Thursday, September 28, 2006

கருணாநிதியின் கூற்று உண்மைக்குப் புறம்பானது

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களுடனான சந்திப்பு விவகாரம்- கருணாநிதியின் கூற்று உண்மைக்குப் புறம்பானது

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து விளக்கிக் கூறுவதற்காக அண்மையில் இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியை சந்திப்பதற்கு இடையறாது முயற்சி மேற்கொண்டிருந்த போதிலும், அவ்வாறு அவர்கள் தன்னைச் சந்திப்பதற்கு முயற்சித்ததாகக் கூறுவது வெறும் கட்டுக்கதையென்று அவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பது இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லையென்ற கலைஞரின் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்று தமிழக கட்சிகளின் வட்டாரங்களும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான சந்திப்புகளை ஏற்பாடு செய்வதில் முன்னின்று பாடுபட்ட முக்கியஸ்தர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த ஜூலை முதல் வாரத்திலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத் தலைவர்களைச் சந்திப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தமிழகத்தின் சகல கட்சிகளினதும் தலைவர்களுக்கு சென்னையில் நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தமிழரசுக் கட்சியின் கடிதத்தலைப்புகளில் தானே கையெழுத்திட்டு கடிதங்களை அனுப்பிவைத்திருந்தார். முதலமைச்சர் கருணாநிதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவு தலைவர்களிடமிருந்து இக்கடிதங்களுக்கான பதில் கிடைக்கவில்லை. சம்பந்தன் தமிழகம் வந்து சேருவதற்கு முன்னதாக பல கட்சிகளின் தலைவர்களை மாவை சேனாதிராஜாவும் சச்சிதானந்தனும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

சம்பந்தன் சென்னை வந்துசேர்ந்த பின்னர் செப்டெம்பர் முதலாம் திகதி அவரும் மாவை சேனாதிராஜாவும் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தை சச்சிதானந்தன் முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கையளித்திருந்தார். தங்களைச் சந்திப்பதற்கு நியமனம் தருமாறு சம்பந்தனும் மாவையும் அக் கடிதத்தின் மூலம் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பின்னர் செப்டெம்பர் 4 ஆம் திகதியும் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.

செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு முன்னர் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறே அக் கடிதத்தில் வேண்டுதல் விடுக்கப்பட்டது. செப்டெம்பர் 7 ஆம் திகதியும் சம்பந்தன் தனியாகக் கையெழுத்திட்டு பிற்பகல் 2 மணியளவில் கலைஞரின் வீட்டுக்கு தொலை நகல் மூலம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கும் அன்றைய தினமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன் கடிதத்தை அனுப்பினார்.

செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில் சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேரம் குறித்து வேண்டுகோள் விடுத்த வண்ணமிருந்தனர். 14 ஆம் திகதி நண்பகல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து கலைஞருக்கான கடிதத்தின் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது. தொலைபேசி மூலமான வேண்டுகோள்கள் சகலதுக்கும் முதலமைச்சரின் செயலாளரிடமிருந்து பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்பட்டு காலம் இழுத்தடிக்கப்பட்டது. செப்டெம்பர் 19 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழு புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்று விட்டது. இக் குழுவினர் புது டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன், வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கும் சிவ் சங்கர் மேனன், வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட் ஆகியோர் உட்பட பல அதிகாரிகளை சந்தித்துப் பேசி நிலைவரங்களை விளக்கிக் கூறமுடிந்ததெனினும் பிரதமர் கலாநிதி சிங்கைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை. அவர்கள் புதுடில்லியிலிருந்து சென்னை திரும்பிய பின்னரும் கூட கலைஞர் கருணாநிதியைச் சந்திப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்க வில்லை என்ற கலைஞர் கருணாநிதியின் கூற்று குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுடன் நேற்று புதன்கிழமை மாலை சென்னைக்குத் தொடர்பு கொண்டு கேட்டபோது கலைஞர் கூறியது சகலதுமே உண்மைக்குப் புறம்பானது என்று சொன்னார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழுவினர் முதலமைச்சரைச் சந்திப்பதற்கு 10 நாட்களாக இடையறாது முயற்சித்த போதிலும் அதற்கான வாய்ப்பை அவர் வழங்கவில்லை. சந்திப்பதற்கு அவர் மறுத்து விட்டார். இத் தூதுக்குழுவினரை இந்தியப்பிரதமர் சந்திக்க மறுத்தமைக்கும் கருணாநிதி அவர்களைச் சந்திக்க முதலில் மறுத்ததே காரணமாக இருக்கக் கூடும். தமிழக முதலமைச்சரே சந்திக்க மறுத்த தூதுக்குழுவினரை தான் ஏன் சந்திக்க வேண்டும் என்று பிரதமர் நினைத்திருக்கக்கூடும். இதற்கெல்லாம் முழுப் பொறுப்பு முதலமைச்சர் கருணாநிதியே என்று நெடுமாறன் கூறினார்.

நன்றி: தினக்குரல்

Sunday, September 24, 2006

தமிழ் எம்பிக்களை மன்மோகன்சிங் சந்திக்காதது ஏன்?

தமிழ்க் கூட்டமைப்புப் பிரதிநிதிகளை மன்மோகன்சிங் சந்திக்காதது ஏன்?
- (அஜாதசத்ரு)

இலங்கையின் உள்ளூர் அரசியல் விவகாரங்களில் மாத்திரமன்றி பொருளாதார விடயங்கள் உட்பட அனைத்து விடயங்களிலும் ஆரம்பகாலம் தொடக்கம் தனது ஆளுமையைச் செலுத்தி வரும் அயல் நாடான இந்தியா இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தற்போது மௌனமான போக்கொன்றை கடைப்பிடித்து வரும் இன்றைய போக்கானது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கவலையளிப்பதாகவேயுள்ளது.

