கறுப்பு ஜூலை அழியாத வடுக்கள் - தாயகன்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான இனவெறியும் மதவெறியும் கொண்ட அரசாங்கத்தின் இன அழிப்பு மற்றும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் தமது இதயங்களில் மாறா வடுவை ஏற்படுத்தி விட்ட `கறுப்பு ஜூலை' தின நிகழ்வுகளை நாளை (ஜூலை 23) அனுஷ்டிக்கின்றனர்.
1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஐ.தே.க.வினால் இனக்கலவரம் என்கின்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின படுகொலைக்கு நாளையுடன் 24 வயதாகிறது.
தமிழ் மக்களின் மனங்களின் சிங்களத்தின் கொடூரத்தை வடுவாக்கி விட்ட அந்த இனப்படுகொலை `கறுப்பு ஜூலை' என்கின்ற பெயரில் தமிழர் வரலாற்றில் பதியப்பட்டுள்ள அதேவேளை, அந்த கறுப்பு ஜூலையே சிங்களத்தின் வீழ்ச்சிக்கும் அத்திபாரமாக அமைந்து விட்டது.
உலக நாடுகளையே உலுக்கிவிட்ட கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நடந்து நாளையுடன் 24 வருடங்களாகின்ற நிலையில் தற்போது ஆட்சி புரியும் மகிந்த அரசு மீண்டுமொரு கறுப்பு ஜூலையை ஏற்படுத்தும் முனைப்புகளில் ஈடுபட்டு வருகின்றது.
`குள்ள நரி' என அழைக்கப்படும் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் நெறிப்படுத்தலில் அமைச்சராகவிருந்த காமினி திசாநாயக்கவின் வழிநடத்தலிலுமே படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.
கொழும்பிலுள்ள தமிழர்களின் பொருளாதாரத்தை அடியோடு அழிக்க வேண்டுமென்ற வெறியில் நடத்தப்பட்ட இந்த இனக்கலவரம் என்கின்ற இன அழிப்பில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (அப்போதைய பெறுமதி) பெறுமதியான தமிழர் சொத்துகள் அழிக்கப்பட்டதுடன் ,2,500 இற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயப்படுத்தப்பட்டனர். உயிர் தப்பியோர் கப்பல்களில் ஏற்றப்பட்டு தமிழர் பகுதிகளான, வடக்கு கிழக்கிற்கு அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர்.
1983 ஜூலை 23 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இனப்படுகொலை 4 நாட்கள் தொடர்ந்து நீடித்தது. தமிழர்கள் வீதி, வீதியாக விரப்பட்டு வெட்டியும், சுட்டும், உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் நூற்றுக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். பலர் குடும்பம் குடும்பமாக வீடுகளுடன் சேர்த்து கொளுத்தப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழரின் வர்த்தக நிலையங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு நீர்மூலமாக்கப்பட்டன.
4 நாட்களாக கொழும்பு வீதிகளில் தமிழர்களின் இரத்த ஆறு ஓடியது. அவலக்குரல்கள் உலக நாடுகள் வரை கேட்டபோதும் அப்போது ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தன மட்டும் மிகவும் அமைதியாக சிங்கள காடையர் கூட்டத்தின் கொலை வேட்டையை ரசித்துக் கொண்டிருந்தார். பாதுகாப்பு படைகளோ தமக்கிடப்பட்ட கட்டளையின் படி கொலைத்தாண்டவம் புரிந்த காடையர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தன.
இனப்படுகொலைகள் நடந்து கோரமான ஐந்து நாட்களுக்கு பின்னரே ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இனக்கலவரம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் விளக்கமளித்தார்.
தொலைக்காட்சி உரையில் கூட தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தொடர்பில் ஜே.ஆர். வருத்தமோ, கவலையோ, அனுதாபமோ தெரிவிக்கவில்லை. மாறாக இனப்படுகொலையை நியாயப்படுத்தியே அவரது கருத்துகள் அமைந்திருந்தன.
1956 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கொண்ட நம்பிக்கையின்மை காரணமாகவே இனக்கலவரம் வெடித்ததாகவும் இவ்வாறான மனக்கசப்புகள் இருக்கும் போது சிங்களவர்கள் வன்முறையில் ஈடுபடுவது எளிதான செயல் என்றும் ஜே.ஆர். இனப்படுகொலையை நியாயப்படுத்தினார்.
