Friday, January 05, 2007

மாமனிதர் குமார் பொன்னம்பலம் - நினைவு தினம் இன்று

அல்லற்படும் தமிழினத்தின் அவலங்களைப் போக்க ஆணித்தரமாகக் குரல் கொடுத்த மாமனிதர் குமார் இன்று 7 ஆவது நினைவுதினம்

-அப்பாத்துரை விநாயகமூர்த்தி-

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 07 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும். இலங்கைச் சரித்திரத்திலேயே ஒரு தமிழ்த் தலைவர் தமிழர்களுக்காக குரல் கொடுத்த காரணத்துக்காக சிங்களத் தீவிரங்களால் கொலை செய்யப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். அவர் கொலை செய்யப்படும் பொழுது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். மாபெரும் தலைவர் சட்ட வல்லுநர் மறைந்த ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் மறைவின் பின் அவரது மைந்தரான இவர் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று எல்லோரும் மெச்சத்தக்க வகையில் நடத்தி வந்தார்.

அப்போதைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியற் கோட்பாடுகளை ஏற்று இலங்கை வாழ் தமிழர்களது பிரச்சினைகளைத் திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு எல்லா வழிகளிலும் செயற்பட்டார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நாமத்தை உச்சரிக்கவே யாரும் அஞ்சித் தயங்கிநின்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதால் மட்டுமே தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட முடியும் என்ற யதார்த்தத்தை பகிரங்கமாக வெளிக் கொணர்ந்த பெருமை அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களையே சாரும். மேலும் தமிழர்களின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதையும் இலங்கையிலும் சர்வதேசத்திலும் ஆணித்தரமாக எடுத்துரைத்தவர் அமரர் குமார் அவர்களே.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையும் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மீறல்களையும் சர்வதேசத்திற்கு வெளிக் கொணர்ந்த பெருமை அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களையே சாரும். இதற்காக இலங்கை வாழ் தமிழர்கள் அவருக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அவரது இந்தக் கொள்கைகளால் அவரைக் கைது செய்யும் நோக்குடன் சந்திரிகா அம்மையாரின் அரசு இரகசியப் பொலிஸாரை அவரது வீட்டுக்கு அனுப்பி பல மணி நேரமாக விசாரணை செய்து அவரது வாக்கு மூலத்தைப் பெற்றது. செம்மணி புகழ் அம்மணி சந்திரிகா அம்மையார் தென்னாபிரிக்காவில் வைத்து "தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் அல்லர்" எனப் பேட்டியளித்த சம்பவத்தைக் கண்டித்த ஒரே தமிழ்த் தலைவர் குமாரே ஆவார். அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சந்திரிகா அம்மையார் தொலைக் காட்சி ஒன்றில் விடுதலைப் புலிகளை கடுமையாகத் தாக்கிப் பேசி "புலிகளுக்கு ஆதரவாக இயங்குபவர்கள் கொழும்பில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்ற கருத்தில் பேசியிருந்தார். மறுநாட்காலை குமார் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு இனியும் தான் நீண்ட காலம் வாழ்வது கடினமென என்னிடம் கூறியிருந்தார். அவரின் கொலைக்கு சந்திரிகா அரசே பொறுப்பேற்க வேண்டும்.

குமார் பொன்னம்பலம் அவர்களது கொலைச் சம்பவத்தை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரியான பந்துல விக்கிரமசிங்க விசாரணை அறிக்கையையும் கொலையோடு சம்பந்தப்பட்டவர்களின் விபரத்தையும் 2000 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதமே ஜனாதிபதி சந்திரிகாவிடம் கையளித்திருந்தும் அவர் எதுவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை,. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பல தடவைகள் நான் எனது கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தேன். தகுந்த தலைமையின்றி தமிழினம் அநாதையாக்கப்பட்டு படுமோசமான கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் அவ்விடத்தை நிரப்பக் கூடிய தலைமகன் குமார் பொன்னம்பலமாகவே இருந்தார். அதனையும் கருத்தில் கொண்டு தான் அவர் கொலை செய்யப்பட்ட போது தமிழீழத்தின் அதியுயர் விருதான "மாமனிதர்" என்ற பட்டத்தை தமிழீழ தேசியத் தலைவர் வழங்கிக் கௌரவித்தார்.

புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஆற்றிய தொண்டுகளால் அவர்களின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இலங்கை அரசியல் சரித்திரம் எழுதும் போது ஜனநாயகக் கட்சிக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் (Democratic People's Alliance Manifesto) உருவாவதற்கு இவர் ஆற்றிய சேவை பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும். இந்த விஞ்ஞாபனத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தினேஸ் குணவர்தனாவின் மக்கள் ஐக்கிய முன்னணி, ஜே.வி.பி., முஸ்லிம் காங்கிரஸ், பல்கலைக்கழக மாணவர் முன்னணி முதலிய பல கட்சிகளும் சேர்ந்து உருவாக்கின. அதில் அனைத்து கட்சியினரும் கையெழுத்திட்டனர். இதை சிறிமாவோ அம்மையார் கைவிட்டிருக்காவிட்டால் தமிழர்களது பிரச்சினை அப்போதே தீர்க்கப்பட்டிருக்கும்.

