Wednesday, January 10, 2007

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

கானமயிலாட அதனைப் பார்த்த வான்கோழி தானும் ஆடியதாம்
-அருஸ் (வேல்ஸ்)-

விடுதலைப் புலிகள் பெருமெடுப்பிலான தாக்குதல்களை நிகழ்த்தவில்லை ஆனாலும் சிங்களப்படைகளின் விமானக்குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் தொடர்கின்றன. அதற்கான காரணமும் கூறப்படுகின்றது. புலிகள் எறிகணைத் தாக்குதல் மேற்கொண்டனர், புலிகளின் கனரக ஆயுதங்களை அழிக்கிறோம், புலிகளின் கனரக ஆயுதங்கள் இராணுவ முகாம்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவை எனும் காரணங்களை கூறிக்கொண்டு சிங்களப்படைகளின் இனப்போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இடம்பெற்று வரும் இந்தப் போருக்கும் முன்பு நடைபெற்ற ஈழப் போர்களுக்கும் அதிகளவிலான வேறுபாடுகளை யாரும் காணமுடியாது. ஆனாலும் முக்கிய சில வேறுபாடுகள் உண்டு. ஒன்று முற்று முழுதாக சமாதானம் முறிந்துவிடாத நிலையில் இடம்பெறும் போர். இரண்டாவது தற்போது இடம்பெறும் போர் அதிகளவான சர்வதேசத்தின் கவனத்தை பெற்றிருப்பது.

சர்வதேசத்தின் கவனம் அதிகளவில் குவிந்துள்ள நிலையிலும் சிங்கள தேசம் தனது படுகொலைகளையோ, கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களையோ அல்லது அப்பட்டமான மனித உரிமை மீறல்களையோ சிறிதளவேனும் குறைத்துக்கொள்ள முயற்சிக்கவில்லை. இடம்பெற்ற படுகொலைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கவலைகளை வெளியிட்டும், போரை நிறுத்துமாறு கூறியும், மனித நேயமுள்ள சில மேற்குலக நாடுகள் சிங்கள அரசின் போக்கில் அதிருப்தி அடைவதாக கூறியும் அரசின் காதில் ஏறவில்லை.

இது எதனைக் காட்டுகின்றது? வாய்மூலமான அழுத்தங்கள் எதற்கும் உதவப்போவதில்லை என்பது ஒருபுறமிருக்க, சிங்கள தேசம் தன்னையும் தனது படைகளையும் ஒரு கற்பனைக் கோட்டில் வைத்து கனவு கண்டுகொண்டு செயற்படுகின்றது என்பது தான் யதார்த்தம்.

அதாவது சிங்கள தேசம் தன்னை ஒரு இஸ்ரேலாகவும் (நீங்கள் சிரிக்கக் கூடாது), தனது படைகளை இஸ்ரேலியப் படைகளுக்கும் ஒப்பிட்டும் போரை நடத்திக்கொண்டு இருக்கிறது. இதனை நான் சொல்லவில்லை. தென்பகுதி ஊடகங்களினதும் பெரும்பாலான இனவாதிகளின் கானல் நீர் சிந்தனைகள் அது தான்.

இஸ்ரேலியப் படைகளை பொறுத்தவரை தமது படைவீரர்களில் ஒருவர் கொல்லப்பட்டால் கூட அதன் விமானப்படையின் நவீன கு-16 ரக விமானங்களும், அப்பாச்சி உலங்குவானூர்திகளும் பலஸ்தீனத்தின் ஒரு கிராமத்தையோ அல்லது நகரத்தின் ஒரு பகுதியையோ தரைமட்டமாக்கிவிடுவதுண்டு.

அங்கு இடம்பெற்று வரும் பொதுமக்களின் இழப்புக்களை அவை கவனத்தில் கொள்வதில்லை. ஐ.நாவும் அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டு எதையும் பெரிதாக செய்யப்போவதில்லை. வேறு நாடுகள் கண்டனத்தீர்மானங்களை கொண்டுவந்தால் அதை அமெரிக்கா தடுத்து விடும். இது தான் அரசியல் ரீதியாக இஸ்ரேலுக்கு உள்ள அனுகூலங்கள். இராணுவ ரீதியான அனுகூலங்களை பொறுத்த வரையில் எதிர்த்தரப்பு மிகவும் பலவீனமானது.

தற்போது தென்பகுதி இனவாத ஊடகம் ஒன்றின் உள்ளக்குமுறலை பார்ப்போம் 'தனது ஒரு படைச்சிப்பாய் கொல்லப்பட்டாலும் இஸ்ரேல் பலஸதீன மக்களின் மீது கடுமையான குண்டுவீச்சுக்களை மேற்கொள்ள தயங்குவதில்லை. அதேபோல நாமும் பின்பற்றுவதன் மூலம் புலிகளை அழிக்க முடியும்". இது தான் பேரினவாத அரசிற்கு இனவாத தென்னிலங்கை ஊடகம் கொடுத்த ஆலோசனை.

இதன் பின்னர் கடந்த ஆண்டு ஏப்பிரலில் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதல், கடற்படை மீதான தாக்குதல் என்பவற்றிற்கு வஞ்சம் தீர்ப்பதற்கு சிங்கள விமானப்படை தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் மீது குண்டுகளை வீசியபோது அதனை இஸ்ரேலுக்கு ஒப்பிட்டு இந்த ஊடகங்கள் ஆனந்தக்கூத்தும் ஆடியிருந்தன.

எனினும் இந்த ஊடகங்கள் மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கா மீதான தாக்குதலின் பின்னர் சிங்கள விமானப்படை ஏன் தமிழ் மக்களின் மீது குண்டு வீசவில்லை என கேள்வி எழுப்பியதுடன், அரசு சர்வதேச அழுத்தங்களுக்கு பணிந்து விட்டது எனவும் இராணுவத்தில் இரண்டாம் நிலை அதிகாரியின் மரணத்திற்கு மெளனமாகியது அவமானமானது எனவும் தெரிவித்திருந்தன.

மேலும் சில இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு கடந்த வருடம் லெபனானை தரைமட்டமாக்கிய இஸ்ரேலை போல சிங்கள தேசம் நடந்து கொள்ளவில்லை எனவும் தமது ஆதங்கத்தை தெரிவித்திருந்தன.

அதனுடன் மட்டும் நின்றுவிடாமல் விடுதலைப் புலிகளில் ஒரு இரண்டாவது அல்லது மூன்றாம் நிலை உயர்மட்டத்தலைவர் கொல்லப்பட்டிருந்தால் அவர்கள் உங்களை (சிங்கள அரசை) சாம்பலாக்கி இருப்பார்கள் என்றும் தமது அடிமனது மரண பயத்தை வெளிக்காட்டவும் தவறவில்லை. அதாவது தமது படைகளை இஸ்ரேலியப் படைகளுக்கு ஈடாக கற்பனை பண்ணுவதை தான் தென்பகுதி ஊடகங்கள் முழு மூச்சாக தற்போது செய்து கொண்டிருக்கின்றன.

இவற்றை எல்லாம் ஒருபுறம் தவிர்த்தால் இன்று மகிந்தவுடன் சேர்ந்து போரை முன்னின்று நடத்துபவர்களில் முதன்மையான இருவரும் தமது வாழ்நாளில் மிகுதிப்பகுதியை அமெரிக்காவில் கழிக்க இருப்பவர்கள்.

ஓன்று போரினை ஆரம்பித்தவரும் அதற்கு திட்டங்களை வகுப்பவருமான கோத்தபாய ராஜபக்ச. இவர் யாழ். கோட்டை முகாமை சிங்களப்படைகள் இழந்த பின்னர் அமெரிக்காவில் சென்று குடியேறியவர். தற்போது மீண்டும் தலைகாட்டியுள்ளார். ஆட்சி மாறினால் அல்லது அண்ணாவின் ஆட்சி தடம்புரண்டால் அல்லது போரில் தோல்வியுற்றால் மீண்டும் அமெரிக்காவிற்கே சென்றுவிடுவார்.

இரண்டாவது கோத்தபாயவினால் வழிநடத்தப்படும் போரை களத்தில் நகர்த்தும் சிங்கள அரசின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா. இவர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு ஏதுவான கிறீன் கார்ட் வீசா பெற்றவர். அதாவது போரின் வெற்றி தோல்வி இவரை பாதிக்கப்போவதில்லை தனது பதவிக்காலம் முடியும் போது. போரில் ஈட்டிய பணத்தை எடுத்துக்கொண்டு, தனது மனைவி மற்றும் இரு புதல்விகளுடன் அமெரிக்கா சென்றுவிடுவார்.

இதில் கோத்தபாயவை பொறுத்தவரை நீண்டகாலம் அமெரிக்காவில் வாழ்ந்தவர். அந்த நாட்டின் தொலைக்காட்சிகளில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளையும், விமானக்குண்டு வீச்சுக்களையும் அதிகம் கண்டு கழித்திருப்பார். எனவே தமது படைகள் இராணுவ நடவடிக்கைகளில் தோல்விகளை சந்தித்தாலும் விமானக்குண்டு வீச்சுக்களில் அதே பாணியை பின்பற்ற முனைந்து நிற்கின்றார்.

சம்பூர் இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்த மகிந்த, திருமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பில் சம்பூரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருந்தார். ஆனால்; அன்று இணைத்தலைமை நாடுகள் காட்டிய மெளனம் அவர்களின் அனுமதியாகவே மகிந்தருக்கு எண்ணத்தோன்றியது. இவை தான் சிங்களப்படைகளின் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்களிற்கான காரணிகளிற் சில.

கடந்த செவ்வாய்க்கிழமை (02.01.07) மன்னாரில் உள்ள இலுப்பைக்கடவையில் குண்டுவீசி 17 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்த செய்தி தணியும் முன்னர் திருமலையின் வெருகல் பகுதியில் ஜனவரி 03 ஆம் நாளும், முல்லைத்தீவில் ஜனவரி 04 ஆம் நாளும் விமானக்குண்டு வீச்சை நிகழ்த்தியுள்ளது சிங்கள விமானப்படை. சிங்களப்படையின் இந்த திமிர்த்தனமான போக்கிற்கு அதன் கற்பனைகள் தான் காரணம்.

ஆனால் களநிலவரம் அதற்கு எதிர்மறை. சிங்கள அரசு இஸ்ரேலும் இல்லை விடுதலைப் புலிகள் அதற்கு குறைந்தவர்களும் அல்லர். ஏனெனில் சிங்களப் படைகளை போல ஒரு தாக்குதலில் ஆயிரம் படைகளை இஸ்ரேல் இழந்தது கிடையாது. இஸ்ரேலின் புலனாய்வுத்துறைக்கு சிங்கள தேசம் நிகராகவும் முடியாது. இஸ்ரேலின் இராணுவ வலிமைக்கு எதிராக பெரும்படை கொண்டு மோதி படைவலுச்சமநிலை கண்டதும் அங்கு நடக்கவில்லை. இஸ்ரேலின் மீதுள்ள அமெரிக்காவினதும், மேற்குலகினதும் கரிசனை போல சிங்கள தேசத்திற்கு கிடைக்கப்போவதும் இல்லை.

கற்பனைகளை விட்டு நிஜத்திற்கு சிங்கள தேசம் வருமானால் பல விடயங்கள் தெளிவாகும். படைக்கட்டமைப்பு, போர்க்கள நுட்பம், புலனாய்வு வலையமைப்பு, ஒருங்கிணைந்த நடவடிக்கை என இஸ்ரேலின் படை நுட்பங்களுக்கு இணையனவர்கள் புலிகள் தான் என்பது புரியும். இவற்றை விட புலிகளின் அர்பணிப்புத்தன்மைக்கு உலகில் எவரும் ஈடாக முடியாது என்பதும் உண்மை.