அத்துடன் சிங்கள மக்களை அமைதிப்படுத்துவதற்காக தான் புதிய சட்டமொன்றை அமுலாக்குவதாக ஜே.ஆர். கூறினார். ஜே.ஆர். பின்வருமாறு கூறுகிறார்,
சிங்கள மக்களை அமைதிப்படுத்துவதற்காகவும் அவர்களுடைய இயல்பான வேட்கையை பூர்த்தி செய்வதற்காகவும் நான் ஒரு புதிய சட்டத்தை அமுலாக்குகிறேன். இப்புதிய சட்டத்தின் படி நாட்டுப் பிரிவினை கோரும் எவரும் இந்தப் பாராளுமன்றத்தில் அங்கத்தவர்களாக முடியாது. அது மட்டுமன்றி நாட்டுப் பிரிவினை கோரும் எந்தவொரு கட்சியும் தடை செய்யப்படும். இனிமேல் நாட்டைப் பிரிப்பது தொடர்பாக எவரும் சட்ட ரீதியாக செயற்பட முடியாது.
யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கவே கொழும்பில் 2,500 இற்கும் மேற்பட்ட தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஜே.ஆர். தனது புதிய சட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கும் சாவுமணி அடித்தார்.
ஜே.ஆரின் அப்போதைய செல்லப்பிள்ளையான காமினி திசாநாயக்க தனது இனவெறியை பின்வருமாறு வெளிப்படுத்தினார்.
"உங்களை தாக்கியது யார்? சிங்களவர்கள். உங்களை காப்பாற்றியது யார்? சிங்களவர்கள்'. ஆமாம், எங்களால் தான் உங்களை தாக்கவும் முடியும் காப்பாற்றவும் முடியும். உங்களை காப்பாற்ற இந்திய இராணுவம் இங்கே வருமாக இருந்தால் அதற்கு 14 மணித்தியாலங்கள் தேவை. ஆனால், 14 நிமிடங்களுக்குள் இந்த நாட்டினில் உள்ள ஒவ்வொரு தமிழனின் இரத்தத்தையும் இந்த நாட்டிற்காக அர்ப்பணிப்போம்.
உங்களுடைய நெற்றிகளில் நீங்கள் ஒரு யாழ்ப்பாணத் தமிழன் என்றோ மட்டக்களப்பு தமிழன் என்றோ, மலையகத் தமிழன்தான் என்றோ இந்துத் தமிழன் என்றோ கிறிஸ்தவத் தமிழன் என்றோ எழுதப்படவில்லை. நீங்கள் எல்லோரும் தமிழர்கள் தான் என்று முழங்கியிருந்தார்.
இந்த கறுப்பு ஜூலையே தமிழர்களுக்கு சர்வதேச ரீதியில் ஒரு அங்கீகாரத்தை கொடுக்கப் போகின்றதென்பதை ஜே.ஆரோ, காமினி திசாநாயக்கவோ அறிந்திருக்கவில்லை.
1983 ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று `நியூயோர்க்-வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை தனது ஆசிரிய தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியது.
`தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது கடினமென்றால் ஏன் பிரிந்து வாழமுடியாது? தமிழ் மக்களுக்கு தனி ஆட்சி கொடுத்தால் என்ன? ஐ.நா.வில் உள்ள பல நாடுகள் போல் தமிழ் மக்களும் தாங்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதற்குரிய சரியான சான்றுகளை வைத்துள்ளார்கள்.
இந்த ஒருங்கிணைந்த இலங்கைத் தீவில் சிங்களவர் மட்டுமே அதிகாரங்களை வைத்திருக்கின்றார்கள். இந்த அதிகாரங்களை கொண்டுள்ள சிங்களவர்களுக்கு தமிழர்கள் இந்த ஒருங்கிணைந்த இலங்கைத் தீவில் வாழ முடியாத அளவில் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற அறிவாவது உள்ளதா? என கேள்வியெழுப்பியிருந்தது.
ஆனால், அந்த அறிவு இன்று வரை சிங்களவர்களுக்கு வரவில்லை என்பதையே நடந்து வரும் நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
1983 ஜூலையில் குறிப்பிட்ட 4 நாட்களுக்குள் ஐ.தே.க. நடத்திய வெறியாட்டத்தை தற்போதைய மகிந்த அரசு சற்று வித்தியாசமாக நடத்தி வருகின்றது. மகிந்த ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இதுவரை சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள. நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு அவசர கால தடைச் சட்டத்தில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஐ.தே.க. தனது இன வெறியாட்டத்தின் போது தமிழ் மக்களின் பொருளாதாரத்தையே இலக்கு வைத்து அழிந்தது. அதே திட்டத்தையே மேற்கொண்டு வரும் தற்போதைய அரசு அதையும் சற்று வித்தியாசமாகவே செய்கிறது.
அதாவது கொழும்பிலுள்ள பிரபல தமிழ் வர்த்தகர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு, கோடிக்கணக்கான ரூபா கப்பம் பெறப்படுகின்றனர். சிலர் கப்பப் பணம் கொடுத்தும் இதுவரை வீடு திரும்பவில்லை. சில வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் பயங்கர நிலைமையில் தமிழ் வர்த்தகர்கள் சுதந்திரமாக தமது தொழிலை நடத்த முடியாதுள்ளனர். பலர் தமது தொழில்களை கைவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இன்னும் சிலர் தமது வர்த்தக நடவடிக்கைகளை வெகுவாகக் குறைத்து விட்டனர். எவ்வேளையிலும் தாம் கடத்தப்படலாம் அல்லது கொல்லப்படலாமென்ற அச்ச நிலையில் வர்த்தகர்கள் உள்ளனர். இதனால் வர்த்தகத்தில் முதலீடுகளை செய்ய முடியாதுள்ளனர்.
ஐ.தே.க. காடையர் கூட்டத்தை வைத்து செய்த வேலைகளை மகிந்த அரசு வெள்ளை வான்களையும் `கஜநாயக்கா'க்களையும் வைத்து செய்கின்றது.
அண்மையில் இரவோடு இரவாக கொழும்பு லொட்ஜ்களிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை மகிந்த அரசிலுள்ள ஜே.ஆர்.ஜெயவர்தனாக்களை மீண்டும் அடையாளம் காட்டும் நிகழ்வாகவே அமைந்தது.
அப்போது ஜே.ஆர். ஜெயவர்தனவின் இனவெறிக்கு அமைச்சர்களான லலித் அத்துலத்முதலி, சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க போன்றோர் பக்கபலமாக இருந்து அட்டூழியங்களை அரங்கேற்றியது போல் இன்று மகிந்த ராஜபக்ஷவுக்கு அவரின் சகோதரர்களும் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, ஹெகலிய ரம்புக்வெல போன்றவர்களும் பக்கபலமாக செயற்படுகின்றனர்.
1983 கறுப்பு ஜூலைக்கு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மன்னிப்புக் கோராததைப் போல் கொழும்பிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்துக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எவ்வித மன்னிப்பையும் கேட்கவில்லை. அதிசயமாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மன்னிப்புக் கோரினார். ஆனால், அந்தத் தவறை நிவர்த்திப்பது போல் பிரதமர் மன்னிப்புக்கேட்பது தவறென குற்றம்சாட்டி சிறுபான்மையின அமைச்சரான ஜெயராஜ் தனது அரசு விசுவாசத்தை நிரூபித்தார்.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் பாரிய படை நடவடிக்கையொன்றை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்து பல நூற்றுக்கணக்கானோரை படுகாயப்படுத்தி ஒரு இலட்சம் வரையான தமிழர்களை அகதிகளாக்கி கோடிக்கணக்கான சொத்துக்களை நாசமாக்கி விட்டே தொப்பிகல எனப்படும் குடும்பிமலையை இராணுவத்தினர் கைப்பற்றினர்.
தமிழ் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி குடும்பிமலையை கைப்பற்றிய அரசு அதனை பெரும் தேசிய வெற்றி விழாவாக கொண்டாடி புளகாங்கிதம் அடைந்தது. இலங்கையின் இன்னொரு சுதந்திர தினமாக, இன்னுமொரு எதிரி நாட்டை கைப்பற்றிய வெற்றிவிழா போன்று இலங்கையின் கிழக்கிலே உள்ள சிறு வனாந்தர பகுதியான குடும்பிமலையை கைப்பற்றியது வெற்றிவிழாவாகக் கொண்டாடி தன்னை தரம் தாழ்த்திக் கொண்ட மகிந்த அரசு இனவெறியை மட்டும் தூபமிட்டது.
எனவே, 1983 ஆம் ஆண்டைப் போன்றதொரு அரசே அரியாசனத்தில் இருப்பதாலும் இன வெறியும், மதவெறியும் கொண்ட கட்சிகள் அரசுக்கு ஆதரவு கொடுப்பதாலும் மீண்டும் ஒரு இனப்படுகொலை இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் நிறையவேயுள்ளன.
நன்றி: தினக்குரல்