1985 ஆம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்காக இலவசமாக வாதாடி அவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார். தமிழ் இளைஞர்களுக்கு அவர் ஆற்றிய சேவை இதுவரையாரும் ஆற்றியதில்லை. அவர் இறந்த போது களுத்துறைச் சிறைச் சாலையில் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டமை இதை நிரூபிக்கிறது. அவர் மறைவதற்கு சற்று முன் தேர்தலை எதிர் நோக்கி தமிழ்ப் பகுதிகளில் போட்டியிடுவதற்கு ஒரு பட்டியலைத் தயாரித்திருந்தார். இதுவும் அவரது கொலைக்குக் காரணமாக அமைந்திருக்கலாம். அவரைப் போல் இன்னொருவர் பிறக்கப் போவதில்லை.

மாமனிதர் அவர்கள் தன்னைப் பற்றிக் கூறும் போது பின்வருமாறு கூறினார். "நீ உனது உயிரைப் பற்றிப் பயப்பட்டால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும், நீ வாயை மூடிக் கொண்டே வாழ வேண்டுமானால் அந்த வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன? நான் ஒரு அடிமையாக வாழ்ந்து இனத் துவேசிகளும் ஆட்சியில் உள்ளவர்களும் கூறுவனவற்றிற்கு தலையாட்டிக் கொண்டிருக்க விரும்பவில்லை. அவர்கள் விரும்புவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாவிடில் அவர்கள் கூறுவது எனது நம்பிக்கைக்கு எதிராக அமைந்தால் நான் ஏன் எனது மனச் சாட்சிக்கு எதிராக மௌனம் சாதிக்க வேண்டும்"

அவர், தான் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார் என்பதற்கு சுவர்ணவாகினியில் பின்வருமாறு கூறினார். "தமிழர் அரசியல் நிலை என்ன என்பதை ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஆராய்ந்து பார்த்தேன். ஒரு புறம் பயங்கரமான சிங்கள அரசும் மறு புறம் ஒரு சதமும் பெறுமதியற்ற தமிழ்க் குழுக்களும் பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். அவர்கள் சிங்கள அரசுக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கி வந்தனர். எக் காரணத்தை முன்னிட்டு அவ்வாறு ஆதரிக்கிறார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம் கேட்டு அறியுங்கள். அரசு அவர்களுக்கு பாதுகாப்பும் தனிப்பட்ட உதவிகளும் செய்கிறது. இத்தகைய சூழலில் தமிழ் மக்களின் அபிலாசையை முன்னெடுத்துச் செல்லும், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளே என்று எனக்குத் தோன்றியது. அவர்கள் ஒரு புறம் போராடிக் கொண்டு மறு புறம் அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையிலேயே நான் புலிகளை ஆதரிக்கிறேன்" என்றார்.
அல்லற்பட்ட தமிழினத்தின் அவலங்களைப் போக்கி அவர்களுக்காக ஆணித்தரமாகக் குரல் கொடுத்த ஆண்மகனின் குரல்வளை நசுக்கப்பட்டது. தமிழர்கள் ஒரு தலைவனை இழந்தனர். தமிழர்களுக்காக தன்னையே தியாகம் பண்ணி இந்தத் தரணியிலே அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் செய்த தொண்டுகளெல்லாம் தமிழர் தம் சரித்திரத்தில் நிலைத்திருக்கும். மறைந்தும் மறையாத அமரரின் புகழ் நீடு வாழி. அவரது 07 ஆவது சிரார்த்த தினமாகிய இன்றைய நாளில் அவனியிலே தமிழர்களுக்கு இனிமேலாவது ஓர் ஆறுதல் கிட்ட வேண்டும், அதற்கு அமரர் குமார் பொன்னம்பலத்தின் ஆத்மா ஆசி வழங்கட்டும்.

நன்றி: தினக்குரல் 05/01/2007

4 பின்னூட்டங்கள்:

said...

பதிவுக்கு நன்றி.

//1985 ஆம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்காக இலவசமாக வாதாடி அவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார். தமிழ் இளைஞர்களுக்கு அவர் ஆற்றிய சேவை இதுவரையாரும் ஆற்றியதில்லை.//

தமிழ் அரசியற் கைதிகளை வெளியே எடுத்தது தொடர்பில் மிகப்பெரிய சேவையைச் செய்திருக்கிறார். வெளித்தெரியாத அளவில் அவரது காரியங்கள் பல பெறுமதி மிக்கவை.
விடுதலையான பலரைக் கேட்டால், குமார் ஐயாதான் தங்களுக்காக வாதாடி வெளியில் எடுத்ததென்று நன்றியோடு நினைவுகூர்வார்கள்.


இவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்தின்முன்புதான் விடுதலைப்புலிகளால் 'ஓயாத அலைகள்-3' நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்போது வரலாற்றிலில்லாத அளவுக்குத் தோல்விகளைச் சந்தித்து சிங்கள இராணுவம் ஓட்டமெடுத்தது.
அந்நேரத்தில் கொழும்பில் நின்றுகொண்டு, "புலிகள் இன்னுமின்னும் நன்றாக அடிக்கவேண்டும், இராணுவம் இன்னுமின்னும் ஓடவேண்டும்" என்று வெளிப்படையாகச் சொன்னார்.

said...

வருகைக்கு நன்றி வன்னியன்.

said...

Past is differnt from the present

said...

//Past is differnt from the present//

கருத்துத் தெரிவித்த அனானிக்கு நன்றிகள்.