1980 களின் நடுப்பகுதியில் இருந்து சிங்கள அரசிற்கு இஸ்ரேலும், ஏனைய முன்னனி நாடுகளும் ஆயுத வழங்கல், தொழில்நுட்பம், பயிற்சி, புலனாய்வு போன்ற நடவடிக்கைகளில் உதவியே வந்துள்ளன. ஆனால் அவை எல்லாம் புலிகளின் விடுதலைப் போரின் முன் மண் கெளவியது ஏன் என இன்னமும் சிங்கள அரசிற்கு புரியாத புதிராக இருப்பது ஆசசரியமானதே.
அமெரிக்கா என்ற வல்லாதிக்க நாடு நிதி உதவி, ஆயுத உதவி என அள்ளிக்கொடுக்க வளர்ந்தது இஸ்ரேல். ஆனால் எந்த ஒரு நாட்டின் உதவிகளும் இல்லாமல் தமது சொந்த மக்களை மட்டும் நம்பி வளர்ந்தது தான் புலிகளும் விடுதலைப்போரும். தம்மிடம் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டும் கொண்டு சிங்களப்படைகளுக்கு எதிராக விஸ்பரூபம் எடுத்த புலிகளை இஸ்ரேலைவிட உயர்ந்த ஆளுமையும், ஆற்றலும் உள்ளவர்கள் என்று கூறினால் அது தவறாகாது.

இறுதியாக ஒன்றைக் கூறி முடித்துக் கொள்கிறேன், நான் வட அயர்லாந்தில் வாழ்ந்த காலத்தில் அங்கு வாழும் மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் தமது போராட்டங்கள், அதன் பரிணாமங்களை பற்றி சொல்வார்கள். நானும் எமது இனத்தின் விடுதலைப்பேரை பற்றி சொல்வேன்.

ஒரு தடவை வட அயர்லாந்தின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Queen's Univerity of Belfast) விரிவுரையாளர் ஒருவருடன் உரையாடும் போது எமது தேசியத்தலைவர் தொடர்பான சில தகவல்களை கூறினேன். ஆசசரியம் அடைந்த அவர் உங்களது தலைவர் இங்கு எப்போதாவது வந்துள்ளாரா என கேட்டார். இல்லை, ஏன் என நான் வினவினேன். அதற்கு அவர் உங்கள் தலைவரை பார்க்க ஆசைப்படுகிறேன் எனக்கூறியதுடன். தங்களுக்கு இப்படி ஒரு தலைவர் கிடைக்கவில்லை என ஏக்கமாக கூறினார்.

உண்மை தான். மிகவும் பழமை வாய்ந்த விடுதலைப் போர்களில் வட அயர்லாந்து போரும் ஒன்று. அவர்களின் போராட்டத்திற்கு ஓரு காலகட்டத்தில் அமெரிக்கா கூட தனது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது. ஆனாலும் அவர்களால் முழுமையான வெற்றியை பெறமுடியாது போனதற்கு முக்கிய காரணியாக தமக்கு கிடைத்த ஆளுமையற்ற தலமைத்துவத்தை தான் அந்த மக்கள் கருதுகிறார்கள். அதாவது தமது போராட்டம் இக்கட்டான கட்டங்களை அடைந்த போது அதை எதிர்கொள்ளும் ஆற்றல் தமது தலைமையிடம் இருக்கவில்லை என்பது அவர்களின் கருத்து.

ஆனால் எமக்கு கிடைத்த ஒப்பற்ற தலைமைத்துவம் தான் எமது விடுதலைப்போ¡¢ன் விரைவான நகர்வுக்கு காரணம். உலக விடுதலைப் போர்களுடன் ஒப்பிடும் போது எமது விடுதலைப் பயணத்தின் வேகம் அதிகம் (வல்லாதிக்க நாடுகளின் தலையீட்டால் விடுதலை அடைந்த நாடுகளை இங்கு கருதவில்லை). இதற்கு விடுதலைப்போர் சந்தித்த ஓவ்வொரு இக்கட்டான சூழ்நிலைகளையும் எமது தலைமைத்துவம் மிகச் சாதுர்யமாக நகர்த்திய விவேகம் தான் முக்கியமானது.

தற்போது தோன்றியுள்ள போரும் சமாதானமும் என்ற நெருக்கடியான நிலமையும், அதை தனக்கு சாதகமாக்கும் சிங்கள அரசின் தந்திரமும் விரைவில் மாற்றி அமைக்கப்படும். தன்னை கான மயில் என நினைத்து துள்ளியாடும் வான்கோழிக்கும் விரைவில் தனது நிலை புரியும்.

நன்றி: தமிழ்நாதம்

1 பின்னூட்டங்கள்:

said...

தமிழ்மணம் மறுமொழி சேகரிப்பு சோதனை