இந்தியாவில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தங்கியுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு தரப்பினர் ஊடாகவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்கு முயற்சித்த போதிலும் வெள்ளிக்கிழமை வரை அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

கியூபாவில் நடைபெற்ற அணிசேரா மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியவுடன் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உறுதி மொழி வழங்கியதையடுத்து புதுடில்லியில் காத்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர்.

அதேநேரம் இந்தியப் பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஈ.அஹமட் மற்றும் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முக்கியஸ்தர்களையும் சந்திக்கும் வாய்ப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள போதிலும் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அகில இந்திய காங்கிரஸ் கட்சி என்பவற்றின் முக்கியஸ்தர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் இறுதி நேரத்தில் இல்லாமல் செய்யப்பட்டமை இலங்கைத் தமிழர்கள் மீதான இந்தியாவின் ஈடுபாடு தொடர்பில் பெரும் விசனத்தை தோற்றுவித்துள்ளது.

இதெல்லாவற்றுக்குமப்பால் அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் சென்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவினர் தமிழகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ உட்பட ஏனைய ஈழத்தமிழர் ஆதரவுக் குழுக்களின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்துள்ள போதிலும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவியும், முன்னாள் முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா ஆகியோரையும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது.

1991 மே மாதம் பெரம்புதூரில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்ட கசப்பான உணர்வலைகள் படிப்படியாக நீங்கி தற்போது முற்று முழுதான ஆதரவான நிலைப்பாடு தோன்றியுள்ள நிலையில், இந்திய மத்திய அரசினதும் தமிழகத்தினதும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்துள்ளமையானது ஈழத்தமிழர்கள் மத்தியில் மாத்திரமன்றி தமிழகத்திலும் பெரும் சீற்றத்தை உருவாக்கியுள்ளது.

உலகத் தமிழர்களின் தலைவரென்று தன்னைத்தானே புகழ்பாடிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் இன்றைய முதலமைச்சரான கலைஞர் மு.கருணாநிதி ஈழத்தமிழர் விவகாரத்தில் இரட்டைப் போக்கொன்றைக் கடைப்பிடிப்பதாகவே குற்றஞ்சாட்டப்படுகின்றது.

கடந்த ஆறு மாதகாலப்பகுதியில் தமிழகத்திற்கு தஞ்சம் தேடிச் சென்றுள்ள 14 ஆயிரம் அகதிகள் சொல்லும் சோகக்கதைகளைக் கேட்டுக் கண்ணீர் வடிப்பதாகக் கூறும் தமிழர் முதல்வர் கலைஞர் கருணாநிதி இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடைப்பிடித்த கர்ண கடூரமான போக்கையே தனது ஆட்சியிலும் கடைப்பிடித்து வருகின்றார் என்பதே அவருடைய அண்மையகால நடவடிக்கைகள் மூலம் தெளிவாக உணரக்கூடியதாகவுள்ளது.

தமிழகத்திற்கு தஞ்சம் தேடிச் சென்றுள்ள அகதிகளில் சமூக விரோதிகள் உள்ளதாகக் கூறி தமிழக பொலிஸ்படை மற்றும் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு விசேட அதிகாரம் வழங்கி தஞ்சம் தேடிச் சென்றுள்ள ஈழத்தமிழ் அகதிகளை விசாரணையென்ற பேரில் துன்புறுத்திக் கொடூரம் விளைவிக்கும் நடவடிக்கையிலும் தமிழகத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் செயற்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈழத்தமிழ் மக்களின் இன்றைய அவலநிலை குறித்து முறையிடச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு மறுத்து வரும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பையும் தடை செய்வதற்கான நடவடிக்கைகளிலும் பிரதான பங்கெடுத்தவர் என்றும் தமிழகத்தில் பரவலாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது முழுமையான பங்களிப்பைச் செலுத்தி வந்த அயல்நாடான இந்தியா இன்றைய மிக மோசமான நெருக்கடியான கால கட்டத்திலும் கூட மௌனப் போக்கொன்றைக் கடைப்பிடிப்பதன் உள்நோக்கம் எதைக் காட்டுகிறது?

மேலும் வாசிக்க: தினக்குரல்

Saturday, September 23, 2006

தமிழ் எம்.பி.க்களை சந்திப்பதை மன்மோகன் தவிர்ப்பு

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களை சந்திப்பதை மன்மோகன் தவிர்ப்பு

சம்பந்தன் தலைமையிலான குழ நேற்று இரவு சென்னை திரும்பியது
இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புக்காக கடந்த சில தினங்களாக புதுடில்லியில் காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும், அவரைச் சந்திக்க இயலாமல்போனதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை அங்கிருந்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்குப் புறப்பட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான இத் தூதுக்குழு நேற்றும் இந்தியப் பிரதமருடனான சந்திப்புக்காக பல மணி நேரமாகக் காத்திருந்தது. சந்திப்பு நிச்சயம் இடம்பெறும் என்பதற்கான அறிகுறிகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலையில் தென்பட்டதையடுத்து நம்பிக்கை கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று ஏமாற்றமே கிட்டியது. ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு சாத்தியப்படாது போனதால் பெரும் விசனமடைந்த அவர்கள் புதுடில்லியை விட்டு நேற்று மாலை புறப்பட்டனர்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மேயில் கொலை செய்யப்பட்டதையடுத்து இலங்கைத் தமிழ்த் தரப்புக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட கசப்புணர்வுகளை அகற்றி புதியதொரு அத்தியாயத்தைத் திறப்பதற்காக புதுடில்லியுடன் நெருக்கமான தொடர்புகளுக்கு ஆவல் கொண்டிருந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலாநிதி சிங்குடனான சந்திப்பு கைகூடாததால் பெரும் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.

இந்தியப் பிரதமரைச் சந்திக்கத் தவறியது ஏன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜாவிடம் இந்தியச் செய்தியாளர்கள் கேட்டபோது, `இது மிகவும் உணர்ச்சி பூர்வமான ஒரு விவகாரம். இது குறித்து நாம் கருத்துக் கூறவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சை இது குறித்து கேட்டோம்' என்று பதிலளித்தார். எவ்வாறெனினும், பொருத்தமான தருணமொன்றில் கலாநிதி சிங்கைச் சந்திப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

கலாநிதி சிங்கிடம் கையளிப்பதற்காக வைத்திருந்த மகஜரை இந்திய அரசாங்க அதிகாரிகளிடம் கொடுத்திருப்பதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார். சந்திப்பு நடைபெறாததற்கான காரணம் குறித்து புதுடில்லி வட்டாரங்கள் எதையும் கூறவில்லை.
இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட மகஜரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்காக மகஜரில் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் புதுடில்லியுடன் நெருக்கமான தொடர்புகளை மீளவும் ஏற்படுத்துவதிலும் அக்கறை காட்டப்பட்டிருந்தது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை அரசாங்கம் தமிழர்களை இனப் படுகொலை செய்வதாகவும் 2002 பெப்ரவரி போர் நிறுத்த உடன்படிக்கையை படுமோசமாக மீறுவதாகவும் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மைய இராணுவ நடவடிக்கைகளினால் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நேரடி மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு இந்தியாவிடம் அந்த மகஜர் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. தமிழ் நாட்டுக்கு தப்பியோடி வந்த ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக புதுடில்லிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மகஜரில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடில்லிக்கு செல்வதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுக் குழுவினர் சென்னையில் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியையும் சந்திக்க முடியவில்லை என்பது தெரிந்ததே. எவ்வாறெனினும், இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையும் வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட்டையும் வியாழனன்று அவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தக் கூடியதாயிருந்தது.

நன்றி: தினக்குரல், 23 செப் 2006

Sunday, September 17, 2006

மரியதாஸ் படுகொலை - முழுமையான விசாரணை வேண்டும்

மரியதாஸ் படுகொலை தொடர்பாக முழுமையான விசாரணையை கோருகிறது சோசலிச சமத்துவ கட்சி

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.க.க.) உலக சோசலிச வலைத்தளமும், சோ.ச.க. ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ் கிழக்கு மாவட்டமான திருகோணமலையில் ஆகஸ்ட் 7 அன்று படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டனம் செய்கின்றன. இந்தப் படுகொலை பற்றிய ஒரு முழு விசாரணையையும் மற்றும் இந்தக் குற்றத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடருமாறும் கோரும் எமது பிரசாரத்திற்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுப்பதாக இக்கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள், கொலையாளிகள் இலங்கை இராணுவம், பொலிஸ் அல்லது இவற்றோடு சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுக்களின் உறுப்பினர்களே என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டமையானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்துக்குள் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கையின் வட, கிழக்கில் வாழும் வெகுஜனங்களை அச்சுறுத்திப் பயமுறுத்துவதன் பேரில் நடத்தப்படும் பிரசாரத்தின் ஒரு பாகமாகும். இந்தப் பிரசாரத்தின் குறிக்கோள் யுத்தத்தை நனவுடன் எதிர்ப்பவர்களை மௌனமாக்குவதாகும் என்றும் அக்கட்சி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 வயதான மரியதாஸ் புகைப்படவியலை தனது தொழிலாகக் கொண்டிருந்ததோடு திருகோணமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள முள்ளிப்பொத்தான என்ற கிராமப்புற நகரில் ஒரு ஸ்டூடியோவையும் தொலைத்தொடர்பு நிலையத்தையும் நடத்தி வந்தார். அன்றாடம் வேலைக்காக பயணிப்பது சிரமமாகையால், அவர் கொல்லப்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர்தான் தனது மனைவி ஸ்டெல்லா கிருஷாந்தி மரியதாஸையும் தனது மூன்று வயது மகனையும் அழைத்துக்கொண்டு நகரில் சென்று குடியேறியிருந்தார்.

மரியதாஸ் ஆகஸ்ட் 7 இரவு 7.45 மணிக்கு வீடு திரும்பினார். சுமார் இரவு 9.30 மணியளவில், இரவு சாப்பாட்டை முடித்தவுடன், யாரோ ஒருவர் `மரியதாஸ் அண்ணா' என கூப்பிடுவதைக் கேட்டவுடன் கதவுக்கருகில் சென்றார். அவர் கதவை அண்டியவுடனேயே துப்பாக்கிதாரி அவரை நெற்றியிலும் கழுத்திலும் சுட்டான். அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.

சூட்டுச் சத்தத்தைக் கேட்டவுடன் சமயலறையிலிருந்து விரைந்த அவரது மனைவி ஸ்டெல்லா கிருஷாந்தி, மரியதாஸ் நிலத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டார். கட்டை கால்சட்டையும் டீ சேர்ட்டும் மற்றும் ஹெல்மட்டும் அணிந்திருந்த கொலையாளி கேட்டை நோக்கி ஓடுவதை அவர் கண்டார். மதில் மேல் ஏறிக் குதித்த கொலையாளி காத்திருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டான்.

கிருஷாந்தி உதவி கேட்டு சத்தமிடுவதைக் கேட்ட அயலவர்கள் இரு ஊர்காவற்படையினருடன் வீட்டுக்கு வந்தனர். அரை மணித்தியாலயத்தின் பின்னர் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் இருந்தும் அலுவலகர்கள் வந்துசேர்ந்தனர். கிருஷாந்தியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட அவர்கள், மரியதாஸின் உடலை 10 கிலோமீற்றர் தெற்காகவுள்ள கந்தளாய் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அடுத்தநாள் ஆஸ்பத்திரியில் நீதவான் விசாரணை நடந்ததோடு வழமையான ஒரு தீர்ப்பும் வெளியிடப்பட்டது. அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகள் செ்ய்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார். பூர்வாங்க விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்தப் படுகொலை நடந்துள்ள சூழ்நிலையானது பிரதேசம் முற்றிலும் யுத்தப் பிராந்தியத்தில் அமைந்துள்ளதோடு துருப்புகள், பொலிஸ் மற்றும் ஊர்காவற் படையினரின் கண்காணிப்பிலுள்ள பிரதேசமாகும். இரவில் பயணிக்கும் எவரும் வழமை போலவே வீதித் தடைகளில் சோதனைக்குட்படுத்தப்படுவர்.

ஆகஸ்ட் 5, மரியதாஸ் படுகொலை செய்யப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர், பிரான்ஸை தளமாகக் கொண்ட அக்ஷன் பாம் அரச சார்பற்ற நிறுவனத்தின் 17 உள்ளூர் தொண்டர்கள் மூதூரில் கொல்லப்பட்டிருந்தனர். 15 சடலங்கள் இந்த நிறுவனத்தின் வளாகத்தில் வரிசையாகக் கிடந்தன. இவர்கள் மரணதண்டனை பாணியில் தலையில் சுடப்பட்டிருந்தனர். தப்பி ஓட முயற்சித்த ஏனைய இருவர் பின்புறம் சுடப்பட்டுக்கிடந்தனர். யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்கும் இலங்கை கண்காணிப்புக் குழு தனது சொந்த விசாரணைகளின் பின்னர், ஆகஸ்ட் 30 அன்று இந்தக் கொலைகளுக்கு இராணுவமே பொறுப்பு என உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

கடந்த நவம்பரிலிருந்து நடந்த பல அவலங்களில் ஒன்றான மூதூர் படுகொலைகள், யுத்தத்தின் இனவாத பண்பைக் கோடிட்டுக் காட்டுகின்றன. பேரினவாதத்தில் தோய்ந்து போயுள்ள பாதுகாப்புப் படைகள் தமிழ் சிறுபான்மையினரை எதிரிகளாக நடத்துகின்றன. சிங்கள தீவிரவாத கட்சிகள் வடக்கு மற்றும் கிழக்கில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களை `புலி ஆதரவாளர்கள்' என மீண்டும் மீண்டும் கண்டனம் செய்து வந்துள்ளன.

இருநாட்களின் பின்னர், இந்த நச்சுத்தனமான அரசியல் காலநிலையின் மத்தியிலேயே மரியதாஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலைக்கு அருகில் அவரது ஊரான செல்வநாகயப்புரத்தில் ஆகஸ்ட் 09 அவரது இறுதிக் கிரியைகள் நடந்தபோது, அந்தப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளிலில் ரோந்து சென்ற பாதுகாப்புப் படையினர் மக்களை அங்கு செல்லாமல் தடுக்க முயற்சித்தனர்.

இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்பவர்களை அச்சுறுத்தும் முயற்சிகள் இருந்தபோதிலும், கிட்டத்தட்ட 500 தமிழ் சிங்கள மக்கள் அதில் கலந்துகொண்டு தமது மரியாதையை செலுத்தினர். ஏனையவர்களுக்கு உதவுவதிலும் சமூக நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதிலும் பேர் போன மரியதாஸ் ஒரு பிரசித்திபெற்ற இளைஞராவார்.

மரியதாஸ் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அல்ல. அவர் சோ.ச.க.யின் அரசியல் நடவடிக்கையில் பகிரங்கமாக பங்குகொள்ளாவிட்டாலும், அவர் புலிகளின் பிரிவினைவாத முன்நோக்குக்கு அன்றி, கட்சியின் அரசியல் வேலைத்திட்டத்துடனேயே உடன்பாடுகொண்டிருந்தார். யுத்தம் 1983 இல் தொடங்கியதில் இருந்தே அதை எதிர்த்து வருவதிலும் மற்றும் சிறீலங்கா - ஈழம் சோசலிசக் குடியரசிற்காக தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதிலும், சோ.ச.க. மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினதும் நீண்டகால போராட்டத்தை மரியதாஸ் பெரிதும் மதித்தார்.

மரியதாஸ் ஐந்து வருடங்களுக்கு முன்னர் சோ.ச.க. உடன் தொடர்பு கொண்டார். அவர் தொடர்ந்தும் உலக சோசலிச வலைத் தள தமிழ் கட்டுரைகளை வாசித்ததோடு தன்னால் முடிந்த சகல சந்தர்ப்பங்களிலும் அதன் நிருபர்களுக்கு உதவினார். அவரும் அவரது குடும்பத்தாரும் எமது நிருபர்களுக்கு உணவும் தங்குமிடமும் வழங்கியுள்ளனர். அவர்களது நிர்ணயம் ஆபத்தானதாக இருந்தால், தானும் அவர்களோடு சேர்ந்து வரவேண்டும் என அவர் வலியுறுத்துவார். அவரது பரந்த எண்ணிக்கையிலான நண்பர்கள் மற்றும் தொடர்புகள் மூலம் அவரால் எப்பொழுதும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் மற்றும் பேட்டிகளை ஒழுங்கு செய்யவும் முடிந்தது. அவர் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், அவர் வலைத்தளத்துக்காக மூதூர் அகதி ஒருவரை பேட்டிகாண ஏற்பாடு செய்து தந்தார். இலங்கையில் நடப்பது என்ன என்பதை சர்வதேச வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையிலான ஒரு யதார்த்தமான சித்திரத்தையே அவர் விரும்பினார்.

அவர் யுத்தத்திற்கு எதிரான தனது எதிர்ப்பை மிகவும் சாதாரணமாக வெளிப்படுத்தினார். "பாருங்கள், நாம் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் இங்கு நெருக்கமான பிணைப்புடனும் உறவுடனும் வாழ்கின்றோம். இந்த மூன்று தரப்பிலும் உள்ள ஒரு சிறு அளவானவர்கள் இங்கு வந்து தமது சொந்த முன்னேற்றத்திற்காக இனவேற்றுமைகளை கிளர்கிறார்கள்" யுத்தத்தை கடுமையாக எதிர்ப்பதோடு அனைத்து ஆளும் வர்க்கத்தின் மீதும் பகைமையுணர்வு கொண்ட அவர், "இந்த யுத்த்தில் உயிரிழப்பது சாதாரண தமிழர்களும் அப்பாவி சிங்கள பொது மக்களும், அதேபோல் படையினருமே ஆகும்", என கூறுவார். அவர் சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத்தளத்தாலும் ஈர்க்கப்பட்டது தற்செயலானது அல்ல.

மரியதாஸுக்கு தனிப்பட்ட எதிரிகள் கிடையாது. அவரது குடும்பத்தார் அவரை முல்லிப்பொத்தானையில் குடியேற வேண்டாம் என கூறியபோது, உள்ளூர் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் தன்னுடைய நண்பர்களாக இருப்பதால் நான் பயப்பட வேண்டியதில்லை என மரியதாஸ் கூறியிருந்தார். அவர் யுத்தத்தின் வெளிப்படையான எதிரி என்பதாலேயே கொல்லப்பட்டார். அவரது படுகொலை, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தீவை இனவாத யுத்த புதைச் சேற்றுக்கு வெளியே ஒரு முற்போக்கான அரசியல் பாதையைத் தேடும் ஏனையவர்களையும் பீதிக்குள்ளாக்கும் நடவடிக்கையாகும்.

சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், மரியதாஸ் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றஞ்சாற்றப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்தைக் கோரும் சர்வதேச பிரசாரம் ஒன்றை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக ஆட்பேசனைக் கடிதங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரிகள்:

Inspector General of Police Chandra Fernando, Police Headquarters, Colombo 1, Sri Lanka, Fax : 0094112446174, Email :igp@police.lk, Attorney General K.C.Kamalasabeyson, Attorney General's Deparment, Colombo 12, Sri Lanka, Fax: 0094112436421.

நன்றி: தினக்குரல்

Wednesday, September 06, 2006

மூதூர்ப் படுகொலை

மூதூரில் பிரான்சைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கு சிறிலங்கா இராணுவத்தினரே காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பகிரங்க குற்றம்சாட்டியுள்ளது தெரிந்ததே. அந்தக் கொடூரமான தாக்குதல் படத்தினைக் கீழே காணலாம்:



"இந்த சம்பவங்களில் சிறிலங்கா இராணுவத்தினரைத் தவிர வேறு எந்த ஆயுதக் குழுக்களும் பின்னணியில் இருப்பதாக எமது விசாரணைகளில் தெரியவில்லை" என்று கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பணி விலகிச் செல்லும் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன், "இது படுகொலைச் சம்பவம்' என்றும் "உலக அளவில் மனிதாபிமான பணியாளர்களைப் படுகொலை செய்துள்ள மிக மோசமான செயல்" என்றும் கூறியுள்ளதாக அசோசியேற்றற் பிறஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கேதீஸ் லோகநாதன் படுகொலையில் மஹிந்த?

கேதீஸ் லோகநாதன் படுகொலையில் மகிந்த ராஜபக்ச?

சிறிலங்கா சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ் லோகநாதன் படுகொலையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Global Electro-Newsnet என்ற ஊடகத்தில் இச்செய்தி வெளியானதாக தமிழ்கனேடியன் இணையதளம் பிரசுரித்துள்ளது.

அச்செய்தி விவரம்:

கேதீஸ்வரன் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக மகிந்தவின் உள்வட்டாரங்களான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

மூதூரில் 17 அரச சார்பற்ற பணியாளர்களை சிறிலங்கா இஆணுவத்தினர் படுகொலை செய்தமை குறித்த தனது விசனத்தை இந்த உரையாடலில் கேதீஸ் லோகநாதன் வெளிப்படுத்தினார். அமைதி முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபாட்டுடன் செயற்படும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் சாடியுள்ளார்.
இது தொடர்பில் இருதரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது.

மேலும் மூதூர் படுகொலையை ஏற்கமுடியாத தான் அதற்குக் கண்டனம் தெரிவித்து சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவிக்க உள்ளேன் என்றும் கேதீஸ் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு குறித்து இரு நாட்கள் தாமதிக்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்சவும் கேதீஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த உரையாடல் முடிவடைந்த நேரத்தில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கேதீஸ்வரனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அதன் பின்னர் சில நிமிடங்களில் கேதீஸ்வரன் படுகொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

மூதூர் படுகொலை தொடர்பான சர்வதேச சமூகத்தின் அதிருப்தியை திசை திருப்புவதற்காகவும் கேதீஸ் லோகநாதனை படுகொலை செய்து விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவுமே இப்படுகொலைச் சம்பவத்தின் நோக்கமாக இருந்துள்ளது.

கேதீஸ் லோகநாதனை படுகொலை செய்த நபர்களில் எவருமே தமிழர் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜே.வி.பி.யின் கொலைப் பட்டியலில் கேதீஸ் லோகநாதனும் இடம்பெற்றிருந்ததாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஜே.வி.பி.யினர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்

Saturday, September 02, 2006

செயலற்ற சொற்களும் முறையற்ற செயற்பாடுகளும்

செயலற்ற சொற்களும் முறையற்ற செயற்பாடுகளும்
சபேசன் (அவுஸ்திரேலியா)

சிறிலங்கா அரசின் சிங்கள பெளத்த பேரினவாதச் செயற்பாடுகளும், அரச பயங்கரவாத நடவடிக்கைகளும் மறைத்து வைக்க முடியாதவாறு இப்போது மிக வெளிப்படையாகவே நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகவோ என்னவோ சில உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் தற்போதைய நிலை குறித்து விசனம் தெரிவித்து வருகின்றன.

இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகிய நாடுகள் கூட்டாகவும், தனித்தனியாகவும் கவலை தெரிவித்துள்ளதுடன் சமாதானப்பேச்சு வார்த்தைகளை உடனடியாக இருதரப்பினரும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்களை விடுத்து வருகின்றன.

ஐக்கிய நாடுகளின் சார்பாக அதன் செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாக வேண்டியதன் அவசியத்தை அதிபர் ராஜபக்சவிற்கு வலியுறுத்தியுள்ளார். இதேபோல் கனடா உட்பட பல நாடுகள் சமாதானப் பேச்சு வார்த்தைகளின் அவசியத்தையும் அவசரத்தையும் வலியுறுத்தியுள்ளன.

இவற்றோடு மட்டுமல்லாது மூதூரில் பிரான்ஸ்-அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டமை குறித்து சுயாதீனமான சர்வதேச அளவிலான விசாரணைகள் சிறிலங்கா அரசு நடாத்த வேண்டும் என்று இணைத் தலைமை நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் அதிபர் ராஜபக்சவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளன. வடக்கு-கிழக்கு பகுதிகளில் இடம் பெயர்ந்த மக்களுக்கான நிவாரண உதவிகள் முறையாகச் சென்றடைவதற்குச் சிறிலங்கா அரசு அனுமதியளிக்க வேண்டும் - என்றும் இவை கேட்டுக் கொண்டுள்ளன.

இன்னுமொரு பரிமாணமாக தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனை குறித்தும் வெளிப்படையாகவே பல உலக நாடுகளும் அமைப்புக்களும் இப்போது பேச ஆரம்பித்துள்ளதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் அமெரிக்க உதவிச் செயலாளர் றிச்சட் பெளச்சர் ((Richard Boucher)) என்பவர் தமிழ் மக்களுக்கு நியாயமான சட்டபூர்வமான அரசியல் வேட்கைகள் உண்டென்பதையும் அவர்களுடைய தாயகபூமிக் கோரிக்கைக்கு நியாயம் உண்டு என்பதையும் வெளிப்படையாக ஒப்புப் கொண்டுள்ளார். இதேபோல் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ((Human Rights Watch)) ஆசிய இயக்குனர் பிராட் அடம்ஸ் (Brad Adams) என்பவரும் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை ஏற்றுக்கொண்டு அறிக்கையன்றை வெளியிட்டிருந்தார். இவ்வாறு வேறு சில உலக நாடுகளும் தமிழர் பிரச்சனைகளைத் தாம் புரிந்து கொள்வதாக அண்மைக் காலத்தில் கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளதையும் நாம் அவதானிக்கின்றோம்.

இத்தகைய அறிக்கைகளையும் செய்திகளையும் கேட்கின்ற எம்மவர் மத்தியில் - குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் மத்தியில் - சமாதானத்தீர்வு மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுவது நியாயமாகாதுதான்.

உலக நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் குறித்துக் கவலையும் விசனத்தையும் தெரிவித்து வருகின்றன.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக சமாதானத்தீர்வு ஒன்றை அடையவேண்டும் என்றும் இவை வற்புறுத்தி வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ் மக்களுக்கு நியாயமான சட்டபூர்வமான அரசியல் வேட்கைகள் உண்டென்பதையும் அவர்கள் தனிநாடு கோருவதற்கு அடிப்படை நியாயங்கள் உண்டு என்பதையும் இவை ஏற்றுக்கொள்கின்றன. ஆகவே இம்முறை நியாயமான சமாதானத்தீர்வு கிட்டக்கூடும் என்று எம்மவர் எதிர்பார்க்கக்கூடும். இதே கருத்தைத்தான் பல அரசியல் ஆய்வாளர்களும் ஊடகங்களும் எழுத ஆரம்பித்திருப்பதை நாம் அவதானிக்கின்றோம்.

ஆனால் நாம் இந்த எதிர்பார்ப்பு எண்ணங்களிலிருந்து முற்றாக மாறுபடுகின்றோம். அது மட்டுமல்லாது இந்தச் செயலற்ற சொற்பிரயோகங்களுக்குப் பின்னால் உள்ள முறையற்ற செயற்பாடுகளையும் எண்ணிப் பார்க்கின்றோம். அதன் காரணமாக நாம் முன்னரையும் விட எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும் என்றும் எமது வாசகர்களுக்கு இந்த வேளையில் வேண்டுகோளும் விடுக்கின்றோம்.

ஆகவே இது குறித்துச் சில விடயங்களைத் தர்க்கிப்பது அவசியமாகின்றது.

சிறிலங்கா அரசு குறித்து விசனம் தெரிவித்தும் தமிழ் மக்களின தேசியப் பிரச்சனை குறித்து ஆதரவான கருத்துக்களை தெரிவித்தும் வருகின்ற இந்த வெளிச்சக்திகளில் பெரும்பான்மையானவை கூடவே இன்னுமொரு விடயத்தையும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தி வருவதையும் நாம் இவ்வேளையில் பொருத்திப் பார்க்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தமிழ் மக்கள் ஆதரவு வழங்கக்கூடாது என்றும் விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்த வெளிச்சக்திகள் வலியுறுத்தி வருவதையும் நாம் அவதானிக்கின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளோடுதான் சிறிலங்கா அரசு சமாதானப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள வேண்டும் - என்று கூறுகின்ற இந்த வெளிச்சக்திகள் அதே வேளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தமிழ் மக்கள் ஆதரவு வழங்கக் கூடாது என்று கூறி வருவதானது எத்தகைய முரணான விடயம்? இந்த வலியுறுத்தலின் பின்புலம் தான் என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என்று தமிழ் மக்களையே கேட்டுக் கொள்கின்ற இந்த வெளிச்சக்திகள் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு ஏதாவது ஆதரவை வழங்கி வந்துள்ளனவா? இந்த வெளிச்சக்திகள் இதுவரை காலமும் சிறிலங்கா அரசுகளுக்கு அல்லவா தமது ஆதரவை வழங்கி வந்திருக்கின்றன? சிறிலங்கா அரசுகள் தமிழ் மக்களை கொன்று குவித்தும், பொருளாதார உணவு மருந்துத் தடைகள் ஊடாக பட்டினி போட்டும் வந்துள்ள காலங்களின் போதெல்லாம் இந்த வெளிப்படை சக்திகள் சிறிலங்கா அரசுகளுக்குத் தமது வெளிப்படையான ஆதரவினை நல்கி ஆயுத தளபாடங்களையும் சிங்கள அரசுக்கு அள்ளிக் கொடுத்ததையும் தமிழ் மக்கள் அறிவார்கள்.

இன்று விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பரப்புரை செய்கின்ற இந்த வெளிச்சக்திகள் அன்று சிறிலங்கா அரசிற்கு அளித்திட்ட ஆதரவும் உதவியும்தான் தமிழ் மக்கள் அழிவுக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கியது என்பதும் வரலாற்று உண்மையல்லவா?

சிறிலங்கா அரசுகள் தங்கள் சொந்தப் பலத்தினுடும் பின்னர் வெளிநாடுகள் தந்த நிதியுதவி மற்றும் ஆயுதப் பலங்களோடும் தமிழ் மக்களை ஒடுக்கி அழித்து வந்த காலங்களில் இந்த வெளிச்சக்திகள் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளுக்காகக் குரல் கொடுக்கவில்லை. தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காக சாத்வீக முறையில் அரசியல் வழியில் ஜனநாயக ரீதியாகப் போராடிய போதெல்லாம் சிறிலங்கா அரசுகள் அவற்றை வன்முறை கொண்டு அடக்கின. அப்போதும் இந்த வெளிச்சக்திகள் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக கருத்துச் சொல்ல முன்வரவில்லை.

தமிழர்களின் உரிமைப்போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமையின் கீழ் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்த பின்னர்தான் இந்த உலக நாடுகள் திரும்பிப் பார்க்க தொடங்கின. அப்போதும் இந்த வெளிச்சக்திகள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்கவில்லை. தொடர்ந்தும் சிறிலங்கா அரசுகளை ஆதரித்து வந்த வெளிச்சக்திகள் தங்களுடைய தொடர்ச்சியான நிதியுதவியூடாகவும் ஆயுத உதவியூடாகவும் சிறிலங்கா அரசுகள் தமிழ் மக்களை அழிப்பதற்கு உதவியும் வந்தன.

களமுனைகளில் விடுதலைப் புலிகள் சில பின்னடைவுகளைச் சந்தித்தபோது சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள் என்று இந்த வெளிச்சக்திகள் குரல் கொடுக்கவில்லை. ஒரு போர் நிறுத்த உடன்படிக்கையைச் செய்வதற்கு இவை ஓடோடி வரவில்லை. கண்காணிப்புக்குழுவொன்றை அமைப்பதற்கு யோசனையும் வழங்கவில்லை. மாறாக அப்போதும் தொடர்ந்தும் சிங்கள அரசுகளுக்கு நிதி உதவியையும் ஆயுத உதவியையும் இந்த வெளிச்சக்திகள் கொடுத்து வந்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிறிலங்கா அரசின் பாரிய இராணுவ நடவடிக்கைகளை முறியடித்ததோடு மட்டுமல்லாது தன்னுடைய இராணுவ நடவடிக்கைகள் மூலம் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள் பலவற்றை வென்றெடுத்து நிதர்சனமான அரசாங்கம் ஒன்றையும் சிறப்பாக நிர்வகிக்கத் தொடங்கிய பின்னர்தான் இந்த வெளிச்சக்திகளும் வெளிச்சத்திற்கு வரத்தொடங்கின. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழ் தமிழ் மக்கள் பலமாக இருக்கின்றார்கள் என்பதால் இன்று சமாதானப்பேச்சு வார்த்தைகளும் ஆரம்பமாகின.

இன்று தமிழ் மக்கள் விடுதலை புலிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று சில வெளிச்சக்திகள் கூறுவதோடு அதற்கான காரணங்களையும் தெரிவித்தும் வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறைகளை கைவிட்டு சிறிலங்காவின் ஜனநாயக முறையைக் கைக்கொண்டு அதனனூடாகத் தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். இதனை செய்வதற்கு விடுதலைப் புலிகள் முன்வராத பட்சத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைப் புறக்கணிக்க வேண்டும்- என்று இந்த வெளிச்சக்திகள் இப்போது கூற ஆரம்பித்துள்ளன.

சிறிலங்காவின் அரசுகள் உண்மையான ஜனநாயக நெறியை கடைப்படிககாததன் காரணமாகத்தான் தமிழீழ மக்கள் தம்முடைய போராட்ட வடிவை மாற்றினார்கள். அடிப்படையில் தமிழர்களுடைய போராட்டம் சிறிலங்காவின் அநீதியான ஜனநாயகத்திற்கு எதிராக எழுந்த போராட்டமேயாகும். எந்த அநீதிக்கு எதிராகப் போராட்டம் நடைபெறுகின்றதோ அந்த அநீதியையே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று இந்த வெளிச்சக்திகள் கூறுகின்றன.சிறிலங்காவின் ஜனநாயக மரபுகள் சிங்கள-பெளத்த நலனை மட்டுமே பேணுபவையாகும். சிறிலங்காவின் அரசியல் யாப்பு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரானதாகும். சிறிலங்கா அரசுகளின் அரசியல் நிறைவேற்று திட்டங்கள் தமிழ் மக்களின் தேசிய நலனுக்கு எதிரானவையாகும். FOREMOST CONSTITUTIONAL AUTHORITY ON COMMONWEALTH CONSTITIUTIONS PROFESSOR S.A.D.SMITH என்பவர் சிறிலங்காவின் அரசியல் யாப்பை கடுமையாக கண்டித்துள்ளதோடு மட்டுமல்லாது சிறிலங்காவின் யாப்பு சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாது மிக அண்மையில் சிறிலங்காவிற்கான பிரித்தானிய உதவித் தூதுவர் திரு DOMINIC JOHN CHILCOTT அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், பிரித்தானியா அரசாங்கம் கொடுத்துச் சென்ற அரசியல் யாப்பு இலங்கைத் தமிழ் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் வலிமையற்றது என்று கூறியிருந்தார் அந்த பாதுகாப்பற்ற அரசியல் யாப்பை பி;ன்னர் வந்த சிறிலங்கா அரசுகள் இன்னும் மிக மோசமான விதத்தில் தமிழர்களுக்கு எதிராக மாற்றியமைத்ததைத்தான் போராசிரியர் S.A.D.SMITH கண்டித்திருந்தார்.

இப்படிப்பட்ட ஜனநாயக விரோத வழிமுறையோடு கலந்து தமிழர்களின் உரிமைகளை விடுதலைப் புலிகள் பெறவேண்டும் என்று இந்த உலக நாடுகள் இப்போது உபதேசம் செய்ய ஆரம்பித்துள்ன. இந்த உலக நாடுகளுக்குத் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகள் குறித்து இன்னும் சரியான தெளிவு வரவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. அது மட்டுமல்லாது இன்னுமொரு முக்கிய கேள்வியும் எமக்குள் எழுகின்றது.தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று புதிதாக பரப்புரை செய்ய ஆரம்பித்துள்ள இந்த வெளிச்சக்திகள் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்குப் பெற்றுத் தந்தது என்ன?ஒன்றுமேயில்லை!!

சரி, தங்கள் செல்லப்பிள்ளையான சிறிலங்காவிடமிருந்து தமிழ் மக்களுக்கு எதுவும் பெற்றுக் கொடுக்க முடியாது போயிருந்தாலும் அதற்காக ஏதாவது உருப்படியான முயற்சிகளையாவது இந்த உலக நாடுகள் எடுத்திருக்கின்றவா? கடந்த பெப்ருவரி மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது ராஜபக்சவின் அரசு ஏற்றுக் கொண்டவாறு ஒட்டுக்குழுக்களின் ஆயுதக் களைவுகள் மேற்கொள்ளப்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் சிறிலங்கா அரசால் செம்மையாக கடைப்பிடிக்கப்பட்டதா? இல்லையே!

இது குறித்து சிறிலங்கா அரசு மீது முறையான அழுத்தம் எதையும் இந்த உலக நாடுகள் மேற்கொண்டனவா? இல்லையே!

இன்றைய தினம்வரை இந்த உலக நாடுகள் சிறிலங்கா அரசுகள் மீது எந்தவிதமான உரிய அழுத்தங்களையும் தடைகளையும் விதிக்காமல் இருப்பதன் காரணமாகத்தான் இன்று இலங்கையில் சமாதானம் கிட்டாமல் யுத்தம் தொடர்ந்து நடைபெறுகின்றது.

மக்கள் - சுதந்திரப் போராட்டமானது மிகச் சரியான பாதையில் பயணித்து வெற்றிகளைப்பெற ஆரம்பிக்கின்ற போது அந்தப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக அந்த போராட்டத்தை நடாத்துகின்ற இயக்கத்தையும் தலைமையையும் கொச்சைப்படுத்துவது இந்த உலக நாடுகளின் வழக்கமாகும். மதிப்புக்குரிய நெல்சன் மண்டெலாவையும், அவரது இயக்கத்தையும் பயங்கரவாதிகள் என்று அழைத்ததும் இந்த உலகநாடுகள் தான். மக்களிடமிருந்து நெல்சன் மண்டெலாவின் இயக்கத்தைப் பிரிக்க முனைந்த மேற்குலகம் பின்னர் தோற்றுப் போனது.

இன்று வெளிச்சக்திகள் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பிரிப்பதற்கு வீணான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மக்கள் வேறு, புலிகள் வேறு அல்ல என்பதை இவர்கள் உணர்ந்தும் உணராதது போல் நடந்து வருகின்றார்கள்.

ஆகவே தமிழ் மக்கள்மீது அனுதாபம் காட்டுகின்ற செயலற்ற சொற்களை சொல்லிக் கொண்டு அதேவேளை தமிழ் மக்களுக்கு எதிரான முறையற்ற செயற்பாடுகளையும் இந்த சம்பந்தப்பட்ட உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. சிறிலங்கா அரசு மீதுமட்டுமல்ல இந்த உலக நாடுகள் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு இந்த உலக நாடுகள் உரியவற்றைச் செய்ய முன்வர வேண்டும். இல்லாவிட்டாலும் தமிழீழ போராட்டம் தன் வழி சென்று தன் இலட்சியத்தை அடையும். ஏனென்றால் இது மக்கள் போராட்டம்!. தமிழீழ மக்களின் போராட்டம்!! புலத்தின் பலமும் களத்தில் கைகொடுக்கும்.

நன்றி: தமிழ்நாதம்