Saturday, March 03, 2007

சிறிலங்காவின் பிரச்சாரப்போரில் வீழ்ந்த எறிகணை

சிறிலங்கா அரசின் பிரச்சாரப்போரின் மீது வீழ்ந்த எறிகணைகள்
-அருஸ் (வேல்ஸ்)-

சிறிலங்கா அரசின் வாகரை ஆக்கிரமிப்பின் பின்னர் கிழக்கில் நிலவிவரும் இராணுவச் சமவலுச் சமன்பாடுகளில் சர்வதேசம் கொண்டிருந்த குழப்பநிலை கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பின் இதயப்பகுதியில் நடைபெற்ற மோட்டார் தாக்குதலுடன் மேலும் குழப்பமடைந்துள்ளது.

அரசின் அண்மைய இராணுவ நடவடிக்கைகளால் உற்சாகம் அடைந்த மகிந்தாவின் சகோதரரும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச விடுதலைப் புலிகளை முற்றாக கிழக்கில் இருந்து வெளியேற்றப் போவதாக சூளுரைத்திருந்தார். அவரின் கூற்றின் அறியாத்தன்மையை அனைத்துலக சமூகம் தெளிவாக புரிந்து கொண்ட நாளாக கடந்த 27.02.2007 ஆம் நாள் அமைந்து விட்டது.

தனது இராணுவ மேலான்மைக் கனவினால் முற்றாக முறிந்து போகாத போர் நிறுத்தத்தையும் அதன் நடைமுறைகளையும் உதாசீனம் செய்த அரசு தனது பிரச்சாரங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக அனைத்துலக இராஜதந்திரிகளை மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றது.

இந்த தூதுவர்களின் பயணத்தின் மூலம் தனது இராணுவ மேலாண்மையை மேலும் மெருகூட்ட முடியும் என்பது அரசின் கணக்கு. மேலும் போரில் வெற்றியீட்டும் தரப்பு மறுதரப்பை மதிப்பது இல்லை என்பதும் வரலாறு. எனவே கிழக்கில் நடைபெற்ற மோதல்களில் தான் வெற்றியீட்டியதாக எண்ணிய அரசு விடுதலைப் புலிகளை உதாசீனம் செய்ததுடன் இராஜதந்திரிகளின் பயணத்தையும் அறிவிக்காது விட்டிருந்தது.

சமாதானத்தின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியபடி இலங்கையின் இனப்போருக்கு மறைமுக ஆதரவை வழங்கிவந்த மேற்குலகமும் சிறிலங்கா அரசின் பொய்ப்பிரச்சாரத்தில் மூழ்கி தமது பாதுகாப்பைக் கோட்டை விட்டிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பு அதனை பாதுகாக்க தேவையான படைப்பலம் என்பன தொடர்பாக கூடிய விளக்கங்கள் இருந்திருந்தால் இராஜதந்திரிகள் இந்த அனர்த்தத்தை தவிர்த்திருக்க முடியும்.

கடந்த செவ்வாய்கிழமை (27.02.07) காலை பெல்-212 மற்றும் எம்.ஐ-17 ஆகிய இரு உலங்குவானூர்திகளிலும், ஒரு தனியாருக்கு சொந்தமான சிறிய விமானத்திலும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் சிறிலங்காவின் பேரனர்த்த நிவாரண அமைச்சர் ஆகியோரைக் கொண்ட 34 பேர் அடங்கிய குழு மட்டக்களப்பிற்கு பயணமானது.

இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண மற்றும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிடுவதும் அங்குள்ள அரச மற்றும் தொண்டர் அமைப்பு பிரதிநிதிகளை சந்திப்பதும் தான் அவர்களது நோக்கம். முதலில் விமானம் விமானப்படைத் தளத்தில் இறங்கியபோது தளத்தின் மேற்குப்புறமுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வவுணதீவில் இருந்து ஏவப்பட்ட 120 மி.மீ எறிகணைகள் விமான ஓடுபாதையில் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின.

விமானம் சிறிய சேதத்துடன் தரையிறங்கிய போதும் உலங்குவானூர்திகள் விமானப்படைத் தளத்தில் இருந்து இரு கி.மீ தொலைவில் உள்ள வெபர் விளையாட்டு மைதானத்தனத்தை நோக்கி திருப்பிவிடப்பட்டன. இந்த மைதானத்தில் இருந்த இராணுவத்தினர் வாகரை படை நடவடிக்கைக்கு நகர்த்தப்பட்டதுடன் தற்போது வெபர் மைதானம் விசேட அதிரடிப்படையினா¢ன் கட்டுப்பாட்டில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மைதானத்தில் முதலாவது உலங்குவானூர்தி தரை இறங்கிய சற்று நேரத்தில் மட்டக்களப்பின் வாவியின் மறுபுறமுள்ள வவுணதீவுப் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 120 மி.மீ மோட்டார் எறிகணைகள் அங்கும் சரமாரியாக வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின.

எறிகணைகள் விழத் தொடங்கியதும் உலங்குவானூர்தியில் இருந்து இறங்கியவர்களை விட்டுவிட்டு மிகுதிப்பேருடன் அவசர அவசரமாக மேலெழுந்த உலங்குவானனூர்தி அம்பாறை நோக்கி வேகமாக சென்றுவிட்டது.

தரையிறங்கிய தூதுவர்கள் பதற்றத்தல் சிதறி ஓடியதுடன் நிலத்தில் விழுந்து படுத்தும் தமது உயிரை காப்பாற்றிக்கொண்டனர். ஆனால் அதிர்ஸ்டவசமாக உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை. ஐ.நா அதிகாரிகள் உடனடியாக விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்துடன் தொடர்பு கொண்டு தாக்குதலை நிறுத்தியதே அவர்களின் உயிர்களை காப்பாற்றியிருந்தது. எனினும் ஜேர்மன் மற்றும் இத்தாலிய நாட்டுத் தூதுவர்கள் சிறுகாயமடைந்ததுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சிறு சேதமடைந்தது.

கிழக்கு தொடர்பாக அரசினால் மேற்கொள்ளப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரங்களை எல்லாம் தூக்கி வீசுமளவிற்கு அமைந்து விட்டது இந்த தாக்குதல். அனைத்துலக ஊடகங்கள் எல்லாம் மட்டக்களப்பு தாக்குதலை தமது செய்தி அறிக்கைகளில் முதன்மைப்படுத்தியிருந்தன.

கிழக்கில் காடுகளுக்குள் ஓடி ஒளிந்த புலிகளை தேடி இரண்டாவது கட்ட இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகப் போகின்றது என இராணுவத் தளபதி அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்தில் மட்டக்களப்பின் இதயப்பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சிறிலங்கா அரசை மட்டுமல்ல அதற்கு அதரவை தரும் சர்வதேச சமூகத்திற்கும் ஆச்சரியமாகத் தான் இருந்திருக்கும்.

இந்த தாக்குதலுக்கு புலிகள் நீண்ட தூர ஆட்டிலறிகளை பயன்படுத்தவில்லை ஏறத்தாழ 6 கி.மீ தூரவீச்சுக் கொண்ட 120 மி.மீ மோட்டார்களை தான் பயன்படுத்தியுள்ளனர். மட்டக்களப்பு நகரின் வாவியின் மறுபக்கம் உள்ள வவுணதீவுப் பகுதியில் இருந்து பல மோட்டர்கள் மூலம் ஒரே சமயத்தில் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்பட்டுகின்றது.

எனினும் புலிகளின் பகுதியில் இருந்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதா அல்லது தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து முன்னகர்ந்த விடுதலைப் புலிகளின் விசேட படையணி இந்த தாக்குதலை நடத்தியதா என்பது சிறிலங்காவின் பாதுகாப்பு படையினருக்கு புரியாத புதிராகவே உள்ளது. மோட்டார்கள் ஆட்டிலறிகளை போல் அல்லாது இலகுவாக நகர்த்தப்படக் கூடியவையாக இருப்பதால் உலகில் உள்ள இராணுவங்களின் விசேட படையணிகள் அவற்றை தமது விசேட படை நடவடிக்கைக்கு பயன்படுத்துவதுண்டு.

விடுதலைப் புலிகளும் முன்னைய காலங்களில்; 81 மி.மீ மோட்டார்களை தமது விசேட படை நடவடிக்கைகளுக்கு இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டு சென்று பயன்படுத்தியதுண்டு.

அதாவது சிங்கள அரசின் ஒட்டுமொத்த பிரச்சாரங்களையும் முறியடிக்கும் வல்லமை புலிகளின் தாக்குதல்களுக்கு உண்டு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

அனைத்துலக இராஜதந்திரிகளைப் பொறுத்த வரையில் தாக்குதலின் பின்னர் காரசாரமான அறிக்கைகளை வெளியிட விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் மீது தவறுகள் உள்ளதாகவே அவர்கள் உணர்கிறார்கள். இது சிங்கள இனவாதிகளுக்கு கடும் சீற்றத்தை கொடுத்திருப்பதும் உண்மையே.

ஆனால் சிறிலங்காவில் தற்போது நடைமுறையில் உள்ள போர்நிறுத்தம் ஒரு சர்வதேச அங்கீகாரத்துடன், சர்வதேச மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று. அந்த போர்நிறுத்த உடன்பாட்டை சிங்கள அரசு மதிக்குதோ இல்லையோ சர்வதேச சமூகம் அதற்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.

அதாவது மோதல்கள் நடைபெறும் பிரதேசங்களுக்கு பயணிக்கும் போது கண்காணிப்புக் குழுவினூடாக விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்க வேண்டிய கடமையில் இருந்து சிங்கள அரசு மட்டுமல்ல சர்வதேசத்தின் தூதுவர்களும் தவறிவிட்டதாகவே கொள்ளமுடியும்.

இதை மறுவடிவில் கூறுவதானால் கிழக்கு மாகாணத்தில் போர்நிறுத்தம் ஒன்று நடைமுறையில்; இல்லை என்பதை அனைத்துலக சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவே கொள்ள முடியும்.

அப்படி ஒரு நிலைப்பாட்டையே சர்வதேச சமூகம் எடுத்திருக்குமானால், கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதற்கு அவர்கள் மறைமுகமாக ஆதரவை கொடுத்தவர்களாகவே கொள்ள முடியும். இதன் மூலம் சர்வதேச நாடுகள் சிறிலங்காவில் உள்ள இராணுவச் சமவலுவை மாற்றியமைக்க முற்படுவதாகவே கருத முடியும்.

அதாவது

- விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை குறைத்தல்.

- அரசின் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.

- விடுதலைப் புலிகளுக்கான நிதி மற்றும் ஆயுத விநியோக மார்க்கங்களை தடுத்தல்.

- தமிழ் மக்களின் மனவலிமையை சிதைத்தல்.

- சிறிலங்கா படைகளை ஆயுத மற்றும் உளவியல் வழிகளில் பலப்படுத்ததல்.

போன்ற வழிகளின் மூலம் விடுதலைப் புலிகளின் பலத்தை குறைத்து, இராணுவச் சமநிலையை மாற்றி அமைத்து விடலாம் என்பது சர்வதேசத்தின் கனவாகக்கூட இருக்கலாம்.

உதட்டளவில் சமாதான வழிகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என கோசம் போடும் சர்வதேச சமூகம். செயலளவில் சிங்கள தேசத்தின் தாளத்திற்கு ஆடுவது ஏன்? பொஸ்னியாவில் 51:49 என்ற இராணுவச் சமநிலை கூட நியாயமான அரசியல் தீ¡வை தரமாட்டாது என கருதி அந்த சமநிலையை 50:50 ஆக மாற்ற முனைந்த மேற்குலகம் விடுதலைப் புலிகளின் பலத்தை குறைக்க சிங்கள அரசுக்கு ஆதரவு வழங்குவதேன்?

வாகரையில் மோதல்கள் நடைபெறும் போது பாராமுகமாக இருந்த சர்வதேசம் தற்போது இடம்பெயாந்த மக்களுக்கு நன்மை செய்ய தமது உயிரையும் துச்சமென மதித்து ஆவலாக பறப்பது ஏன்?

அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் இராஜதந்தரிகள் சிக்கியது சர்வதேசத்தின் மறுமுகத்தை வெளிக்காட்டியுள்ள நிகழ்வுகளில் ஒன்று என்பது தான் உண்மை. அதனால் தான் அவர்களும் பேசாமடந்தையாகியுள்ளனர்.

ஆனால் சிறிலங்கா அரசுகளை பொறுத்த வரைக்கும். 1970 களில் புலிகள் தோற்றம் பெற்றதில் இருந்து இன்றுவரை புலிகளை வடக்கில் இருந்து வெளியேற்றுகிறோம், கிழக்கில் இருந்து வெளியேற்றுகிறோம் என அவ்வப்போது தெரிவித்து வருவதுண்டு. ஆனால் அவர்களால் வெளியேற்ற முடிந்ததோ இல்லையோ புலியணிகள் சிறிலங்காவின் தலைநகர் வரை ஊடுருவி வளர்ந்தது தான் உண்மை.

இதற்கான காரணம் விடுதலைப் புலிகள் இரண்டு பரிமாணங்களை கொண்டிருப்பது தான். ஒன்று விசேட நடவடிக்கை படையணிகள், இரண்டாவது மரபுவழிப் படையணிகள். இந்த இரு பரிணாமங்களும் களத்தின் நிலைமைக்கு ஏற்ப மாற்றமடையும் என்பதுடன் இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று சார்ந்தவையாகவும் உள்ளன.

இதனால் தான் இன்றுவரை விடுதலைப் புலிகளை வெளியேற்றுகிறோம் என மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் அரச படைகளே புதைந்துபோய் உள்ளனர். இதற்கு சிறந்த உதாரணமாக யாழ். குடாநாடு மீதான படை நடவடிக்கையை கூறலாம். யாழில் இருந்து புலிகளை வெளியேற்றிவிட்டால் சொற்ப படையினரை அங்கு நிறுத்திவிட்டு தொடர்ந்து படை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அரசு எண்ணியிருந்தது.

ஆனால் இன்றுவரை புலிகளின் விசேட அணிகளை அவர்களால் அங்கிருந்து வெளியேற்ற முடியவில்லை என்பதுடன் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப்பகுதிகள், யாழ். நகர் என்பவற்றில் கிளைமோர்கள் வெடித்தபடி தான் உள்ளன. ஆக்கிரமித்த 40,000 படைகளை விட அதிக படையினரை தரும்படி யாழ். இராணுவத்தரப்பு அரசிடம் கோரியும் வருகின்றது. அதாவது சென்ற படையினரை யாழில் இருந்து மட்டுமல்ல கிழக்கில் இருந்தும் மீளமுடியாத பொறிக்குள் சிக்க வைக்கும் வல்லமை புலிகளிடம் உண்டு.

மேலும் வவுனியா, கிழக்கு மாகாணம், கொழும்பு, கண்டி என இரணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களும் அதிகரித்து செல்கின்றன. அதாவது கட்டுப்பாட்டுப் பகுதி, கட்டுப்பாடற்ற பகுதி என்ற சொற்பதங்களுக்கு அப்பால் சில தாக்குதல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. உதாரணமாக கட்டுநாயக்க தாக்குதலுக்கோ அல்லது கொலன்னாவை தாக்குதலுக்கோ வலுவான தளப்பகுதி தாக்குதல்கள் நடைபெற்ற பகுதிக்கு அண்மையில் இருக்கவில்லை. ஆனால் அந்த தாக்குதல்கள் எற்படுத்திய தாக்கங்கள் அதிகம்.

அதேபோலவே மட்டு. நகரில் நிகழ்ந்த இந்த தாக்குதல் அரசின் பிரச்சார போருக்கும், சர்வதேசத்தின் இரட்டை வேடத்திற்கும் வீழ்ந்த பலத்த பின்னடைவாகும் என்பதுடன் ஏவப்பட்ட 120 மி.மீ எறிகணைகள் போர்க்களத்தில் ஏற்படுத்திய சேதங்களை விட அரசின் பிரச்சாரக் களத்தில் ஏற்படுத்திய சேதங்கள் தான் அதிகம்.

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்

0 பின்னூட்டங்கள்: