Sunday, March 25, 2007

விடுதலைப் புலிகளின் கப்பல் பலம் அழிந்து வருகிறதா?

அண்மைய காலங்களில் சிறிலங்காவின் தென்பகுதி ஊடகங்களின் சூடான செய்திகள் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தொடர்பானவை தான். அணிவகுத்து வரும் ஆயுதக்கப்பல்களை குருவி சுடுவது போல சுட்டுத்தள்ளுகிறது சிங்களக் கடற்படை. பின்னர் படங்களும் வெளியிடப்படுவதுண்டு. அதில் அழகான நீல வண்ணக் கடலில் கப்பல் கொழுந்து விட்டு எரிவதையும் பின்னர் மூழ்குவதையும் காண்டு தென்னிலங்கை பேரானந்தம் அடைவதுண்டு.

அதிலும் கடந்த 18 ஆம் நாள் அம்பாறை பொத்துவிலுக்கு அண்மையில் உள்ள கடற்பரப்பில் வைத்து இரண்டு கப்பல்களை ஒன்றாக மூழ்கடித்துள்ளது கடற்படை. ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட படங்களுக்கும் குறைவில்லை.

கடந்த செப்ரெம்பர் மாதம் 17 ஆம் நாளில் இருந்து பார்ப்போமாயின் ஆறு மாதங்களில் ஏறத்தாழ 6 கப்பல்களையும் றோலர்களையும் சிறிலங்கா கடற்படையினர் அழித்துள்ளதாக கூறுவது குறிப்பிடத்தக்கது.

- செப்டம்பர் 17 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் கிழக்குக் கடலின் கல்முனைப் பொயின்றில் வைத்து சந்தேகத்திற்கிடமாக கப்பல் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.

- ஒக்டோபர், 31 ஆம் நாள் 2006 மாலை மன்னார் கடற்பரப்பில் வைத்து சந்தேகத்திற்கிடமாக பெரிய றோலர் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.

- நவம்பர், 14 ஆம் நாள் 2006 மாலை 4.30 மணியளவில் கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சந்தேகத்திற்கிடமாக பெரிய றோலர் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.

- பெப்ரவரி, 27 ஆம் நாள் 2007 காலை 6.30 மணியளவில் தெற்கு கடலின் தேவினுவர கடற்பகுதியில் வைத்து சநதேகத்திற்கிடமாக கப்பல் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.

- மார்ச், 18 ஆம் நாள் 2007 காலை 7.30 மணியளவில் கிழக்குக் கடலின் அறுகம்குடாவிற்கு அண்மையாக உள்ள பொத்துவில் கடற்பரப்பில் வைத்து சநதேகத்திற்கிடமாக கப்பல் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர். பின்னர் அதே பகுதியில் வைத்து அன்று மதியம் மற்றுமொரு கப்பலும் அழிக்கப்பட்டது.

இந்த கப்பல் அழிப்புக்களின் போது ஒரே மாதிரியான கதைகள் தான் கூறப்படுகின்றன. அதாவது பெருமளவிலான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் இந்த கப்பல்கள் சுமந்து வந்ததாகவும். கடற்படையினர் வழிமறித்த போது தமது அடையாளங்களை நீருபிக்கத் தவறியதாகவும் அதன் பின்னர் கலிபர் மற்றும் பீரங்கிகள் மூலம் படையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து கடற்படையினரின் தாக்குதலில் அது தீப்பற்றி எரிந்து மூழ்கியதாகவும் மூழ்கடிக்கப்பட்ட எல்லா கப்பல்களினதும் கதைகள் நீண்டு செல்கின்றன.

சிறிலங்காவின் புனைக்கதைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு யதார்த்தத்தை கவனித்தால் இது உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் கப்பல்களாக இருக்குமா? அப்படியானால் விடுதலைப் புலிகளிடம் உள்ள கப்பல்களின் பலம் என்ன? ஆயுதங்களை தருவிக்கும் போது அவர்கள் பயன்படுத்தும் உத்திகள் எவை? அவர்களின் முன்னேற்பாடுகள் எவை என்பவை தான் எம்முன்னால் உள்ள முக்கிய வினாக்கள்.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் அவர்களின் பலம் என்ன பலவீனம் என்ன என்பது குறித்து இலகுவில் அறிந்து கொள்ள முடியாதது உண்மை. அதுவே அவர்களின் பலத்தின் மற்றுமொரு வடிவம்.

அனைத்துலக கப்பல் மற்றும் காப்புறுதி நிறுவனத்தின் (Lloyd's List) தகவல்களின் படி விடுதலைப் புலிகளிடம் 12 - 15 கப்பல்கள் உள்ளதாகவும் அவை Panama, Honduras and Liberia போன்ற நாடுகளில் பதிவு செய்யப்பட்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தகவல். ஆனால் அவர்களால் அடிக்கடி கப்பல்களையும், பதிவு செய்யப்பட்ட நாடுகளையும், முகவர்களையும் மாற்ற முடியும்.

எனினும் அந்த கப்பல்களுடனான புலிகளின் தொடர்புகள் நீரூபிக்கப்பட முடியாதவை. இந்த கப்பல்கள் சட்டபூர்வமான நிறுவனங்களின் ஊடாகவே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதுண்டு. தமது வர்த்தக நடவடிக்கைகளின் நடுவே சில சமயங்களில் ஆயுதத் தளபாடங்களை விடுதலைப் புலிகளுக்கு இந்த கப்பல்கள் வழங்குவதாகவும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறை தெரிவித்து வருகின்றது. மேலும் புலிகளால் உலகில் உள்ள நூற்றுக்கணக்கான கப்பல் நிறுவனங்களிடம் இருந்து கப்பல்களை வாடகைக்கு அமர்த்தவும் முடியும்.

ஆயுதங்களை ஏற்றிவரும் கப்பல்கள் சிறிலங்கா அரசு கூறுவது போன்று மக்கள் காரியாலயங்களுக்கு செல்வது போல காலை வேளைகளிலோ அல்லது மாலை வேளைகளிலோ சிறிலங்காவின் கடற்பரப்பினுள் பிரவேசிப்பது இல்லை. பொதுவாக கூறப்போனால் பகல் வேளைகளில் பொருட்களுடன் வரும் கப்பல்கள் சிறிலங்காவின் கடற்பரப்பை அண்மிப்பது இல்லை.

சிறிலங்கா கடற்படையினரிடம் உள்ள கண்காணிப்புக் கப்பல்களின் பலம், ரடார்களின் தூர வீச்சுக்கள், வேவு விமானங்களின் வலிமை, அந்நிய நாடுகளின் புலனாய்வு உதவிகள் என்பன புலிகளுக்கு தெரிந்த விடயங்கள்.

கப்பல் மீண்டும் பயன்படுத்த தேவை எனில் அது அனைத்துலக கடற்பரப்பில் தான் பயணிக்கும். நள்ளிரவு வேளைகளில் புலிகளின் தளப்பகுதியை அண்மித்து சரக்குகளை இறக்கிவிட்டு பின்னர் பொழுது புலரும் போது மீண்டும் அனைத்துலக கடற்பரப்பை அடைந்துவிடும்.

அதிலும் குறிப்பாக அவை கரைப்பகுதிக்கு மிக அண்மையாக வருவதில்லை. ஆழ்கடல் பகுதியில் வைத்து கடற்புலிகளின் படகுகளில் தான் அதிக சரக்குகள் இறக்கப்படுவதுண்டு. இப்படியான சந்தர்ப்பங்களில் கடற்புலிகளின் பாதுகாப்பு வியூகங்கள் மிகவும் பலமானதாக இருக்கும். கப்பலை அண்மிக்கும் கடற்படைப் படகுகள் கடுமையான மோதல்களை சந்திக்க வேண்டியிருக்கும். முன்னர் புலிகளின் சில கப்பல்கள் தாக்கப்பட்ட போது கடற்படையினரும் இழப்புக்களை சந்தித்திருந்தனர்.

1996 ஆம் ஆண்டு முல்லைக் கடற்பரப்பில் நகர்ந்து கொண்டிருந்த புலிகளின் கப்பலை தாக்கி அழிக்கும் முயற்சியில் சிறிலங்கா மற்றும் இந்திய கடற்படைப் கப்பல்கள் ஈடுபட்டதும் அந்த தாக்குதலில் இந்திய மற்றும் சிறிலங்கா படகுகள் சேதமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்கள் கொண்டு வரப்படும் கப்பல்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு தேவைப்படாத சந்தர்ப்பங்களில், கப்பல் இரவோடு இரவாக புலிகளின் முக்கிய தளப்பகுதியின் கடற்கரையை அடைந்து தரைதட்டி விடும். அங்கு ஆயத்த நிலையில் இருக்கும் போராளிகளும் மக்களும் பொழுது புலர்வதற்கு முன்னர் கப்பலை வெறுமையாக்கி விடுவார்கள். 1997 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் தரைதட்டி நின்ற கப்பலை சிறிலங்காவின் விமானப்படை பல நாட்களின் பின்னர் தாக்கி அழித்துவிட்டு புகைப்படங்களை வெளியிட்டது உங்களுக்கு நினைவு இருக்லாம். அப்போது சிறிலங்கா அரசு கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்குவதற்கு முன்னர் அதனை தகர்த்துவிட்டதாக கூறியிருந்தது.

விடுதலைப் புலிகளை பொறுத்தவரை இருபது வருடங்களாக ஒரே உத்தியை கையாள்வது கிடையாது. அவர்கள் தமக்கு தேவையான ஆயுதங்களை தருவிப்பதில் பயன்படுத்தும் உத்திகளை அடிக்கடி மாற்றியபடியே இருப்பார்கள். மேலும் சமரை ஆரம்பித்து விட்டு ஆயுதம் வாங்க அவர்கள் திரிவதில்லை என்பதுடன் களத்தில் ஓய்வாக இருக்கும் போது படுத்து உறங்குவதும் இல்லை.

விடுதலைப் போரில் ஓய்வுகள் என்பது கிடைப்பதில்லை அது போராளிகளானாலும் சரி, போராட்டத்தில் பங்கெடுக்கும் மக்களானாலும் சரி அதனால் தான் அதில் தோல்விகளும் அரிது.

மேலும் தமது ஒரு கப்பல் தாக்கப்பட்டால் மற்றய கப்பலின் வரவிலும், பொருட்களின் தரையிறக்கத்திலும் அதிக கவனங்கள் வெலுத்தப்படுவதுடன். அதற்கான சூழ்நிலைகளும் சரியாக கணிப்பிடப்படுவதுண்டு.

சிறிலங்கா அரசைப் பொறுத்தவரை களமுனைப் போரை விட பிரச்சாரப் போரையே அது தற்போது முதன்மைப்படுத்தி வருகின்றது. மகிந்தவின் வாகரைப்பயணம், கிபீரில் நின்று நேர்காணல் வழங்கியது, டோராவில் ஏறி திருமகோணமலையை வலம் வந்தது என்பன இதற்கு மிகச்சில உதாரணங்கள் (எதிர்வரும் காலங்களில் கைப்பற்றப்பட்ட புலிகளின் ஆயுதக்கப்பல் என்று கூறி ஒரு கப்பலில் நின்று மகிந்த புகைப்படம் எடுத்து வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை).

களமுனைகளில் தொய்வு ஏற்படும் போதோ அல்லது அனைத்துலகத்தின் கவனத்தை தன்பக்கம் திருப்ப வேண்டிய சந்தர்ப்பங்களிலோ அரசு இவ்வாறான கடல் நாடகங்களை அரங்கேற்றுவதுண்டு.

உதாரணமாக காலியில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டிற்கு முன்னர் கொழும்பு துறைமுகம் மீதான தாக்குதல் என்ற நாடகத்தை அரசு அரங்கேற்றியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இறுதியில் அதன் உண்மைத் தன்மையை நீர்கொழும்பு மீனவர்கள் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர். ஆனால் கப்பல்களின் கதைகளை சொல்வதற்கு ஆட்கள் இல்லை என்பது தான் அரசிற்கு உள்ள அனுகூலம்.

விடுதலைப் புலிகளின் எந்தக் கப்பல்களும் இதுவரையான காலத்தில் அழிக்கப்படவில்லை என்பது இதன் கருத்தல்ல. சிறிலங்கா மற்றும் இந்தியக் கடற்படையினரின் தாக்குதல்களால் ஏறத்தாழ 5 கப்பல்களை புலிகள் முன்னர் இழந்துள்ளனர். ஆனால் ஆறு மாதத்தில் ஆறு கப்பல்கள் என்ற அரசின் கணக்கு தான் மிகவும் தவறானது. அதிலும் ஓரே இடத்தில் வைத்து ஒரே நாளில் இரு கப்பல்களை அழித்தது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரமாகும்.

அரசின் இந்த பிரச்சாரங்களில் உள்ள வலிமையற்ற ஆதாரங்களாக பின்வருவனவற்றை கொள்ளலாம்.

- எல்லா கப்பல்களும் பகல் வேளைகளில் அழிக்கப்பட்டன.

- பட்டப்பகலில் புலிகளின் கப்பல்கள் எல்லாம் சிறிலங்காவின் கடற்பரப்பில் சுற்றித்திரிந்தது.

- புலிகளின் தளப்பகுதிகளுடன் தொடர்பில்லாத கடற்பிரதேசங்களில் பொரும்பாலான கப்பல்களை சிறிலங்கா அரசு அழித்தாக கூறுவது.

- காலியில் அழிக்கப்பட்ட கப்பல் வெடித்துச் சிதறி எரிந்த பின்னரும் ஆட்டிலறி எறிகணைகள் வெடிக்காது மிதந்து வந்ததாக கடற்படைத்தளபதி கூறியது.

- தமது கூற்றுக்களுக்கு வலுச்சேர்க்கும் ஆர்வத்தில் தமக்கு புலனாய்வுத் தகவல்களை தந்தவர்கள் என சில நாடுகளின் பெயர்களை கூறியது.

- எல்லா கப்பல்களும் கடற்படையினர் மீது கனரக ஆயுதங்களினால் தாக்குதல்களை நடத்தியதாக கூறுவது.

இந்த கருத்துக்கள் தான் சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களில் உள்ள மிகவும் பலவீனமான அம்சங்கள். எனினும் அரசின் இந்த நாடகங்களுக்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்?

- தாம் மிகவும் உசார் நிலையில் இருப்பது போலவும் தமக்கு அனைத்துலக புலனாய்வு அமைப்புக்களிடம் இருந்து ஒத்துழைப்புக்கள் கிடைப்பது போலவும் காண்பித்து புலிகளின் ஆயுதக்கப்பலின் வரவுகளை முன்கூட்டியே தடுக்கும் முயற்சி

- அனைத்துலகத்தில் புலிகளின் கப்பல்துறை வலையமைப்பு தொடர்பாக ஒரு பெரும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தி அவர்களை அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் முடக்கும் தந்திரம்.

- கடலில் தமது ஆதிக்கம் இழக்கப்படவில்லை என்றும், நடந்துவரும் போரில் புலிகள் அழிந்து போகிறார்கள் என்ற தமது வாதத்திற்கு வலுச்சேர்க்கவும் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம்.

என்பன தான் அரசின் நாடகங்களுக்கான காரணங்களாக கொள்ளப்படலாம். எனினும் இந்த நாடகத்தில் அழிந்து போகும் கப்பல்கள் எவை என்பதும் முக்கிய விடையம்.

- மீனவர்களின் சிறு படகுகளோ அல்லது றோலர்களோ கப்பல்களாக கணணியின் உதவியுடன் காண்பிக்கப்படலாம்.

- ஆட்களை கடத்தும் அல்லது சட்டரீதியற்ற வர்த்தகங்களில் ஈடுபடும் அல்லது போதைப் பொருட்களை கடத்தும் கும்பல்களின் கப்பல்களவோ, றோலர்களாகவே இவை இருக்காலம்.

- சிறிலங்கா படைகளின் கற்பனைக் கப்பல்களாகவும் அவை இருக்காலம்.

இவை தான் இந்த நாடகத்தின் சுருக்கம்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் கருத்துக்களையோ அல்லது மறுப்பு அறிக்கைகளையோ தெரிவிப்பதில்லை என்பதும் எங்களில் ஒரு சிலரின் ஆதங்கம். ஆனால் தென்னிலங்கையில் மாடு களவு போனாலோ அல்லது அமெரிக்காவில் கணணி ஒன்று பழுதடைந்து விட்டாலோ விடுதலைப் புலிகள் தான் அதற்கு காரணம் என தம்நிலை அறியாது கூறுவது சிறிலங்கா அரசினதும் அதன் பேச்சாளர்களினதும் தொன்று தொட்ட வழக்கம்.

எனவே அவர்களின் இத்தகைய பெறுமதியற்ற கூற்றுக்களுக்கு எல்லாம் பதிலளிப்பதற்கு புலிகளுக்கு நேரம் இருப்பதில்லை. அரச தரப்பினரை போல வெட்டியாக பேசுவதற்கு அவர்களுக்கு ஓய்வுகளும் கிடைப்பதில்லை. மேலும் சிங்கள அரசுகள் தமது சொந்த மக்களையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்ற முனையும் இந்த நடவடிக்கைகளை அவர்கள் தான் தமது பகுத்தறிவின் மூலம் இனங்காண வேண்டுமே தவிர தமிழ் மக்களல்ல.

அரசின் இந்த பொய்யான பிரச்சாரங்களால் விடுதலைப்பலிகளுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் இருக்கப்போவதில்லை. மாறாக சிங்களப்படைகளுக்கு தான் அதிக பாதிப்புக்கள் ஏற்படுவதாக தென்னிலங்கை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில் தமது சொந்த பிரச்சாரங்களை தாமே நம்பும் பழக்கம் கொண்டவர்கள் சிங்களப்படைகள். அதனால் தான் இராணுவத்தின் கண்களுக்கு புலிகள் சிலசமயம் சிறு குன்றுகள் போலவும் பலசமயம் பெரும் மலைகள் போலவும் பிரமிப்பூட்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எழுதியவர்: அருஸ் (வேல்ஸ்)

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்

3 பின்னூட்டங்கள்:

said...

இலங்கைத் தமிழர்களில் மிக மலிவாகக் கிடைப்பவர்கள் ஆய்வாளர்களும் கவிஞர்களும் தான். அதுவும் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தாயகத்தை பற்றி இவர்கள் எழுதுவது பல அப்பாவித் தமிழர்களை குழப்பமடையச் செய்கின்றது. வார்த்தை ஜாலம்+ அங்கும் இங்கும் பொறுக்கியெடுக்கும் சிறிய தகவல்கள் + கற்பனைக் குதிரை இந்த மூன்றையும்
ஒரு அறைக்குள் இருந்து கலந்து எழுதினால் அது ஆய்வுக்கட்டுரை என்பது இவர்களது எண்ணம். இவர்கள் போராட்டக்களத்தைக் நேரில் பார்க்காத‌
கற்பனை புனை கதை எழுத்தாளர்கள். தங்கள் பெயரை பிரபலப்படுத்த விரும்பும் சில்லறைகள். இவர்களை மறந்துவிட்டு களத்தில் இருக்கும் எங்கள் போராளிகளுக்கு ஆதரவைக் கொடுத்து ஈழத்தை வென்றெடுக்க முயற்சிப்போம்.

said...

இலங்கைத் தமிழர்களில் மிக மலிவாகக் கிடைப்பவர்கள் ஆய்வாளர்களும் கவிஞர்களும் தான். அதுவும் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தாயகத்தை பற்றி இவர்கள் எழுதுவது பல அப்பாவித் தமிழர்களை குழப்பமடையச் செய்கின்றது. வார்த்தை ஜாலம்+ அங்கும் இங்கும் பொறுக்கியெடுக்கும் சிறிய தகவல்கள் + கற்பனைக் குதிரை இந்த மூன்றையும்
ஒரு அறைக்குள் இருந்து கலந்து எழுதினால் அது ஆய்வுக்கட்டுரை என்பது இவர்களது எண்ணம். இவர்கள் போராட்டக்களத்தைக் நேரில் பார்க்காத‌
கற்பனை புனை கதை எழுத்தாளர்கள். தங்கள் பெயரை பிரபலப்படுத்த விரும்பும் சில்லறைகள். இவர்களை மறந்துவிட்டு களத்தில் இருக்கும் எங்கள் போராளிகளுக்கு ஆதரவைக் கொடுத்து ஈழத்தை வென்றெடுக்க முயற்சிப்போம்.

said...

'இலங்கைத் தமிழர்களில் மிக மலிவாகக் கிடைப்பவர்கள் ஆய்வாளர்களும் கவிஞர்களும் தான். அதுவும் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தாயகத்தை பற்றி இவர்கள் எழுதுவது பல அப்பாவித் தமிழர்களை குழப்பமடையச் செய்கின்றது'

அனானி..அருமையாக சொன்னீர்.. ஆனால் இப்படியெல்லாம் எழுதினா அவர்களுக்கு புடிக்காதே அய்யா!