அழித்தொழித்தல் என்பதாக இருந்தது.

இந்நிலையில் வாகரை வைத்தியசாலைப் பகுதி மீதும் சிறிலங்கா இராணுவம் தாக்குதல் தொடர்வதற்குத் தீர்மானம் மேற்கொண்டமை உணரப்பட்டதையடுத்து, வாகரையில் இருந்து வெளியேறுதல் என்பது தவிர்க்கப்படமுடியாத தொன்றாகியது. அதாவது சிறிலங்கா அரசு இராணுவ ரீதியில் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தவும், இனப்படுகொலை புரியவும் தயாராகிவிட்ட நிலையில் வாகரையில் இருந்து வெளியேறுதல் என்பது மக்களைக் காக்கும் நடவடிக்கையில் ஒன்றாகியது. அதாவது பெரும் இன அழிவில் இருந்து மக்களைக் காப்பதென்பதும் விடுதலைப் புலிகளின் கடமையாகியது.

இந்த வகையில் வாகரைப் பிரதேசத்தை ஆக்கிரமிக்க சிறிலங்கா அரசும், அதன் இராணுவமும் கூட்டாக மேற்கொண்ட இவ் வழிமுறை சர்வதேச விதிகளுக்கு மாறானதாகும். அத்தோடு வாகரைப் பிரதேசத்தின் மீதான சிறிலங்கா அரசின் நடவடிக்கையானது சிறிலங்கா அரசு தனது இராணுவ ரீதியிலான இலக்கை நிறைவேற்றிக் கொள்ள எத்தகைய மனித அவலத்தையும் இன அழிப்பு நடவடிக்கைக்கும் தயாராகவுள்ளது என்பதை சர்வதேச சமூகம் பூ¢ந்து கொள்ளவும் விளங்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் கொடுத்துள்ளது எனின் மிகையாகாது.

இதேசமயம் இத்தகைய வழிமுறையும், நடவடிக்கைகளும் வாகரையை ஆக்கிரமிக்க அவர்களுக்கு உதவியதாக இருப்பினும் இராணுவ ரீதியில் சிறிலங்கா இராணுவத்தின் மதிப்பீடு, சரியானதா? இலக்குகள் எட்டப்பட்டனவா? என்பவையே வாகரை ஆக்கிரமிப்பின் பயனைத் தீர்மானிப்பதாக இருக்கும்.

வாகரை குறித்து சிறிலங்கா இராணுவத்தின் மதிப்பீடென்பது கிழக்கில் விடுதலைப் புலிகள் குறித்த மதிப்பீட்டின் ஒரு பகுதியாகவே கொள்ளத்தக்கதாகும். அவ்வாறானால் இம்மதிப்பீடு சரியானதா? என்பதே இன்றுள்ள கேள்வியாகும். அதாவது இராணுவத்தின் மதிப்பீட்டின்படி வாகரை நடவடிக்கை முற்றுப்பெற்றதா? என்பதே ஆகும்.

வாகரை குறித்த- அதாவது கிழக்குக் குறித்த சிறிலங்கா இராணுவத்தின் மதிப்பீடானது ஒட்டுக்குழுவான கருணா குழுவையும் ஒரு அங்கமாக இணைத்துக்கொண்டதாகவே இருந்தது. அதாவது இவ் ஒட்டுக்குழுவின் வெளியேற்றத்தால் இராணுவம் பெற்றுக்கொண்ட அனுகூலம் இவ் ஒட்டுக்குழு இராணுவ நடவடிக்கையின் போது ஆற்றக்கூடிய பங்களிப்பு என்பனவற்றுடன் சம்பந்தப்பட்டதாகவே இருந்தது.

இதன் பிரகாரம் வாகரைப் பிரதேச ஆக்கிரமிப்பில் இவ் ஒட்டுக்குழுவையும் இணைத்தே சிறிலங்கா இராணுவத்தரப்பு முதலில் திட்டமிட்டது. இதன் பிரகாரம் ஒக்ரோபர் ஆரம்பத்தில் (06.10.06) மேற்கொண்ட ஆரம்பகட்ட நடவடிக்கையில் ஒட்டுக்குழுவும் இராணுவத்துடன் சேர்ந்து களத்தில் இறங்கியது. ஆனால், விடுதலைப் புலிகள் கொடுத்த பதிலடியில் இராணுவத்திலும், ஒட்டுக்குழுவிலுமாக 30 இற்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதன் மூலம் சிறிலங்கா இராணுவத்திற்கு ஒட்டுக்குழு மீதான நம்பிக்கை அற்றுப்போனது. தமது மதிப்பீடு குறித்து மீள் பா¢சீலனை செய்யவேண்டியதாயிற்று.

அடுத்ததாக வாகரையைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட பல முயற்சிகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. இதில் அதிகாரிகள் சிலரும் பலியாகியிருந்தனர். குறிப்பாக மாங்கேணி கட்டளை அதிகாரி உட்பட பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் சில சண்டைகளில் சடலங்களையும் விட்டு விட்டு இராணுவம் தப்பி ஓட வேண்டியதாயிற்று.

அதாவது வாகரையில் விடுதலைப் புலிகள்; குறித்த இராணுவத்தின் மதிப்பீடு தவறாகியது இத்தோல்விகளுக்குக் காரணம் தேட விளைந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா வானிலை பாதகமாக இருந்ததாகவும் கடல் கொந்தளிப்பாக இருந்ததாகவும் இயற்கை மீது பழியைப் போட்டார்.

ஆனால் அப்பிரதேசத்தில் அக்காலப்பகுதியில் நிலவிய வானிலையும் கடற்கொந்தளிப்பும் பருவ காலத்திற்குரியவையே. அதாவது வழமைக்கு மாறான நிகழ்வாகவோ இடைக்கிடை ஏற்படும் வானிலை செயற்பாடாகவோ இருக்கவில்லை. ஆகையினால் இராணுவத் தளபதி தமது மதிப்பீட்டுத் தவறிற்கு பருவகால வானிலையைக் காரணமாகக் கூறியமை அவரின் தவறான மதிப்பீட்டிற்கான நொண்டிச்சாட்டே.

அடுத்ததாக சிறிலங்கா இராணுவம் பெரும் மனித அவலத்தைத் தோற்றுவிக்கத்தக்கதான பா¡¢ய தாக்குதல் திட்டத்துடன் வாகரையின் வடக்கிலும் தெற்கிலும் மும்முனைகளில் தாக்குதலை ஆரம்பித்ததை அடுத்து மனிதப் பெரும் அவலத்தையும் தடுக்கும் நோக்கிலும், விடுதலைப் புலிகள் இழப்பின்றியும் வாகரையை விட்டு வெளியேறியமையானது சிறிலங்கா இராணுவத்தரப்பிற்கு ஏற்பட்ட பெரும் ஏமாற்றமாகவே இருக்கமுடியும்.

சிறிலங்கா அரச தரப்பிற்கு ஆதரவான இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் உட்பட பல விமர்சகர்கள் விடுதலைப் புலிகள் தந்திரோபாயமாகப் பின் வாங்கிக்கொண்டனர் என்றே இதனைக் குறிப்பிடுகின்றனர். அதாவது இராணுவம் விடுதலைப் புலிகளை முறியடித்தோ தோற்கடித்தோ வாகரைப் பிரதேசத்தைக் கைப்பற்றவில்லை என்பதே இதன் அர்த்தமாகும்.

எடுத்துக் காட்டாகக் கூறுவதானால் யாழ். குடாநாட்டின் மீது ¡¢விரச நடவடிக்கையை ஆரம்பித்தபோது எவ்வாறு புலிகள் நடந்து கொண்டார்களோ அவ்வாறே நடந்துகொண்டார்கள். சிறிலங்கா இராணுவத்தினர் மக்களும் விடுதலைப் புலிகளும் வெளியேறிய வாகரைக்குள்ளேயே புக முடிந்தது.

ஆனால் வாகரையை நோக்கிய படை நடவடிக்கை சிறிலங்காப் படைத்தரப்பு சில இலக்குகளைத் தெளிவாகவே கொண்டிருந்தது. அதில் விடுதலைப் புலிகளின் போரிடும் வலுவைக் குறைத்தல், அதாவது அழித்தல் முக்கியமானது. ஆனால் வாகரையில் அது நிறைவேறவில்லை.

இதேசமயம் வாகரைப் பிரதேசத்தின் மீதான படை நடவடிக்கைகளின் போது இடம்பெறும் எனச் சிறிலங்கா இராணுவத் தலைமைப்பீடத்தின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை என்றே கூறலாம். அதாவது வாகரையின் முக்கியத்துவம் கருதி அதனைத் தக்க வைப்பதற்காக விடுதலைப் புலிகள் வடக்கில் இருந்து பெரும் ஆளணியினரை வாகரைக்கு நகர்த்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு இராணுவத் தரப்பிற்கு இருந்தது.

சிறிலங்கா அரசினதும் இராணுவத் தளபதியின் தற்போதைய திட்டமானது கிழக்கில் பெரும் களமுனைகளைத் திறத்தலின் மூலம் விடுதலைப் புலிகளை கிழக்கிற்கு இழுத்து பொருத்தமற்ற பெளதீக மற்றும் பண்பாட்டுச் சூழலில் யுத்தத்தை நடத்தி தோற்கடித்தல் ஆகும். இதன் மூலம் இராணுவச் சமநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது அதன் எதிர்பார்க்கையாகும். ஆனால் சிறிலங்கா இராணுவத் தலைமைப்பீடத்தினதும் அன்றி சிறிலங்கா அரசினதும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப விடுதலைப்புலிகள் செயற்படவில்லை. இதனால் சிறிலங்கா இராணுவத்தலைமையின் எதிர்பார்ப்பும் இந் நடவடிக்கை மூலம் நிறைவேறவில்லை.

சில இராணுவ ஆய்வாளர்களும் வேறு சிலரும் யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேறியதையும் வாகரையில் இருந்து வெளியேறியதையும் ஒப்பிட முடியுமா எனக் கேள்வி எழுப்பவும் கூடும். ஆனால் யுத்தத்தை எவரும் தமக்குச் சாதகமான சூழலில் நடத்துவதே வெற்றிதரக்கூடிய நடவடிக்கையாக அமையும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அத்தோடு இராணுவம் கிழக்கில் புலிகளைத் தோற்கடிப்பதன் மூலம் வலுச்சமநிலையை மாற்றலாம் என எதிர்பார்ப்பின் புலிகள் வேறு ஒரு பகுதியில் வெற்றிபெறுவதன் மூலமும் வலுச்சமநிலையை மாற்றலாம் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் அது யதார்த்த பூர்வமானது. அவ்வாறு இல்லாதுவிடில் நெப்போலியனதும் ஹிட்லரினதும் தோல்வி ரஷ்யாவில் அதாவது மொஸ்கோ படையடுப்பில் ஏற்பட்ட தொல்விகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்க முடியாது.
-ஜெயராஜ்-
ஈழநாதம் நாளேட்டுக்காக எழுதியது

நன்றி: தமிழ்நாதம்

0 பின்னூட்டங்கள்: